
ஆடு, கோழி பலியிடத் தடை, கார்த்திகை தீப விவகாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழாவை நடத்துவதற்கு தடைகோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தர்கா நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை தற்போதைய நிலையே (Status quo) தொடர உத்தரவிடுமாறு மனுதாரர் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி எம்.ஜோதிராமன் நிராகரித்துவிட்டார்.
“மலையில் கொடி ஏற்றக் கூடாது, சந்தனக் கூடு நடத்தக்கூடாது என இந்து அமைப்பினர் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர்” என தர்கா நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை தர்கா நிர்வாகிகள் மீறுவதாக இந்து அமைப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். சந்தனக் கூடு விழாவை நடத்துவதில் என்ன சிக்கல்?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் வரும் ஜனவரி 6 ஆம் தேதியன்று சந்தனக் கூடு விழா நடக்க உள்ளது.
இதற்கான கொடியேற்றம் டிசம்பர் 21 ஆம் தேதி நடந்துள்ளது. விழா குறித்து தர்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அழைப்பிதழில், ‘கந்தூரி மகா உற்சவம் சந்தனக் கூடு விழாவில் முஸ்லிம்கள், இந்துக்கள், பிற மதத்தவர் தங்கள் குடும்ப சகிதம் பங்கு பெற வரலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை

முன்னதாக, சந்தனக் கூடு விழாவை நடத்துவதற்கு அனுமதி தரக் கோரி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரிடம் தர்கா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, டிசம்பர் 18 ஆம் தேதியன்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகிகள், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, சந்தனக் கூடு விழாவை நடத்துவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தனக் கூடு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
புகார் மனுவில் என்ன உள்ளது?

மனுவில், ‘உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
‘மலையில் விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த உத்தேசித்தால் உரிய உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.
‘இந்தநிலையில், மலை மீது கந்தூரி விழா நடத்தப் போவதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது’ எனவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை முன்வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணிக்க மூர்த்தி வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். மனுவில் ஆர்.டி.ஓ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுள்ள அவர், ‘மலையில் சந்தனக் கூடு விழாவை நடத்த அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கந்தூரி நடத்துவது குறித்து விவாதிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.
‘மலையில் கந்தூரி நடத்துவதை தடை செய்யாமல் அங்கு விழா நடத்துவதற்கு அனுமதி அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர்’ எனவும் வழக்கின் மனுவில் கூறியுள்ளார்.
‘நிவாரணம் வழங்க முடியாது’ – நீதிபதி
மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜோதிராமன், மாவட்ட ஆட்சியர், தர்கா நிர்வாகம், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ எனக் கூறி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ‘ஜனவரி 6 ஆம் தேதி சந்தனக் கூடு விழா நடக்க உள்ளது. ஜனவரி 2 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது’ எனக் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிடுவதற்கு தடை விதிக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, நிஷா பானு அமர்வு தீர்ப்பில் முரண்பட்டனர். நீதிபதி ஸ்ரீமதி தனது உத்தரவில், ‘ஆடு கோழி பலியிடவும் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
ஆனால், நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

‘2 மாதங்கள் கடந்தும்…’
மூன்றாவது நீதிபதியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அந்தவகையில் மதநல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது’ என வாதிட்டார்.
வழக்கின் தீர்ப்பில், மலை மீது எந்த நோக்கத்துக்காகவும் விலங்குகளைக் கொண்டு செல்லக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி விஜயகுமார், மலை மீது ஆடு, கோழி பலியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மாணிக்க மூர்த்தியின் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார், “தீர்ப்பு வெளிவந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தர்கா தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை” எனக் கூறுகிறார்.
“உரிமையியல் நீதிமன்றத்திலும் தர்கா தரப்பினர் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். தற்போது வரை அதையும் அவர்கள் செய்யவில்லை” எனக் கூறிய அவர், “மலையில் தொழுகை நடத்துவதையோ கொடி ஏற்றுவதையோ எந்தவிதத்திலும் நாங்கள் தடுக்கவில்லை” என்கிறார்.
‘அசைவம் சமைக்கும் எண்ணம் இல்லை’

சந்தனக் கூடு விழா அழைப்பிதழ் குறித்துப் பேசிய நிரஞ்சன் எஸ்.குமார், “அழைப்பிதழில் கந்தூரி உற்சவம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கந்தூரி உற்சவம் என்றாலே விலங்குகளை பலியிட்டு அனைவருக்கும் சாப்பாடு போடுவது வழக்கமாக உள்ளது” என்கிறார்.
இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயலாளர் ஆரிஃப்கான், “கந்தூரி நிகழ்வில் மலையில் அசைவம் சமைக்க உள்ளதாக மனுவில் மனுதாரர் கூறியுள்ளார். மலையில் அசைவம் சமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” எனக் கூறினார்.
சந்தனக் கூடு விழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள், திருப்பரங்குன்றம் மலைக்கு வருகின்றனர்.
“கந்தூரி நிகழ்வுக்கு வரும் மக்கள் விலங்குகளைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அந்தவகையில் மலைக்கு வெளியில் விலங்குகளை பலியிட்டு உணவை பரிமாற உள்ளோம்” எனவும் ஆரிஃப் கான் குறிப்பிட்டார்.
“மலைக்கு வெளியில் விலங்குகளை பலியிட்டு உணவு பரிமாறுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” எனக் கூறும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், “ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மலைக்கு அசைவ உணவைக் கொண்டு செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன” என்கிறார்.
நேற்று (டிசம்பர் 26) மலைக்கு மேலே அசைவ உணவைக் கொண்டு செல்ல சிலர் முயன்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கேரள பக்தர்கள் கொண்டு வந்த அசைவ உணவு
டிசம்பர் 26 அன்று தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் சிலர் சிக்கந்தர் தர்காவில் வழிபாடு நடத்துவதற்கு வந்துள்ளனர். அவர்களின் பைகளை மலை அடிவாரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் காவல்நிலைய போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அந்தப் பைகளில் அசைவ உணவு இருந்தது கண்டறியப்பட்டது. ‘அதனைக் கொண்டு செல்லக் கூடாது’ என போலீசார் கூறியதையடுத்து, உணவை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
“அசைவ உணவை எடுத்துக் கொண்டு வந்தவர்களிடம் காவல்துறை விசாரித்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் ஆடு, கோழி பலியிடும் முயற்சியில் தர்கா நிர்வாகம் இறங்கியுள்ளது” என்கிறார், சோலைக்கண்ணன்.
இதனை மறுத்துப் பேசும் சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயலாளர் ஆரிஃப்கான், “வெளியூர்களில் இருந்து வருகிறவர்களுக்கு அசைவம் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது குறித்து தெரிவதில்லை. போலீசார் கூறினால் உணவை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்” என்கிறார்.
தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக் கூடு விழா சிறப்பாக நடக்கக் கூடிய ஒன்றாக உள்ளதாகக் கூறும் ஆரிஃப்கான், “காவல்துறை கெடுபிடியால் முன்புபோல எளிதாக மலைக்குச் சென்று வர முடியவில்லை. தினமும் சிலர் கோவில் முன்பு போராட்டம் நடத்துவதால் தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது” எனக் கூறினார்.
‘வழிபாடு நடத்துவதில் சிரமம்’

சிக்கந்தர் தர்காவுக்கு செல்லும் மலைப் பாதையின் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் காவல்நிலைய போலீசார் சிலர் அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையில் பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் ஆரிஃப்கான், “தர்காவுக்குச் செல்லும் நபர்கள் தங்கள் விவரங்களை பதிவேட்டில் எழுதிவிட்டுச் செல்ல வேண்டும். ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும். செல்போன் எண்ணும் பெறப்படுகிறது. இதனால் வழிபாடு நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரு தரப்பும் அவரவர் வழிபாட்டை சுமூகமாக நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்களால் பக்தர்களால் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கோ சிக்கந்தர் தர்காவுக்கோ சென்று அமைதியாக வழிபாடு நடத்த முடியவில்லை” எனக் கூறினார்.
மலைக்கு இஸ்லாமியர்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் சிலர் செயல்படுவதாகக் கூறிய அவர், “தர்காவுக்கு அருகில் உள்ள பிறை நிலா கொடிக்கு எதிராகவும் சந்தனக் கூடு விழா நடத்துவதற்கு எதிராகவும் இந்து அமைப்பினர் செயல்படுகின்றனர்” என்கிறார்.

விலங்குகளை பலியிடுவது தொடர்பான உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் ஆரிஃப்கான் கூறினார்.
சந்தனக் கூடு விழாவை நடத்துவது தொடர்பாக ஜனவரி 2 ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் தர்கா நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து வழக்கு முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
கந்தூரி விழா நடத்துவது தொடர்பாக இந்து அமைப்பினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு