பட மூலாதாரம், AFP via Getty Images
குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் இந்திய முப்படைகள் இணைந்து ‘திரிசூல்’ என்ற பெயரில் ஒரு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போர்ப் பயிற்சி, பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லைப் பகுதிகள், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும் இடையேயான சர் க்ரீக் (Sir Creek) பகுதி முதல் அரபிக்கடல் பகுதி வரையான நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் போர்ப் பயிற்சியை, ‘ஆபரேஷன் சிந்தூர்’க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போர்ப் பயிற்சி என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், பாகிஸ்தானிய கடற்படையும் வட அரபிக்கடலில் நவம்பர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கடற்படைப் போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இது நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.
ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் போர்ப் பயிற்சி
பட மூலாதாரம், Getty Images
“இந்தியா தனது முப்படைகளின் தற்போதைய ராணுவப் பயிற்சிக்காக வான்வெளியை ஒதுக்கிய அதே பகுதியில் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்துவதற்கான எச்சரிக்கையை (naval navigational warning) பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது,” என போர்ப் பயிற்சி மற்றும் ஏவுகணைச் சோதனைகளைக் கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் டேமியன் சைமன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்தியா தனது படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக இரண்டு வாரங்களுக்கு வான்வெளியை ஒதுக்கியுள்ள அதே பகுதி தான் இது.
இந்த இரு நாடுகளின் போர்ப் பயிற்சிகளின் புவியியல் பகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டிருப்பது பற்றி குறிப்பிடுகையில், “பயிற்சியின் புவியியல் பகுதி ஒருவருக்கொருவர் பயிற்சிப் பகுதிக்குள் வந்தாலும், இரு தரப்புக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இருந்தால், விஷயங்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நேர்த்தியாக நடப்பதை உறுதி செய்யும்.” என்றார் சைம்ன்.
பாகிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் ரியாஸ் சுஹைலின் கூற்றுப்படி, பாகிஸ்தானிய கடற்படை அரபிக்கடலில் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இது கராச்சியில் தொடங்கியுள்ள பாகிஸ்தான் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் மாநாட்டின் ஒரு பகுதியாகும்.
இந்தக் கண்காட்சியில் 44 நாடுகளைச் சேர்ந்த 133 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாகப் பாகிஸ்தானிய கடற்படை கூறுகிறது.
இந்தப் பிராந்தியத்தின் அருகில் உள்ள நாடுகளுக்குப் பயிற்சியைப் பற்றி விமானப் போக்குவரத்து எச்சரிக்கை கொடுப்பது சர்வதேச சட்டமாகும் என்றும், இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஒரு மூத்த கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த வாரம் பாகிஸ்தானிய கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், க்ரீக் (Creek) பகுதியின் எல்லைப் புறச் சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
பாகிஸ்தானிய கடற்படையின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, அட்மிரல் நவீத் அஷ்ரஃப், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர்த் திறன்களை மதிப்பாய்வு செய்வதற்காக இந்தப் பகுதிக்குப் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானிய கடற்படை தனது படையில் மூன்று நவீன 2400 டிடி ஹோவர்கிராஃப்டுகளை (தரையில் மற்றும் தண்ணீரில் பயணிக்கக்கூடிய வாகனங்கள்) இணைத்தது.
நவம்பர் 2 முதல் 5 வரை நடக்கவுள்ள கடற்படைப் பயிற்சிக்காக பாகிஸ்தான் சனிக்கிழமை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், “இந்த ஒத்திகையில் போர்க் கப்பல்கள் வானில் மற்றும் கடலுக்கு அடியில் சுமார் 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடும். பயிற்சியின் போது இந்தப் பகுதி ஒருங்கிணைந்த கண்காணிப்பில் இருக்கும். கப்பல்கள் பயிற்சிப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றன.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், இந்தியாவும் தனது மேற்கு எல்லைகளில் ‘திரிசூல்’ என்ற ராணுவப் பயிற்சியை நடத்துகிறது. இதில் இந்தியாவின் குஜராத்தை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து பிரிக்கும் சர் க்ரீக் பகுதியும் அடங்கும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சர் க்ரீக் சர்ச்சை
பட மூலாதாரம், Getty Images
சர் க்ரீக் பகுதி என்பது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும் இடையில் அமைந்துள்ள 96 கிலோமீட்டர் நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி ஆகும். இரு நாடுகளும் இந்தப் பகுதி தங்களுக்கே உரியது என்று உரிமை கோருகின்றன.
கடந்த மாதம், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர் க்ரீக் அருகே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான், ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
“சர் க்ரீக் பகுதியில் எல்லைப் பிரச்னை தூண்டிவிடப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் நோக்கத்திலேயே தவறு உள்ளது, அதன் நோக்கம் தெளிவாக இல்லை. பாகிஸ்தானிய ராணுவம் சர் க்ரீக்குடன் ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவக் கட்டமைப்பை விரிவுபடுத்திய விதம், அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.” என ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தப் பகுதியில் பாகிஸ்தான் எந்தவித அத்துமீறலுக்கும் முயன்றால், வரலாறும் வரைபடமும் மாறும் வகையில் திட்டவட்டமான பதில் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
அவரது கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சர் க்ரீக் மற்றும் அரபிக்கடலில் இந்தியப் படைகளின் தற்போதைய ராணுவப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
“சர் க்ரீக் அமைந்துள்ள குஜராத்தின் கட்ச் பகுதியிலும் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 96 கிலோமீட்டர் நீளமுள்ள க்ரீக் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் பயிற்சி அந்தப் பகுதியின் எல்லைப்புற பகுதிகளிலும் கவனம் செலுத்துகிறது.” என பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்
இந்தியக் கடற்படை இங்கு விமானப்படை மற்றும் தரைப்படையுடன் இணைந்து பெரிய அளவில் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ பிறகு முப்படைகளின் போர்ப் பயிற்சி
பட மூலாதாரம், Getty Images
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, தனது ராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது என்று பாகிஸ்தானுக்குக் காட்ட இந்தியா முயற்சிப்பதாக பல ஆய்வாளர்களும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் நம்புகிறார்கள்.
மோதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், இந்தப் பயிற்சி ஒரு செய்தியைக் கொடுக்க நிச்சயமாக முயற்சி செய்கிறது.
இந்தியக் கடற்படை செயல்பாடுகளின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கடந்த வெள்ளிக்கிழமை, ”தெற்கு ராணுவ படை, மேற்கு கடற்படை மற்றும் தென்மேற்கு வான்படை ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.” என்று கூறினார்.
இதில் 20 முதல் 25 போர்க் கப்பல்கள், 40 போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்கள் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
“இந்தப் போர்ப் பயிற்சி மிக பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 20,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்,” என ராகுல் பேடி கூறுகிறார்.
இந்தப் பயிற்சியில் தரைப்படை மட்டுமல்லாமல், விமானப் படையின் ரஃபேல், சுகோய் 30 போன்ற மேம்பட்ட விமானங்கள், நவீன போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்கின்றன.
“இந்தப் பயிற்சியில் இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலாவதாக, தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையின் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை அதிகரிப்பது மற்றும் இரண்டாவதாக, ராணுவத்தின் ஒரு ஒருங்கிணைந்த வலையமைப்பை உருவாக்குவது.” என்கிறார் ராகுல் பேடி.
பட மூலாதாரம், Getty Images
‘இது ஒரு வழக்கமான போர் பயிற்சி மட்டுமே’
பாதுகாப்பு விவகாரங்களை வெளியிட்டு வரும் ‘ஃபோர்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, ‘திரிசூல்’ என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு போர்ப் பயிற்சி என்றும், இது இந்தியாவில் பரவலாக விளம்பரப்படுத்துவதாகவும் கருதுகிறார்.
“இந்த ராணுவப் பயிற்சிக்கும் சர் க்ரீக் சர்ச்சைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தியா ஒரு மிக சக்திவாய்ந்த நாடு என்பதைக் காட்ட மோதி அரசு விரும்புகிறது. இந்தப் பயிற்சி இங்குப் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாகிஸ்தானும் இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “ஆனால் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த முழுப் பிராந்தியத்திலும் இரானும் ஒரு சக்திவாய்ந்த நாடு, பாகிஸ்தானும் சக்திவாய்ந்த நாடு.”
“சீனா ஜிபூட்டியில் (கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு) தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. இப்போது ரஷ்யாவும் மடகாஸ்கரில் (ஆப்பிரிக்காவின் கிழக்கில் உள்ள ஒரு தீவு நாடு) தனது தளத்தை அமைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இந்தப் பகுதியில் எதை செய்தாலும், அது போருக்கு வழிவகுக்கும்.” என்றார் அவர்.
“மோதி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 2016, 2019 மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் கீழ் இதுவரை நடந்த சண்டைகள் அல்லது மோதல்கள் அனைத்தும் காஷ்மீரை மையமாகக் கொண்டவை. ஆனால் நீங்கள் சர்வதேச கடலில் எதையாவது செய்தால், அதன் பொருள் நாலா பக்கமும் போர் என்பதுதான்.” என அவர் கூறுகிறார்.
“இந்தியா இப்போதைக்கு இந்த நிலைமைக்குத் தயாராக இல்லை. அதற்கு நிறையத் தயாரிப்புகள் தேவை. பாகிஸ்தான் இந்தப் பகுதியில் தனியாக இல்லை.”
இது ஒரு வழக்கமான பயிற்சி மட்டுமே என்று அவர் கூறுகிறார்.

பயிற்சியின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத்தின் தென்மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங், “நீங்கள் பார்க்கும் இந்தப் போர்ப் பயிற்சி, ‘புதிய இயல்புநிலையின்’ கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இயல்புநிலையில், நம் நாட்டின் மீது எப்போதாவது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அது போர் நடவடிக்கையாகக் கருதப்படும்.”
“அதாவது, நாம் எப்போதும் சண்டைக்குத் தயாராக இருக்க வேண்டும் மற்றும் திறம்படப் பதிலளிக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். இதன் கீழ் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் வந்துள்ளன. புதிய திறன்கள் கொண்ட பல புதிய ஆயுதங்கள் வந்துள்ளன, அவற்றை நமது படையில் சேர்த்துள்ளோம். மூன்று படைகளும் ஒன்றாகச் சேர்ந்து எதிரியைத் தாக்க வேண்டும், அதை நீங்கள் இந்தப் பயிற்சியில் காண்பீர்கள்.”
இதற்கிடையில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் (சீனா, மியான்மர், பூடான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதி) பெரிய அளவிலான வான் பயிற்சிக்காக ஒரு ‘விமானிகளுக்கான அறிவிப்பு’ (NOTAM – Notice to Airmen) எச்சரிக்கையையும் இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு