0
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இரண்டாவது வோர்ன் – முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தொடரை 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாகக் கைப்பற்றியது.
இதன் மூலம் இலங்கையில் 2013க்குப் பின்னர் அவுஸ்திரேலியா முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் முழுமையான வெற்றியை ஈட்டியுள்ளது.
இந்தப் போட்டியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 -25 சுழற்சிக்கான டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, அதே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியீட்டியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.
தனது இன்னிங்ஸை 48 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் இப் போட்டியில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
குசல் மெண்டிஸின் பிடியை எடுத்த ஸ்டீவன் ஸ்மித், 200 டெஸ்ட் பிடிகளை எடுத்த முதலாவது அவுஸ்திரேலிய வீரரானார்.
நேற்றைய தினம் ஏஞ்சலோ மெத்யூஸ் 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.
பந்துவீச்சில் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் போ வெப்ஸ்டர் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
75 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இப் போட்டி முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதி அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 67.54% புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆபிரிக்கா 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 38.46% புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திமுத் விடைபெற்றார்
இது இவ்வாறிருக்க, திமுத் கருணாரட்ன தனது கடைசி இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது அவரை கௌரவிக்கும் வகையில் தனஞ்சய டி சில்வா தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.
போட்டி முடிவில் தனது பிரியாவிடை உரையை உணர்ச்சிபூர்வமாக ஆற்றிய திமுத் கருணாரட்ன,
‘நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, 100 டெஸ்ட்களைப் பூர்த்தி செய்யவேண்டும், 10,000 ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்து. அதில் ஒரு பகுதியை (100 டெஸ்ட்கள்) நிறைவெற்றிவிட்டேன். ஆனால் மற்றைய பகுதியை (10,000 ஓட்டங்கள்) நிறைவு செய்யாதது மனதுக்கு சங்கடத்தைக் கொடுக்கிறது. மேலும் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவதை நான் தவறவிட்டேன். இனியும் தவறவிடமாட்டேன்’
திமுத் கருணாரட்ன,
‘இது ஒரு நீண்ட கிரிக்கெட் பயணம். நான் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் அரங்கில் அதிக நேரத்தை செலவிட்டேன். ஆகையால் அவர்களிடம் இருந்து (கிரிக்கெட் அரங்கிலிருந்து) பிரிவதால் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். ஆனால் நான் எங்கு சென்றாலும், எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்;. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ எனவும் திமுத் கருணாரட்ன கூறினார்.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 257 (குசல் மெண்டிஸ் 85 ஆ.இ., தினேஷ் சந்திமால் 74, திமுத் கரணாரட்ன 36, ரமேஷ் மெண்டிஸ் 28, மிச்செல் ஸ்டார்க் 27 – 3 விக்., மெத்யூ குனேமான் 63 – 3 விக்., நேதன் லயன் 96 – 3 விக்.),
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 414 (அலெக்ஸ் கேரி 156, ஸ்டீவன் ஸ்மித் 131, உஸ்மான் கவாஜா 36, போ வெப்ஸ்டர் 31, ப்ரபாத் ஜயசூரிய 151 – 5 விக்., நிஷான் பீரிஸ் 94 – 3 விக்., ரமேஷ் மெண்டிஸ் 81 – 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (ஏஞ்சலோ மெத்யூஸ் 76, குசல் மெண்டிஸ் 50, தனஞ்சய டி சில்வா 23, மெத்யூ குனேமான் 63 – 4 விக்., நேதன் லயன் 84 – 4 விக்., போ வெப்ஸ்டர் 6 – 2 விக்.)
அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 75 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 75 – 1 விக். (உஸ்மான் கவாஜா 27 ஆ.இ., மானுஸ் லபுஷேன் 26 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 20, ப்ரபாத் ஜயசூரிய 20 – 1 விக்.)
ஆட்டநாயகன்: அலெக்ஸ் கேரி, தொடர்நாயகன்: ஸ்டீவன் ஸ்மித்.