திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடரத் தொடங்கினர். காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்கிறது. காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிரச்சார இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவர் நிகழ்விடத்துக்குச் செல்லவே இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை.. தவெக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு சென்றுவிட வேண்டும். ஆனால், ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை. விஜய்யின் வாகனத்துடன் மொத்தம் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் வாகனம் கிட்டத்தட்ட ரோடு ஷோ போலவே ஊர்ந்து வருகிறது.
சுற்றுப்பயணத்துக்கான இலச்சினையை தவெக நேற்று வெளியிட்டது. மேலும், அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவியும் தொண்டர்கள்.. தவெக தொண்டர்கள் பெருமளவில் திருச்சியில் திரண்டுள்ளனர். நேரம் செல்லச் செல்ல இந்தக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏற்கெனவே, விக்கிரவாண்டி, மதுரை என இரண்டு மாநில மாநாட்டை விஜய் பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், அவருடைய இன்றைய சுற்றுப்பயணத்தில் இளைஞர்கள், பெண்கள் அதிகம் கூடியுள்ளனர். விஜய்யின் இன்றைய பயணத்தை தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் அனைத்துமே கவனத்தில் கொள்ளும் அளவுக்கு அவருக்கான ஆதரவு பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது.