• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன? | Attack DMK: TVK Vijay Strongly Come back after Karur Incident

Byadmin

Nov 7, 2025


கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட விடாதது பேசுபொருளாகி இருக்கிறது.

கரூரில் செப்டம்பர் 27-ல் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஒரு மாதத்துக்கும் மேலாக ‘சைலண்ட்’ மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்த விஜய், புதன்கிழமை நடந்த சிறப்பு பொதுக்குழுவில் வெகுண்டெழுந்து பேசியிருக்கிறார்.

தவெகவின் சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக தாக்கியதுடன், முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு சவால்களை விடுத்தார். இந்த பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 10 தீர்மானங்களில் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளது தவெக. இதையெல்லாம் தாண்டி பொதுக்குழுவில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவையும் அதன் தலைவர்களை வகைதொகையில்லாமல் தாக்கிப் பேசினார்.

இருப்பினும் இந்த பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, உள் கட்டமைப்பு, மக்கள் சந்திப்பு உள்ளிட்ட எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. தீர்மானங்களில் வெறுமனே ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர், கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பார்’ என்று மட்டுமே சொல்லப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் மேல்மட்டம் முதல் பூத் கமிட்டிகள் வரை செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்த வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

நடந்து முடிந்த சிறப்பு பொதுக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் விஜய் உள்ளிட்டோரின் பேச்சு ஒரே ஒரு முக்கிய விஷயத்தை முன்வைத்தே அமைந்தது. அது திமுக எதிர்ப்பு. ஏனெனில், பொதுக்குழுவின் தீர்மானங்களில் ஆரம்பித்து, முக்கிய நிர்வாகிகள் பேச்சில் தொடங்கி, விஜய்யின் பேச்சு வரை முழுக்க முழுக்க திமுகவே நிரம்பியிருந்தது.

கரூர் சம்பவத்துக்கு திமுகவே பொறுப்பு என சொல்லும் வகையிலும், தவெகவின் வளர்ச்சிக்கு திமுகவே கடிவாளம் போட்டுள்ளது என குற்றம்சாட்டும் வகையிலுமே பொதுக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் தலைவர்களின் பேச்சுக்கள் அமைந்தன.

இந்த பொதுக்குழுவில் 3 முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்று, மேற்சொன்னது போல திமுக எதிர்ப்பு. இரண்டாவது, அதிமுகவுடனான கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு பதில். ஏனெனில் கரூர் துயரத்தின்போது, விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் முதல் குரலை எழுப்பியது இபிஎஸ்தான். அதுபோல அதிமுக கூட்டங்களில், தவெக கொடிகள் பறக்கவிடப்பட்டதற்கு இபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷனும் கூட்டணி பற்றிய யூகங்களை கிளப்பியது.

மேலும், சில அதிமுக தலைவர்களும் தவெகவுக்கு தொடர்ந்து கூட்டணி அழைப்பு விடுத்தபடியே இருந்தனர். இந்தச் சூழலில்தான், தவெக பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளனர். இதன்மூலமாக அதிமுகவுடன் கூட்டணி குறித்த யூகங்களுக்கு தற்காலிகமாக தடை போட்டுள்ளனர்.

மூன்றாவது விஷயம், விஜய்யின் மாநாடுகள் தொடங்கி எல்லா பிரச்சாரங்கள் எல்லாவற்றிலும் பாசிசம் என பாஜகவையும், பாயாசம் என திமுகவை விமர்சிப்பது வழக்கம். இந்த பொதுக்குழுவில் பாயாசத்தை புரட்டி புரட்டி விமர்சித்த விஜய், தப்பி தவறியும் பாசிசம் பற்றி வாய் திறக்கவில்லை.

பொதுக்குழுவின் 12 தீர்மானங்களில், 10 தீர்மானங்களில் திமுகவை விமர்சித்த தவெக, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாஜகவை கண்டித்துள்ளது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த தீர்மானத்தில் தேர்தல் ஆணையத்தை குறை சொல்லியுள்ளார்களே தவிர, ஒரு இடத்திலும் மத்திய அரசு மீதும், பாஜக மீதும் விமர்சனம் வைக்கவில்லை. அதேபோல மீனவர்கள் கைதுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த தீர்மானத்தில் மட்டும் பாஜக அரசு ஓரவஞ்சனை செய்கிறது என ஒரு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் திமுகவை கடுமையாக எதிர்த்துள்ள தவெக, பாஜக மீதான விமர்சனங்களின் நெடியை குறைத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகளின் விசாரணை தினம் தினம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இப்போது பேச்சுக்கு விஜய் தலைமையில்தான் கூட்டணி என்று சொன்னாலும், பாஜக மீதான ‘சாஃப்ட் கார்னர்’ தேர்தல் நேரத்தில் அதிமுக -பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போடுமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.



By admin