திருப்பதி திருமலை பிரசாத லட்டில் கலப்பட நெய் மற்றும் பரகாமணி (கோவில் பணத்தை எண்ணும் பணி) மூலம் வெளிநாட்டுப் பணம் திருட்டு ஆகியவற்றைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
திருமலையில் வெங்கடேஸ்வரரின் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டு சால்வைகளை வாங்கியதில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தரமற்ற ஆடைகளை வழங்கிய நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இந்த விவகாரம் குறித்து ஏசிபி டிஜி (ACB DG) விசாரணை நடத்தவும் திருமலை திருப்பதி தேவஸ்தான (டிடிடி – TTD) அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.
நடந்தது என்ன?
டிசம்பர் 10 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘டிடிடி சால்வைகள் வாங்கியதில் முந்தைய நிர்வாகக் குழு ஊழல் செய்திருப்பதாக’ குற்றம் சாட்டியிருந்தார்.
ரூ.350 மதிப்புள்ள பட்டு சால்வை ரூ.1,350-க்கு வாங்கப்பட்டதாக அவர் கூறினார். “இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 2019 முதல், ஆண்டுதோறும் சுமார் ரூ.80-90 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என டிடிடி தலைவர் கூறினார்.
“இந்த பட்டு சால்வைகள், தூய டஸ்ஸா பட்டு, தங்கம் அல்லது வெள்ளி சரிகை ஆகியவற்றால் செய்யப்பட்டவை என்றும், ‘சில்க் மார்க்’ உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. எனினும், அவற்றைத் தயாரிக்க தரமற்ற பட்டு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விவாதித்து ஏசிபி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.”
“கலப்பட நெய், தரமற்ற பொருட்கள், பரகாமணி திருட்டு, டெண்டர் முறைகேடு போன்ற பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவை அனைத்தையும் படிப்படியாக அம்பலப்படுத்தவும், காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். வெளிப்படைத்தன்மையே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னுரிமை. யாரும் ஊழல் செய்ய விடமாட்டோம்,” என்று பிஆர் நாயுடு கூறினார்.
இருப்பினும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பூமணா கருணாகர் ரெட்டி, விஜிலென்ஸ் அறிக்கையை விமர்சித்தார். “கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முறைகேடுகள் நடந்திருந்தாலும், இவை அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்ததாக அவர்கள் வேண்டுமென்றே கூறுகிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியைக் குறிவைத்தே இதைச் சொல்கிறார்கள்” என்று கூறினார்.
இது பல வருடங்களாக நடந்து வருகிறது: துணை முதல்வர் பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தரமற்ற சால்வைகள் விநியோகம் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்தார். பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய பவன், “பணப்புழக்கம் உள்ள இடங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார்.
“கலப்படம் பற்றி நான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கேட்டபோது, அது பல வருடங்களாக நடந்து வருவதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. லட்டைப் பொறுத்தவரை, அது உணவுப் பொருள் அல்ல, அது ஒரு நம்பிக்கை. மக்கள் மெக்கா வரை சென்றால், அது அவர்களின் நம்பிக்கை. நாம் அங்கிருந்து எதையாவது கொண்டு வரும்போது, கடவுளின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறோம். அது எந்த மதத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். திருப்பதி லட்டும் ஒரு ஆசிர்வாதம் போன்றது. . எந்த உணவிலும் கலப்படம் செய்வது விதிமீறல் பிரிவின் கீழ் வருகிறது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், FB/Pawan Kalyan
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறுவது என்ன?
ஜெகன் மோகனைக் குறிவைக்கவும், அரசியல் லாபம் பெறவும் திட்டமிட்ட முறையில் இந்து மதமும் திருமலையும் பயன்படுத்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பூமணா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தங்கள் தவறுகளிலிருந்து தப்பிக்க எங்கள் மீது சேற்றை வீசுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
“பட்டுத்துணி ஊழல் என்பது செயற்கை விவகாரம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அது 2015 முதல் 2025 வரை நடந்தது என்று விஜிலென்ஸ் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை மறைத்து, எங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஊழல் நடந்தது என்று அரசியல் ரீதியாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது.”
ஜெகன் மோகன் ரெட்டியை கொச்சைப்படுத்தி, எப்படியாவது அவர் கிறிஸ்துவர் என்று நிறுவப் பார்க்கிறார்கள். ஆனால், இதைப் பெரிதாக்குவதால் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைகிறது என்பதைக் கூட உணராமல் செய்கிறார்கள்” என்றார் பூமணா.
