படக்குறிப்பு, திருப்பதி கோவிலின் மேற்புறத் தோற்றம்
திருப்பதி திருமலையை வானூர்திகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட (No-Fly Zone) பகுதியாக அறிவிக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
‘எந்தப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்படும்? மத்திய அரசின் ஒழுங்குமுறைகள் கூறுவது என்ன?’ என்பன போன்ற பல கேள்விகளை இந்தக் கோரிக்கை எழுப்புகிறது.
மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடிதம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருமலை கோவிலுக்கு மேலே விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான ராம் மோகன் நாயுடுவிடமும் இதே கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் 1ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியானது. அதில் பிப்ரவரி 17ஆம் தேதி மத்திய அமைச்சருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தக் கடித்தில், திருமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆகம சாஸ்த்திரத்தின்படி கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் விதமாக, கோவிலின் சுற்றுச்சூழலுக்கு இடையூறு செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து வரும் இரைச்சல் கோவிலின் சுற்றுப்புறத்தில் இறையுணர்வைக் கெடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திருமலையில் டிரோன்கள் மூலம் வீடியோ எடுக்க தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு பறக்க விடப்பட்ட டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சொல்வது என்ன?
மார்ச் 2ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடிதம் குறித்து விளக்கியுள்ளார்.
வாராங்கல் விமான நிலையம் தொடர்பாக ஐதராபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “நாட்டில் பல வழிபாட்டுத் தலங்களில் இருந்து இதுபோன்ற கோரிக்கைகள் எங்களுக்கு வந்துள்ளன. இதுவரை எந்த வழிபாட்டுத் தலங்களிலும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கவில்லை. திருப்பதிக்கும் அப்படி ஓர் உத்தரவை வழங்க முடியாது.
மாறாக, திருப்பதி விமான நிலையத்தின் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (Air Traffic Control) அதிகாரிகளிடம் பேசி, கோவிலுக்கு மேலே பறப்பதற்குப் பதிலாக மாற்று வழியில் விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிப்போம்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராம்மோகன் நாயுடு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர். (கோப்புப்படம்)
2016ஆம் ஆண்டிலும் இதே கோரிக்கை
திருமலையில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்குமாறு கோருவது இது முதல் முறை அல்ல. 2016ஆம் ஆண்டிலும் ஆந்திர பிரதேச அரசு, திருமலை வான் பகுதியை விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி கடிதம் எழுதியது.
அப்போதும் இதே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜூ, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
அப்போதும் மத்திய அரசு இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தது. இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிப்பது திருப்பதி விமான நிலையத்தில், விமானங்களின் போக்குவரத்தை மேலும் சிக்கலாக்கும் என்று அப்போது காரணம் கூறப்பட்டது.
அப்போது சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா அளித்த பதிலில், “திருப்பதியில் ஒரு ரன்வே மட்டுமே உள்ளது. இதில் விமானங்களை இயங்குவது சிரமமானது. மேலும் திருமலை வான் பகுதி விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டால், திருப்பதி விமான நிலையத்தின் அன்றாட விமானப் போக்குவரத்து அதிக சிரமங்களை எதிர்கொள்ளும்” எனக் கூறினார்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
திருப்பதியில் உள்ள ஆகம விதிகளைக் கற்பிக்கும் வைகான்ஸா பீடத்தின் தலைவரான கஞ்சம் பிரபாகராச்சார்யா பிபிசியிடம் பேசுகையில், ஆகம விதிகளின்படி கோவில்களுக்கு மேலாக யாருமே பயணிக்கக் கூடாது என்றார்.
“மகா விஷ்ணுவின் புனிதத் தலங்களில் ஒன்றான திருப்பதி, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது. இந்தப் பகுதியின் மேலே விமானங்களோ ராக்கெட்டுகளோ பறக்க அனுமதிக்க முடியாது. ஆகம விதிகளின்படி, கடவுளின் கோவிலின் கோபுரத்தைவிட உயரமாக எந்தக் கட்டுமான அமைப்பும் இருக்கக்கூடாது என்று ஆகம சாஸ்த்திரம் கூறுகிறது.
கோவில்களே உயர்ந்தவையாகக் கருதப்பட வேண்டும். இதனால்தான் கோவிலின் மீது விமானங்களோ, ஹெலிகாப்டர்களோ பறக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறுகிறோம். ஆகம விதிகளில் விமானங்கள் குறித்து நேரடியாக எதுவும் எழுதவில்லை. ஆனால் கோவில்கள் மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன.
விமானங்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதற்காக அதை அனுமதிக்கலாம் என்று கருத முடியாது. மணியோசை, இசை வாத்தியங்களுடன் கடவுளுக்கு வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது, மற்ற இரைச்சல்களை அனுமதிப்பது சரியல்ல.
மூலஸ்தான விமான கோபுரமான திருமலை ஆனந்த நிலையத்தின் மேலே இதை அனுமதிக்க முடியாது. இதற்கு முன்னர் தெரியாமல் இது நடந்திருந்தாலும், தற்போதாவது இதைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் பிரபாகராச்சார்யா.
இந்தியாவில் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளனவா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திருமலை திருப்பதி பிரமோற்சவத்தின்போது எடுக்கப்பட்ட படம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.
ஏரோநாட்டிக்கல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் இந்தியாவின் இணையதளத்தில் இது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதி (No-Fly Zone ) என்பதற்குப் பதிலாக மூன்று பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதுகாக்கப்பட்ட பகுதி (Protected)
தடை செய்யப்பட்ட பகுதி (Restricted)
அபாயகரமான பகுதி (Dangerous)
இந்திய அரசானது, நாட்டின் சில கடல் எல்லைகள் மற்றும் நிலப் பரப்புகளை விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
ஆனால், தேசிய பாதுகாப்பு சார்ந்த பகுதிகளான ராணுவம், விமானப்படை, கடற்படைத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், ஏவுகணை சோதனை மையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், அணு மின் நிலையங்கள், காட்டுயிர் காப்பகங்கள் போன்றவை தவிர வேறு எதுவும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவில்லை.