காரைக்குடி: திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக மக்கள் 2026 தேர்தலில் முற்போக்காக, சீர்தூக்கி பார்த்து வாக்களிப்பர். முஸ்லிம்கள் மீது சகோதரத்துவத்தோடு இருப்பது விசிக. சங்கிகள் என்றால் ஆர்எஸ்எஸ் சங்கம் என்பது பொருள். ஆனால் சங்கிகள் என்றால் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. ஆர்எஸ்எஸ் மீது மட்டும் ஏன் விமர்சனம் எழுதுகிறது என்றால், அது சகோதரத்துவத்தை ஏற்க மறுக்கிறது. தொடுவதையே ஒரு பாவச்செயலாக நினைக்கிறது” என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் (எஸ்ஐஆர்) திருத்தம் கூடாது என்பது தான் திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு. இதில், உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று எஸ்ஐஆர்-யை தடுக்கக வேண்டும். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது தமிழகத்தில் அமல்படுத்துவது ஏற்புடையதல்ல.
திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது. எங்களை குறி வைத்தே அரசியல் செய்கின்றனர். எப்படியாவது திமுக, விசிக இடையே விரிசலை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். அவர்கள் அதில் ஏமாந்து தான் போவர். இன்னும் பாஜக கூட்டணி அமைக்கவில்லை. அதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி நீடிக்குமா? என்பது கேள்விக்குறி. திமுகவுக்கு தவெக உள்ளிட்ட கட்சிகளால் ஏந்த பாதிப்பும் இருக்காது.
விஜய் எதிர்கால அரசியலை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். விஜய் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துவாரா? என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியவரும். விஜய் காணாமல் போவது குறித்து மக்கள் தான் முடிவு செய்வர். பல விமர்சனங்களுக்கு இடையே புதிய கல்விக் கொள்கையை கேரளா அரசு ஏற்றது அதிர்ச்சி அளிக்கிறது. கல்விக் கொள்கையிலும் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.