“நான்கு மாதங்களுக்கு முன் அஹோபிலத்தில் திருட்டு நடந்துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? திருமலையில் ஒரு விஷயத்தை எழுப்பினால் அது நாடு முழுவதும் பரவி விடும். அவர்கள் என்ன சொன்னாலும் செல்லுபடியாகும் என நினைக்கின்றனர். திருமலை திருப்பதி தர்ம தேவஸ்தானத்தின் பெருமையை காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும், 2019-24ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் மூவாயிரம் கோவில்களை கட்டிய வரலாறு ஜெகன் மோகன் ரெட்டிக்கு உள்ளது.” என்றார் அவர்.
பட மூலாதாரம், TTD
படக்குறிப்பு, டிடிடி தலைவர் பிஆர் நாயுடு
சால்வைகளை சப்ளை செய்வது யார்?
இதுபற்றி பிபிசியிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, பட்டு சால்வைகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்கினார்.
“சங்குகளும் நடுவில் மூன்று பெயர்களும் கொண்ட இந்தப் பட்டு சால்வைகள் திருமலை வெங்கடேஸ்வரருக்கு பல்வேறு சேவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவரை வழிபட வரும் வி.வி.ஐ.பி-க்களுக்கு வேத ஆசிர்வாதங்களுக்கும், நன்கொடையாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் அது பயன்படுத்தப்படுகிறது” என்று பானு பிரகாஷ் ரெட்டி கூறினார்.
“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 2019 முதல் 2024 வரை பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ரங்கநாயக மண்டபத்தில் பக்தர்களுக்கு தரம் குறைந்த சால்வைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நிபுணர் குழுவுக்கு அனுப்பியபோது, தரமற்ற துணிகள் சப்ளை செய்யப்பட்டதாக கமிட்டி அறிக்கை அளித்தது. சப்ளையர்கள், யார் மூலம் இதையெல்லாம் பேசி கமிஷன் வாங்கினார்கள்? இந்த விஷயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
“இந்த விஷயத்தில் ரூ.50 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இதை அரசியல் பிரச்னையாகப் பார்க்கவில்லை. சுவாமியின் மாண்பைக் காக்க முயற்சிக்கிறோம்”
“சுவாமிக்கு சாற்றப்படும் துணிகளிலும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலையும் உரிய தரத்தில் பராமரிக்கப்படவில்லை என்று அறிக்கை வந்துள்ளது. முழு அறிக்கையும் கிடைத்த பின், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பானு பிரகாஷ் கூறினார்.
பட மூலாதாரம், Facebook/Bhumana Karunakar Reddy
படக்குறிப்பு, டிடிடி முன்னாள் தலைவர் பூமணா கருணாகர் ரெட்டி
‘டிடிடி நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்’
“பத்தாண்டுகளில் நடந்தது என்பவர்கள், எந்த ஆண்டு நடந்தது, தற்போது எவ்வளவு நடந்தது என்றெல்லாம் சொல்லாமல், இந்த விஷயத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரேயொரு நிறுவனம் சப்ளை செய்தால் தரம் ஏன், எப்படி மாறியது? இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இதில் பங்குள்ளது. தரத்தை சரிபார்க்கும் ஆட்கள் மாறியிருக்கிறார்களா? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” என்று திருப்பதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரவிக்குமார் கூறினார்.
ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அரசால் இதை கண்டறிய முடியவில்லை என ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் என்றார் ரவிக்குமார்.
ஏப்ரல் 29, 2023 அன்று, திருமலையில் பரகாமணியின்போது (காணிக்கை பணத்தை எண்ணும் பணி), ரவிக்குமார் என்ற ஊழியர் வெளிநாட்டு பணத்தைத் திருடியதாக, அப்போதைய திருப்பதி திருமலை தேவஸ்தான உதவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமாரிடம் பிடிபட்டார்.
வெளிநாட்டு பணத்தை எண்ணும் போது, பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பையில் சில நோட்டுகளை ரவிக்குமார் மறைத்து வைத்ததாக சதீஷ்குமார் புகாரளித்தார். அதையடுத்து, மே 30, 2023 அன்று ரவிக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், செப்டம்பர் 9, 2023 அன்று நடந்த லோக் அதாலத்தில் அந்த வழக்கில் தீர்வு காணப்பட்டது. அப்போது, நடந்த சமரசத்தில் சதீஷ்குமாருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சந்திரபாபு தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின், பரகாமணி வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருமலை லட்டு பிரசாதத்தில் ஐந்து ஆண்டுகளாக (2019-2024) செயற்கை மற்றும் கலப்பட நெய் வழங்கப்பட்டதாகவும், சுமார் 60 லட்சம் கிலோ சப்ளை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பல திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சப்ளையர்கள் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.