சேலம்: “2026-ம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்,” என்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “இந்த பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2026-ம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்.
விவசாயிகளின் துன்பத்தை அறிந்தவன் என்பதால் அதை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய ஏராளமான திட்டங்களை தந்தோம். அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மத்திய அரசின் க்ரிஷ் கர்மான் விருதை பெற்றோம். கவர்ச்சிகரமான வாக்குறுதி கொடுத்து, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களது குடும்பத்தினருக்கு தான் நன்மை கிடைத்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் திறக்காத திமுக அரசு என இன்றைய தினம் நான் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்துக்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் கலப்பின பசுக்கள் உருவாக்கும்போது அது அதிகப்படியான பால் கொடுக்கும். அதிக எடை கொண்ட கலப்பின ஆடுகள், கோழிகள், பன்றிகள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கும் போது விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். கிராம பொருளாதாரம் மேம்படைந்தால், நகரம் மேம்படையும். நகரத்துக்கும் கிராமத்துக்கும் பாலமாக இருந்தது அதிமுக அரசு.
24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். அதை திமுக அரசு முடக்கிவிட்டது. குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கினோம். அதன் மூலம் விளைச்சல் அதிகரித்தது. எங்கெங்கு தடுப்பணை தேவையோ அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டிக் கொடுத்து தண்ணீரை சேமித்தோம்.
கிராமத்தில் அதிகப்படியான அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக 7.5% உள்ள இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் காரணமாக 3,160 பேர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் தான் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விலை இல்லாமல் வழங்கினோம். அனைத்தையும் முடக்கியது திமுக அரசு.
இப்போதுள்ள மகிழ்ச்சியோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை மகிழ்ச்சியோடு அமர்த்த வேண்டும். அதற்காக விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்,” என்று அவர் பேசினார்