• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

திமுக Vs அதிமுக: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பும், எதிர்வினை அரசியலும் | DMK Vs AIADMK: Sensational verdict and reactionary politics in the Pollachi sexual harassment case

Byadmin

May 13, 2025


சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து திமுக, அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளன.

9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். | விரிவாக வாசிக்க > பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

முதல்வர் ஸ்டாலின் கருத்து: தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

சிபிஐ விசாரணை உத்தரவால் உரிய நீதி – அதிமுக: அதிமுகவின் அதிகாரபூர்வமான எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் இல்லையா?

அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எஃப்ஐஆரை லீக் செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு? எஃப்ஐஆர் அடிப்படையில் யார் அந்த சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழு மூச்சாக இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே, ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது? நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு? தெளிவாக சொல்கிறோம், எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு, இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு

“ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல,அனுதாபி மட்டுமே” என்று முதல்வர் ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை. உங்களை போன்று எந்த சாரையும் காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை. திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும். 2026-ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார்? என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும், இது உறுதி” என்று கூறப்பட்டிருந்தது.

அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும் – கனிமொழி: தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, “அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக போராட்டங்களை நடத்தியது. அப்போது, ‘இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் அதிமுக ஆட்சிக்கு நெருக்கமானவர்களாக, பதவியில் இருப்பவர்களாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும்’ என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அவர் முதல்வரானதும், அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – ஆர்.எஸ்.பாரதி: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்குத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது. முக்கியமான வழக்கில் கருத்து சொல்ல முயலும் போது நிர்வாகிகள் யாருடைய பெயரையும் பயன்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக ‘அதிமுக அறிக்கை’ என வெளியிட்டிருக்கிறார்கள்.

பிறகு என்ன நினைத்தார்களோ, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்ததுமே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு மூடி மறைக்க முயன்றது. திமுக உள்ளிட்ட கட்சிகள், மகளிர் அமைப்புகள், மாணவர்கள் எனத் தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்த நிலையிலும் பழனிசாமி அரசு வழக்கை சிபிஐ-க்கு மாற்றவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சி இரண்டு நாள் கழித்து அதாவது மார்ச் 12-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு பழனிசாமி அரசு பரிந்துரைத்தது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க 14-ம் தேதி அரசாணை வெளியிட்டார்கள்.

அதன்படி சிபிஐ-க்கு மாற்றினார்கள் என்றால் இல்லை. வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2019 மார்ச் 29-ம் தேதி கேள்வி எழுப்பியது. உடனே தமிழக அரசு வழக்கறிஞர் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது எனச் சமாளித்தார்.

‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் 2019 அக்டோபர் 16-ம் தேதி அறிவித்தது. இதனால்தான் வழக்கு நியாயமாக நடந்து முடிந்து, இன்றைக்குக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது. அந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதால் அதன் கறை தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சிபிஐ என்ற கேடயத்தைத் தூக்கிக் கொண்டு புனிதர் வேடம் தரிக்க முயல்கிறது அதிமுக.

“சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்” எனப் பெருமை அடிக்கும் அதிமுக அன்றைக்கு சிபிஐ எனச் சொல்லி எப்படியெல்லாம் நாடகம் ஆடியது என்பதை மக்கள் அறிவார்கள். புகார் அளித்த மாணவியின் சகோதரர் பூபாலனை குற்றவாளிகள் தரப்பு தாக்கியது. வழக்கை திரும்பப்பெற சொல்லி மிரட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை எல்லாம் போட்டு அரசாணை வெளியிட்டார்கள். இவையெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பை அச்சுறுத்த அன்றைக்கு இருந்த பழனிசாமி அரசு மேற்கொண்ட அஸ்திரங்கள்.

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ‘வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் குறிப்பிடாத புதிய அரசாணையை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டப் பெண்ணின் பெயரைச் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பயன்படுத்திய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரைப் பயன்படுத்தியதால் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி உத்தரவிட்டது.

இதெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனிசாமி ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்கள். அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.



By admin