• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

திருச்செந்தூர் கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற அமர்வு | Madurai High Court bench enquiry about Tiruchendur temple case

Byadmin

Oct 14, 2025


மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் 5 உறுப்பினர்களைக் கொண்ட அரங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த ஐந்து நபர்களில் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழு இல்லை. ஆகவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி அறங்காவலர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். அறநிலையத்துறை தரப்பில், “கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டுவிட்டார். கோயில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்றதால் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “அறங்காவலர் குழு தலைவர் நியமனம் செய்து ஓராண்டு முடிவடைந்துவிட்டது. ஆனால் குழு உறுப்பினர்களை ஏன் நியமனம் செய்யவில்லை? இது விதிகளுக்கு முரணானது. ஏன் உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை? அதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மைச் செயலர் 4 மாதத்திற்குள் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றமே அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டி வரும் எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



By admin