பட மூலாதாரம், Handout
(எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில குறிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)
திருநெல்வேலியில் பென்சில் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதாக காவல்துறையினர் கூறும் நிலையில், இதற்கு இந்த பிரச்னை மட்டும் காரணமல்ல என மாணவரின் பெற்றோர் கூறுகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவரை மாவட்ட குழந்தைககள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டதாக, காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
செவ்வாய்க் கிழமையன்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஒருவரை அரிவாளால் மூன்று இடங்களில் தாக்கியதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளன மாணவர் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியை ஆகியோரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக, தனியார் பள்ளியில் ஆய்வு நடத்திய பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ், “எட்டாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களும் நண்பர்கள். கடந்த மாதம் இருவருக்கும் இடையில் பென்சில் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய காவல் உதவி ஆணையர், “வகுப்பறையில் சமூக அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அரிவாளால் சக மாணவரை இன்னொரு மாணவர் வெட்டியுள்ளார்” எனக் கூறினார்.
மாணவரின் உடலில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய உதவி ஆணையர் சுரேஷ், “மோதலைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் சிகிச்சையில் இருக்கிறார். தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது” என்றார்.
பாளையங்கோட்டை காவல்நிலைய காவலர் ஒருவரிடம் இதுதொடர்பாக, பிபிசி தமிழ் பேசியது. பெயர் அடையாளங்களைத் தவிர்த்து மேலதிக விவரங்களை தெரிவித்தார்.
“பள்ளி புத்தகப் பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். தாக்குதலுக்கு ஆளான மாணவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்” எனக் குறிப்பிட்டனர்.
“கடந்த மாதம் மாணவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் பென்சில் வாங்கியுள்ளனர். இதில் ஒருவரின் பென்சில் காணாமல் போய்விட்டதால் இருவருக்கும் இடையில் தகராறு நடந்தது. இதனால் இருவருக்கும் இடையில் அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனது பெற்றோரிடம் தாக்குதலுக்கு ஆளான மாணவர் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரையும் அழைத்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியுள்ளது.
“தன்னை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து அரிவாளால் சக மாணவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த ஆசிரியைக்கும் வெட்டு விழுந்துள்ளது” எனவும் அந்த காவலர் கூறினார்.
பட மூலாதாரம், Handout
“இதன் பின்னணியில் பென்சில் விவகாரம் மட்டும் இருக்க வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார், தாக்குதலுக்கு ஆளான மாணவரின் தந்தை நிஜாமுதீன்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மகன் தாக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ, பள்ளி நிர்வாகமோ உதவி செய்ய முன்வரவில்லை. நாங்கள் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறிய பிறகு காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது சிகிச்சைக்கான செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுள்ளது” எனக் கூறினார்.
தன் மகனை வெட்டிய பிறகு காவல்நிலையத்துக்குச் சென்று சக மாணவர் சரணடைந்ததாக காவல்துறை கூறியதாக நிஜாமுதீன் தெரிவித்தார்.
இதனை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ரசூல், “அரிவாளால் வெட்டிய பிறகு தனியாக காவல்நிலையம் செல்லும் அளவுக்கு வயது இல்லை என்பதால் இதன் பின்னணி குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Handout
இதற்கு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ், “சிறுவர் என்பதால் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று மட்டும் பதில் அளித்தார். சரணடைந்தது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தனியார் பள்ளியில் ஆய்வு நடத்தினார்.
‘அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பைகளை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்’ எனவும் பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நெல்லையில் பள்ளி ஒன்றில் ஒரு மாதமாக ஒரு மாணவர் புத்தகப் பையில் அரிவாள் கொண்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் தினந்தோறும் புத்தகப் பைகளை சோதனை செய்து வருகின்றனர்.
இதைக் குறிப்பிட்டு செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “புத்தகப் பைகளை பள்ளி நிர்வாகம் தினந்தோறும் சோதனை செய்து வருகின்றது. காவல்துறையும் அவ்வப்போது சோதனை நடத்துகிறது. தங்கள் மகனின் புத்தகப் பையை பெற்றோரும் அடிக்கடி சரி பார்க்க வேண்டும்” எனக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் சுரேஷ்.
மேலும், பள்ளியில் சிறிய சண்டை நடந்தது தொடர்பான தகவல் கிடைத்தாலும் அதைப் பற்றி பெற்றோர் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு