பட மூலாதாரம், UGC
திருநெல்வேலியில் உள்ள கான்மியா (Kanmiya) பள்ளிவாசல் நிர்வாகம் 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்து என முன்வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துள்ளது.
1712-ஆம் ஆண்டு மதுரை சமஸ்தானத்தை ஆண்ட நாயக்க மன்னர் அளித்த செப்பு பட்டயத்தின் அடிப்படையில், ‘2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. நெல்லை வக்ஃப் வாரிய நிலத்தில் என்ன பிரச்னை? தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது ஏன்?
திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரியில் கான்மியா பள்ளிவாசல் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக 1,100 ஏக்கர் வக்ஃப் நிலம் உள்ளதாக உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டது.
‘இந்த நிலங்கள் அனைத்தும் பள்ளிவாசலுக்கு சொந்தம்’ என, 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வக்ஃப் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மனுத்தாக்கல் செய்தது.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜரானார். அவர் வாதிடும்போது, “2011-ஆம் ஆண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தால் பட்டியலிடப்பட்ட அனைத்து சர்வே எண்களும் 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்ட விதிகளின்கீழ் அறிவிக்கப்பட்டவை” என வாதிட்டார்.
இதன்மூலம் வக்ஃப் வாரியத்துக்கான உரிமை விலக்கப்பட்டதாக வாதிட்ட வீரா கதிரவன், “இவற்றில் பல நிலங்கள், நிலமற்ற ஏழைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
இந்த நிலங்களில் 362 ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டாக்கள் மூலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், பள்ளிவாசல் தரப்பு செப்புப் பட்டயத்தை ஆதாரமாகக் காண்பித்து நிலத்துக்கு உரிமை கோருவதாக வாதிட்ட வீரா கதிரவன், “இது செப்பு பட்டயத்தின் உண்மையான பிரதி இல்லை” எனவும் வாதிட்டார்.
வழக்கில் வக்ஃப் வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, “மதுரை சமஸ்தானத்தை ஆண்ட ஆட்சியாளரால் 1712-ஆம் ஆண்டு தர்ம காரியங்களுக்காக பள்ளிவாசலுக்கு நிலம் வழங்கப்பட்டது. வக்ஃப் நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றம் செய்ய முடியாது” எனக் கூறினார்.
பட மூலாதாரம், UGC
‘சிக்கலான வரலாற்றைக் கொண்ட வழக்கு’
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.தண்டபாணி, உரிமையியல் நீதிமன்றம், மேல்முறையீடு அலுவலர், வக்ஃப் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வழக்கு வந்துள்ளதாகக் கூறி, “இந்த வழக்கு, சில நூற்றாண்டுகள் நீடித்த சிக்கலான வரலாற்றைக் கொண்டது” எனக் குறிப்பிட்டார்.
வழக்கின் பிரச்னை செப்புப் பட்டயத்தை மையமிட்டு உள்ளதாகக் கூறிய நீதிபதி, “1712 ஆம் ஆண்டில் மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயத்தில் உள்ள தெலுங்கு கல்வெட்டை 1925-ஆம் ஆண்டில் படியெடுத்துள்ளனர். இதனால் மானியம் வழங்கப்பட்டதா என சந்தேகம் கொள்ள முடியாது” எனத் தீர்ப்பில் தெரிவித்தார்.
அதேநேரம், ‘கி.பி 1712 ஆம் ஆண்டில் பள்ளிவாசலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சொத்து, வக்ஃபுக்கு சொந்தமானதாக வக்ஃப் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4ன்படி வழங்கப்பட்டது. இதைப் பற்றி 13.5.1959 அன்று அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது’ என்று பள்ளிவாசல் தரப்பில் வாதிடப்பட்டது.
செப்புப் பட்டயத்தில், ‘மசூதி தர்மத்துக்கான சர்வ மானியம் (Sarva Manyam for Masjid Dharmam) எனக் குறிப்பிட்டு, ‘சூரியன், சந்திரன் இருக்கும் வரை மகனிடமிருந்து பேரனுக்கு தொடரும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இது 1865 மற்றும் 1866 ஆம் ஆண்டு இனாம் காட்சிப் பதிவேட்டிலும் (Inam fair register) பதிவாகியுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கூகுள் மூலம் மதிப்பீடு’
மதுரை சமஸ்தானம் வழங்கிய மானியம் மீது பள்ளிவாசலுக்கு உரிமை உள்ளதாக 1955 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. “ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை” என நீதிபதி தண்டபாணி குறிப்பிட்டார்.
செப்புத் தகடு மூலம் மானியமாக வழங்கப்பட்ட 75 கோட்டா நிலத்தின் பரப்பளவு என்ன என்பதைக் கண்டறிவதற்கு கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தியதாக தீர்ப்பில் நீதிபதி எம்.தண்டபாணி தெரிவித்துள்ளார்.
