திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை, ‘சிக்கந்தர் மலை’ என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார்.
அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், ‘மலையில் ஆடு, கோழியை பலியிட அனுமதியில்லை’ எனக் கூறினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இருந்த நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் மலையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலம் நடத்தினர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மனுத்தாக்கல் செய்தார்.
மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ராமலிங்கம் என்பவரும் கந்தர் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்குமாறு பரமசிவம் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
தர்கா தரப்பில் நிர்வாகிகள் ஒசிர்கான் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர், தர்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியும் பக்தர்களுக்கு சாலை, குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
மலையை, ‘சமணர் குன்று’ என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் ஜே.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பட மூலாதாரம், Getty Images
முரண்பட்ட நீதிபதிகள்
அப்போது நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ‘மலையை, திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். சிக்கந்தர் அல்லது சமணர் குன்று என அழைக்கக் கூடாது’ என உத்தரவிட்டவர், ‘ஆடு, கோழிகளை பலியிடவும் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.
அதுவரை, மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
‘கந்தர் மலையா.. சிக்கந்தர் மலையா?’
வழக்கின் விசாரணையின்போது சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “1923-ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற உத்தரவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த எந்தவொரு தீர்ப்பிலும் தர்காவின் சடங்குகளுக்கு கோவிலின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை’ என வாதிட்டார்.
தர்காவின் சொத்து மற்றும் இறை நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான தன்னாட்சி உரிமைகளை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தர்கா அமைந்துள்ள பகுதி சிக்கந்தர் மலை என்று வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்படும் சான்றுகளும் 1886-ஆம் ஆண்டு சர்வே வரைபடங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. வருவாய், நீதிமன்ற உத்தரவுகளில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளன” எனவும் ஐசக் மோகன்லால் கூறினார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘பல தர்காக்களில் விலங்குகளை பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நெல்லித்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தப்படுகிறது’ எனக் கூறினார்.
அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டது என்ன?
வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன், “உள்ளூரில் நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில அரசியல் அமைப்புகள் மட்டுமே நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கின்றன” எனக் கூறினார்.
“தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அப்படியிருக்கும்போது நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது” எனவும் அவர் வாதிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பாக ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தங்களின் சொத்துகளை எவ்வாறு அனுபவிப்பது என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் தர்கா நிர்வாகிகளுக்கு உள்ளதாக வாதிட்டார்.
‘இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது’
ஆடு, கோழிகளைப் பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறையாக உள்ளதாக வாதிட்ட ரவீந்திரன், “தர்கா வளாகத்தில் பழங்காலத்தில் இருந்தே விலங்குகளை பலியிடுதல் என்பது நடைமுறையாக உள்ளதைக் காட்டும் பதிவுகள் உள்ளன” எனக் கூறினார்.
“நெல்லித்தோப்பு பகுதியானது இஸ்லாமியர்களின் சொத்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொழுகை நடத்த வேண்டுமா… இல்லையா என்பதை இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது” எனவும் ரவீந்திரன் வாதிட்டார்.
தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த அவர், “இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் நிர்வாக அலுவலர், கோவில் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் பற்றி மட்டும் விளக்கம் அளிக்க முடியும்” எனக் கூறினார்.
மலையில் உள்ள நெல்லித்தோப்பு மற்றும் மலை உச்சியில் உள்ள தர்கா ஆகியவை அவரது நிர்வாகத்தின்கீழ் இல்லை எனவும் ரவீந்திரன் தெரிவித்தார்.
இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன?
வழக்கில் இந்திய தொல்லியல் கழகத்தின் (ASI) வாதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
“சிக்கந்தர் தர்காவில் பலியிடுவது நடைமுறையாக இருந்தால் அது இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட வேண்டும்” என வாதிட்ட இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அவை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் வாதிடும்போது, “மலையில் உள்ள சமண குகைகளை பச்சை வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது தொடர்பாக காவல்துறையில் தொல்லியல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.” எனக் குறிப்பிட்டார்.
மலையில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கைகளைப் (Pancha Pandava beds) பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ஃப் வாரியம், இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டப்பிரிவு 19, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை மட்டும் கையாள்வதாகவும் வழக்கின் நிலவரங்களுக்கு இது பொருந்தாது எனவும் வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.விஜயகுமார், இந்திய தொல்லியல் கழகத்தின் இரண்டு அறிவிப்புகளை மேற்கோள் காட்டினர்.
தொல்லியல் கழகத்தின் 2 அறிவிப்புகள்
‘இந்திய தொல்லியல் கழகம் கடந்த 29.7.1908 மற்றும் 7.2.1923 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட இரு அறிவிப்பில், மலையின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுக்கைகள், சிக்கந்தர் மலையின் உச்சியில் மசூதிக்குப் பின்புறம் உள்ள குகை ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
“சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை” எனத் தெரிவித்துள்ள நீதிபதி, “தொல்லியல் கழகத்தின் அறிவிப்பில் திருப்பரங்குன்றம் மலை என்றும் அதில் சிக்கந்தர் மசூதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
லண்டன் ப்ரிவி கவுன்சில் அளித்துள்ள உத்தரவில், 170 ஏக்கர் பரப்பளவுள்ள திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் அளவுள்ள நெல்லித்தோப்பு மற்றும் சிக்கந்தர் தர்கா தவிர மற்ற பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்பட்டுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மலையின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மலையையும் சிக்கந்தர் தர்கா பெயரில் அழைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது’ எனத் தீர்ப்பில் நீதிபதி ஆர்.விஜயகுமார் கூறியுள்ளார்.
முன்னதாக, தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டிருந்தார்.
இந்தத் தீர்ப்பில் உடன்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி ஆர்.விஜயகுமார், “பழங்காலத்தில் இருந்து மலையில் ஆடு, கோழி பலியிடப்பட்டு வருவதாக தர்கா நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மனுதாரர்களும் கோவில் நிர்வாகமும் இந்த நடைமுறை இல்லை என்கின்றனர்” என்கிறார்.
‘பலியிட அனுமதிக்க முடியாது’
“திருப்பரங்குன்றம் மலையில் சுமார் 172.2 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்லியல் கழகம் அறிவித்துள்ளது. அங்கு விலங்குகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டு செல்லக் கூடாது” என, நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சிக்கந்தர் தக்கா மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளின் உரிமையாளர்களாக தர்கா நிர்வாகிகள் உள்ளனர்.
“ஆனால் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் விதிகள் 1959ன்படி (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) துறையின் அனுமதியில்லாமல் விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது” என, நீதிபதி கூறியுள்ளார்.
“அதையும் மீறி அனுமதியை வழங்குவது என்பது தொல்லியல் சட்டத்துக்கு எதிரானது. அந்தவகையில் திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என, நீதிபதி ஆர்.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தர்கா அமைந்துள்ள பகுதிக்கு நெல்லித்தோப்பு வழியாக சென்றடைய வேண்டும். இப்பகுதி வழியாக மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, ‘சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுடன் இந்தப் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம்” எனக் கூறியுள்ளார்.
‘நெல்லித்தோப்பில் பிரார்த்தனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிய மனுவை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்ததை மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் ஏற்றுக் கொண்டார்.
முடிவில், மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் மலையில் ஆடு, கோழிகளை பலியிடவும் சிக்கந்தர் மலை என அழைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் மத்தியில் வரவேற்பும் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?
“காலம்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு உரிமையைத் தடுப்பது என்பது வேதனையைத் தருகிறது” எனக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரு தரப்பிலும் பாரம்பரிய வழிபாட்டு உரிமை தொடர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆடு, கோழியை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது” எனக் கூறுகிறார்.
“தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தர்காவில் உள்ள கமிட்டி நிர்வாகம் முடிவு செய்யும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் காவல்துறை தான் தடுத்து நிறுத்தியது” எனக் கூறுகிறார்.
“ஆனால், அதற்கு மாறாக நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகத்துக்கு சாதகமாக அரசுத் தரப்பு வாதிட்டது. மலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என வாதிட்டோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது” எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன்.
காலம்காலமாக பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாக தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, “தர்காவில் உள்ள சமாதி மட்டும் தான் அவர்களுக்கு சொந்தமானது. மலையின் மேல் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை” எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன்.
‘புதிய தடைகளை எதிர்பார்க்கவில்லை’ – நவாஸ்கனி
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆடு, கோழியை பலியிடும் வழக்கம் உள்ளதால் அந்த உரிமையை வழங்குமாறு தான் நீதிமன்றத்தில் கேட்டோம். அங்கு இஸ்லாமியர்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. மாற்று சமூத்தினரும் நேர்த்திக் கடன் செலுத்தி வந்துள்ளனர்” என்கிறார்.
“மலையில் ஆய்வு செய்துவிட்டு நடைமுறை இருப்பதாக அறிந்ததால் அதனைத் தொடர்வதற்கு அனுமதிக்குமாறு கோரினோம். ஆனால், புதிய தடைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு