திருநெல்வேலி: திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்களை வரவேற்று திமுக சார்பில் பதாகை வைத்திருந்தார். இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பாக இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2020 செப்டம்பர் 12-ம் தேதி தெற்கு வள்ளியூரில் உள்ள தோட்டத்துக்கு சென்றுவிட்டு, முத்துராமன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காரை வழிமறித்த 5 பேர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த முத்துராமன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இது தொடர்பாக பணகுடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தெற்கு வள்ளியூரை சேர்ந்த முத்துராமன் (32), ராம்கி (எ) ராம்குமார் (27), தில்லை (26), குணா (26), தங்கவேல் (50) ஆகியோரை கைது செய்தனர். திருநெல்வேலி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.பத்மநாபன், குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா ரூ.2,500, ஒருவருக்கு ரூ.2,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மு.கருணாநிதி ஆஜரானார்.