நெல்லையில் ஏற்கெனவே சாதி தொடர்பான பிரச்னையால் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை தற்போது மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார். எனினும் இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நெல்லை கொக்கிரக்குளம் பகுதிக்கு தனியே சென்ற சின்னதுரையை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி, மொபைல் போனை பறித்துள்ளனர்.
இதில் காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி,”சின்னதுரைக்கு அபாயமான காயங்கள் ஏதும் இல்லை. அவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.
மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் சின்னதுரையை வரவழைத்த சில நபர்கள் சின்னதுரையை தாக்கி அவரது செல்போனை பறித்துள்ளதாகவும், கொக்கிரக்குளம் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் ஆணையர் சந்தோஷ் கூறினார்.
2023ம் ஆண்டு சின்னதுரை மீதான தாக்குதலை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நிலையில், இது தனி விவகாரம் என ஆணையர் குறிப்பிட்டார்.
நெல்லை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் சின்னதுரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில்,” இன்று (ஏப்ரல் 16) மாலை சுமார் 6.15 மணியளவில் சின்னதுரை தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
சுமார் 07.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சின்னதுரையின் விசாரணைக்காக இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறியதாகவும், இச்சம்வம் குறித்து மேல் விசாரணை நடந்து வருவதாக நெல்லை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
2023-ல் நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னதுரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, “அதே பள்ளியில் படிக்கும் வேறுசாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் சின்னதுரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர்.”
இதைப் பார்த்த சின்னதுரையின் தங்கை, அதைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
காயங்களின் தாக்கத்திலிருந்து மீளாத போதும், உதவியாளர் துணையுடன் பிளஸ்டூ தேர்வெழுதிய சின்னதுரை நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார்.