மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மீறி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடைவரைக் கோயிலான இக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதேபோல், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்த கோயில் மற்றும் தர்காவுக்கு மத வேறுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
இதற்கிடையே, ஜனவரி மாதம் திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முயன்றனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து தடை விதித்தனர். இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியுடன் உடன் வந்தவர்கள் மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அசைவ உணவு சாப்பிட்ட இடத்தில் இந்து முன்னணியினர் காசி விஸ்வநாதர் கோயில் தீர்த்தத்தை தெளித்து சுத்தப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் மலை மீது சென்று தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
இதற்கு தமிழகம் முழுவதுமிருந்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் திரள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல்துறையில் மனு கொடுத்தனர். திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. போராட்டம் நடத்த அனுமதி கோரிய இடத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இதனால், பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு மற்றும் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
இந்நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்.3, 4 ஆகிய 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து திருப்பரங்குன்றத்தில் கூடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. திருப்பரங்குன்றத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிப்பால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையும் வெகுவாகக் குறைந்தது.
திருப்பரங்குன்றம் பகுதியில் பிரதான சாலை நுழைவு பகுதி, சன்னதி தெரு, மலையைச் சுற்றிலும் என மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கோயிலுக்கு பக்தர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோயில் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக பக்தர்களும் குறைவான எண்ணிக்கையிலேயே வந்தனர். மலைக்கு செல்லும் வழிகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. கோயிலை சுற்றியுள்ள கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி, வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே, மாவட்ட நிர்வாகத்தின் 144 தடையை மீறி திருப்பரங்குன்றம் கோயில் முன்பாகவும், அன்னதானக் கூடத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவரைகளை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது காவல்துறை, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோயில் வளாக பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி மற்றும் பாஜக-வினரை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். இருப்பினும் மதுரை நகர காவல்துறை விதித்த அனுமதி மறுப்பை ரத்து செய்தும், மாவட்ட நிர்வாகம் விதித்த 144 தடை உத்தரவை ரத்து செய்தும் போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என இருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். அதன்படி உயர் நீதிமன்ற கிளை பழங்காநத்தத்தில் இன்று மாலை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.
மதுரை ரயில் நிலையத்திலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தென்காசியில் 6 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், திருநெல்வேலியில் 5 பேர், மதுரையில் 15 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை வரவேற்று கோயில் முன்பு அமர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் ‘வெற்றி, வெற்றி’ என கோஷமிட்டனர்.