• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடையை மீறி நடத்த இந்து முன்னணி உறுதி! | Hindu munnani firm to stage protest in Thiruparankundram on Feb. 4 amidst police ban

Byadmin

Feb 2, 2025


மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணியும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 4-ல் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி இன்று உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக திருமங்கலம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் கோயில் நிர்வாகத்தையும், தர்கா நிர்வாகத்தையும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள மாற்று மத வழிபாட்டு தலத்தில் கந்தூரி நேர் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அந்த அமைப்புகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இதேபோல் மலை உச்சியில் உள்ள கல்தூணில் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என சில அமைப்புகள் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் இரு பிரிவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு மத ரீதியான பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவில், ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறும் தலைவர்களின் விபரங்கள், கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை, அவைகள் நிறுத்தும் இடங்கள் போன்ற விபரங்கள் இல்லை. மேலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் ஜன. 29-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு மதுரை மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அதிக எண்ணிக்கையில் வருவர். இதனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள இடத்தில் பக்தர்கள் அதிகளவில் கூடினால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். மாநிலம் முழுவதும் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் சமூக வலைதளங்கள், துண்டு பிரசூரங்கள், தண்டோராக்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் ஆர்ப்பாட்டத்துக்கு பிற மாவட்டங்களிலிருந்து ஆட்களை வரவழைப்பதாக தெரிகிறது.

அவ்வாறு ஆட்கள் வந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது திருப்பரங்குன்றத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொது அமைதி, மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் அறிக்கை அளித்துள்ளார்.

மேலும், மதுரை மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூடம் நடத்த மாநகர் காவல் ஆணையரின் தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என ரகசிய தகவல் வந்திருப்க்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் ஆர்ப்பாட்டத்துக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி பிப். 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வெளியிட்டுள்ள தனி செய்திக்குறிப்பில். “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக இரு வேறு பிரிவினர் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டும், அதனால் இரு பிரிவினர்களை சேர்ந்தவர்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இரு பிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்த முன்னணி சார்பில் பிப். 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரிந்தும் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும், தண்டோராக்கள் போட்டும் திருப்பரங்குன்றத்துக்கு அதிகளவில் பொதுமக்களை திரட்டும் செயல்களில் இந்து முன்னணி இயக்கத்தினர் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கை பாராமரிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். மீறி வருபவர்கள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் சட்டப்படியான எடுக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.



By admin