நிலத்தை அளப்பதற்கான கோட்டா மற்றும் கதா (Kottah and Katha) ஆகியவை பயன்படுத்தப்படும் விதம் குறித்து கூறியுள்ள நீதிபதி, தமிழ்நாட்டில் ஓர் ஏக்கர் கோட்டாவின் பரப்பளவு என்பது 0.03124 ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 75 கோட்டா என்பது 2.3430 ஏக்கர் (அதாவது 2 ஏக்கர் 34 சென்ட் மற்றும் முப்பது சதுர அடி) என மதிப்பிடுகிறது.
‘அந்தவகையில் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலம் என்பது 75 கோட்டாக்கள் மட்டுமே என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை’ எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
“ஆகவே, 2.34 ஏக்கர் நிலத்தையும் அதன் எல்லைகளின் அடிப்படையில் வக்ஃப் வாரிய நிர்வாகம் அடையாளம் காண வேண்டும்” எனத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்தியாவில் சர்வே மற்றும் எல்லைகள் சட்டம் என்பது 1923 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தாலும், 1100 ஏக்கர் நிலத்தின் சர்வே எண்கள் மீது உரிமை கோருவதற்கான காரணத்தை பள்ளிவாசல் நிர்வாகம் விளக்கத் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், காயல் மகபூப்
நீதிமன்றத்தின் உத்தரவு, இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.
“நெல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தமிழ்நாடு அரசு தான் காரணம்” எனக் கூறுகிறார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் காயல் மகபூப். இவர் அனைத்து ஜமாத்துகளையும் ஒருங்கிணைக்கும் மஹல்லா ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் இருக்கிறார்.
கான்மியா பள்ளிவாசலின் பின்னணியை விவரித்த காயல் மகபூப், “16 ஆம் நூற்றாண்டில் ஷேக் காதர் பாஷா என்ற துருக்கியர், நாயக்க மன்னரின் குதிரைப் படையில் தளபதியாக இருந்தார். திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியில் மன்னரின் உத்தரவில் ஓடை வெட்டும்போது ஒரு பிரேதம் புத்தம் புதிதாக தென்பட்டதாக பள்ளிவாசல் வரலாறு கூறுகிறது” என்கிறார்.
“அது ஷா அலி முக்தா என்ற மகான் எனத் தெரிந்து அங்கு அவருக்கு தர்காவை எழுப்பி அதனைப் பராமரிக்க ஐந்து கிராமங்களில் உள்ள சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நிலங்களை மன்னர் தானமாக அளித்ததாக தர்காவின் வரலாறு குறிப்பிடுகிறது” எனக் கூறுகிறார், காயல் மகபூப்.
“நாயக்க மன்னரின் கட்டளைப்படி ராணி மங்கம்மாளுக்கு ஆதரவாக போரிடச் சென்றபோது திருச்சியில் கான்மியான் மரணம் அடைந்தார். அவரது தர்கா திருச்சி பாலக்கரையில் உள்ளது. நெல்லை கண்டியப்பேரியில் ஷா அலி முக்தா மற்றும் கான்மியான் பள்ளிவாசல் உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிவாசலுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் பெருமளவு ஆக்கிரமிப்பு காரணமாக பறிபோனதாகவும் காயல் மகபூப் குறிப்பிடுகிறார்.
‘மூன்று உரிமைப் பத்திரம்’
தமிழ்நாட்டில் 1958 ஆம் ஆண்டு வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டதாகக் கூறும் காயல் மகபூப், “ஆனால், 1862 ஆம் ஆண்டில் கான்மியா பள்ளிவாசலுக்கான நிலம் அளக்கப்பட்டு உரிமைப் பத்திரம் (Title Deed) உருவாக்கப்பட்டது. அந்தவகையில், கான்மியா நிலங்களுக்கு மட்டும் மூன்று பத்திரம் உருவாக்கப்பட்டது” என்கிறார்.
நெல்லை நகரத்தில் உள்ள கண்டியப்பேரியில் இருந்து ராதாபுரத்தில் உள்ள உருமன்குளம் வரையில் கான்மியா பள்ளிவாசலுக்கான நிலம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை வக்ஃப் சட்ட விதிகளின்படி எதிரானதாக பார்ப்பதாகக் கூறுகிறார், நெல்லையைச் சேர்ந்த ஜபருல்லா கான். இவர் கான்மியா பள்ளிவாசலுக்கு அருகில் வசித்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜபருல்லா கான், “தர்காவுக்கு நாயக்க மன்னர் (அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்) காலத்தில் பட்டயம் மூலம் தானமாக கொடுக்கப்பட்ட சொத்து, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.” என்கிறார்.
“நீதிமன்றம் கூறுவதுபோல வெறும் 2.34 ஏக்கர் நிலம் மட்டும் பராமரிக்கப்படவில்லை” எனக் கூறும் ஜபருல்லா கான், “நிலங்கள் அனைத்தும் மசூதியின் சொத்து என ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலும் வரையறுக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
‘யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’
பட மூலாதாரம், UGC
“நிலத்தின் மூலம் பள்ளிவாசலுக்கு வருமானத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பணிகள் நடந்துள்ளன. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. 1956 ஆம் ஆண்டில் வக்ஃப் சொத்துகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது” எனக்கூறும் ஜபருல்லா கான், “தொடர்ந்து, கான்மியா நிலம் தொடர்பான விவரங்கள் கெஜட்டில் வெளியிடப்பட்டன” என்கிறார்.
“வக்ஃப் சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் தனி நபர்களின் சொத்துகள் இருந்தால் அதற்கு ஓராண்டுக்குள் ஆட்சேபனை தெரிவித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வருவதாகக் கூறும் ஜபருல்லா கான், “சுமார் 800 ஏக்கர் நிலங்களுக்கு அதைப் பயன்படுத்தும் மக்கள், நீண்டகாலமாக தரை வாடகை கொடுத்து வருகின்றனர். அரசாங்க இடமாக இருந்திருந்தால் எதற்காக வாடகை தர வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
2004 முதல் 2013 வரை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் பள்ளிவாசல் இருந்துள்ளது.
“அதன்பிறகு மிசிர்கான் பாணி (Misir Khan Pani) என்பவரின் வாரிசுகள் பள்ளிவாசலின் பொறுப்புக்கு வந்தனர். வக்ஃபுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதற்கு எதிராக வலுவான வாதத்தை பள்ளிவாசல் முன்வைத்திருக்கலாம்” எனக் கூறுகிறார்.
“பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஆதாரங்கள் இருந்தும் மாவட்ட நிர்வாகம் மேல்முறையீட்டுக்குச் சென்றது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறும் ஜபருல்லா கான், ” தர்ம காரியங்களுக்காக அளிக்கப்பட்ட சொத்து. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது” என்கிறார்.
“கான்மியா பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகளில் சில தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன. வக்ஃப் நிலமாக இருந்தால் விற்க முடியாது. ஆகவே, வக்ஃப் நிலம் அல்ல என்பதை நிறுவப் பார்க்கின்றனர். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே பார்க்கிறோம்” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், நவாஸ்கனி
‘சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ – நவாஸ்கனி எம்.பி
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் நவாஸ்கனி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது அரசின் சொத்து அல்ல. எங்களின் பதிவேடுகளிலும் இவை ஆவணமாக உள்ளன” என்கிறார்.
“மாவட்ட நிர்வாகத்துக்கும் வக்ஃப் வாரியத்துக்கும் இடையே வழக்கு நடந்து வந்தது. இவற்றில் சில நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் சிலவகையான நிலங்கள் காலியாகவும் உள்ளன. தீர்ப்பு குறித்து சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து வருகிறோம்,” எனவும் நவாஸ்கனி தெரிவித்தார்.
‘தனிப்பட்ட விவகாரம் அல்ல’ – மாவட்ட ஆட்சியர்
பட மூலாதாரம், Tirunelveli Collectorate
வக்ஃப் நிலம் தொடர்பான சர்ச்சை குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“வழக்கைப் பொறுத்தவரை நிலத்தின் பதிவேட்டில் எதாவது தவறு நடந்திருந்தால் அவை சரிசெய்யப்பட வேண்டும். தவறுதலாக பதிவேட்டில் உள்ளதைக் கண்டறிவதை பள்ளிவாசலுக்கு எதிரானதாக கூற முடியுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
“1712-ஆம் ஆண்டு என்பது பத்திரப்பதிவு கட்டாயமாக்கப்படாத காலகட்டம். 1908-ஆம் ஆண்டில் தான் அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது” எனக் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் சுகுமார்.
“வக்ஃப் நிலம் எனக் கூறப்படுவதற்கு எதிராக சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை மாவட்ட வருவாய் அலுவலர் தொடர்ந்து கவனித்து வந்தார். இதில் மற்றவர்கள் மனவருத்தம் அடைவதற்கு எதுவும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பின்னணி உள்ளதாகக் கூறப்படுவது குறித்து கேட்டபோது, “வழக்கில் எனக்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு வராததால் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றோம். இதில் தனிப்பட்ட விவகாரம் என எதுவும் இல்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீதிமன்றத்தின் தீர்ப்பு கைக்கு வந்துள்ளது. இதன்பிறகு, அந்த நிலங்களை அரசின் தொழில் பயன்பாட்டுக்கு கையாள்வது குறித்து ஆலோசிக்க உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு