திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றும் விவகாரத்தில் தள்ளுமுள்ளு – ஊரடங்கு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்
திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில் தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட அவர்கள், தடுப்புகளை தாண்டி மலைக்கு ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றபடாததை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட அவர்கள் திருப்பரங்குன்றம் கோவில் 16 கால் மண்டபம் அருகே காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கோவிலை நோக்கி முன்னேறினர்.
உயர் நீதிமன்றம் அனுமதியளித்த இடத்தில் இரவு 8 மணிவரை தீபம் ஏற்றப்படவில்லை.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் தீபத்தூணியில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி மனுதாரர்களில் ஒருவரான இராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் இராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எப் (CISF) வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபதூணில் மலையேற்றுவதற்காக போலீஸ் துணையுடன் அவர்கள் சென்றனர். உயர் நீதிமன்றம் அனுமதியளித்த இடத்தில் இரவு 8 மணிவரை தீபம் ஏற்றப்படவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு