
‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்’ என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
முன்னதாக, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, தர்கா நிர்வாகம் உள்பட பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இங்குள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்தநிலையில், ‘மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் முன்வைத்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என உத்தரவிட்டார். அவ்வாறு தவறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
ஆனால், அவ்வாறு தீபம் ஏற்றாமல் வழக்கம்போல பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் காவல்துறைக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில், மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பரங்குன்றம் கோவிலின் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை வைத்த வாதம் என்ன?
வழக்கில் கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா, வக்ஃப் வாரியம் உள்பட பல்வேறு தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
‘மலையில் குறிப்பிட்ட இடத்தில் விளக்கு ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட வழக்கம் என எதுவும் இல்லை’ என மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் வாதத்தின்போது தெரிவித்தன.
‘தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் புதிய வழக்கத்தை உருவாக்கும்’ என வாதிட்ட கோவில் நிர்வாகம், ‘இந்த தீர்ப்பு நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ எனக் கூறியது.

‘பைபிள் வசனம்’ – 170 பக்க தீர்ப்பில் என்ன உள்ளது?
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.
சுமார் 170 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ‘திருப்பரங்குன்றம் மலை தொடர்பான முந்தைய வழக்குகளில் தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் இது முன்னரே முடித்து வைக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பின் தொடக்கத்தில், பைபிள் வசனம் ஒன்றை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். பைபிளில் ஆதியாகமத்தில், ‘கடவுள், ஒளி உண்டாகக் கடவது என்றார், ஒளி உண்டாயிற்று’ என்ற வாக்கியத்தை நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம், ‘கடவுள் தம்முடைய வார்த்தையால் ஒளியை தோற்றுவிக்கிறார். இது படைப்பு, நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியைக் குறிக்கிறது’ என தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மலையில் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் எனவும் நீதிபதியின் உத்தரவு ஆகம விதிகளுக்கு புறம்பானது எனவும் மனு மீதான விவாதத்தின்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
‘இது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட புதிய வழக்கம்’ எனவும் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ‘பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயத்தை சிலரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளனர்.
‘மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தபோது, சுமூகத் தீர்வு காண்பதற்கு இன்னும் காலதாமதம் ஆகவில்லை என்று கருதினோம். ஆனால், இரு தரப்பு வாதங்கள் தொடர்ந்தபோது இரு சமூகங்களுக்கு இடையே பகை நீடிக்கும் வரை தங்களுக்கு லாபம் என வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களும் சிலரும் குழப்பத்தை ஏற்படுத்தக் காத்திருப்பதை உணர்ந்தோம்’ எனக் கூறியுள்ளனர்.
‘சிக்கந்தர் தர்கா சொத்து’ – நீதிபதிகள் கூறியது என்ன?
‘கருவறையில் உள்ள கடவுளுக்கு நேர்மேலே இல்லாத ஓர் இடத்தில் விளக்கு ஏற்றுவதை சைவர்களின் ஆகம விதிகள் தடை செய்கின்றன’ என்பதைக் காட்டுவதற்கு இறுதிவரை உறுதியான ஆதாரத்தை சமர்ப்பிப்பதற்கு கோவில் நிர்வாகம் தவறிவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
தேவஸ்தான நிலப்பகுதிக்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூண் அருகே ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் தேவஸ்தான பிரதிநிதிகளை விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சுவது ஆபத்தானதாக உள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இது நம்புவதற்குக் கடினமானதாக உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதிகள், ‘அப்படியொரு குழப்பம் அரசால் தூண்டிவிடப்பட்டால் மட்டுமே நிகழக் கூடும். எந்த அரசும் தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அந்தளவுக்கு தாழ்ந்துவிடக் கூடாது’ எனவும் கூறியுள்ளனர்.
‘விளக்கேற்றுவதற்கு வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் தீபத்தூண் எனப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம் சிவில் நீதிமன்றத்தால் தேவஸ்தானத்தின் சொத்து என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ளது’ எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“இன்று வரை வக்ஃப் வாரியத்துக்கு இதில் எந்த உரிமையும் இல்லை” எனக் கூறியுள்ள நீதிபதிகள், “நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின்போது அந்த தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற தீய நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது” எனவும் கூறியுள்ளனர்.
1994 ஆம் ஆண்டில் இந்து பக்த ஞான சபையின் நிர்வாகிகளில் ஒருவரான தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அவர் தொடர்ந்த வழக்கில், ‘மலையில் நெல்லித்தோப்புக்கு 15 மீட்டருக்கு அப்பால் தர்கா இருப்பதைக் கணக்கில் கொண்டு சரியான இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ‘தர்காவின் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்த சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவு என்ற கட்டுப்பாட்டுடன் தேவஸ்தானத்துக்கு சொந்தமான மலையின் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது’ எனக் கூறியுள்ளனர்.
“அந்த வழிகாட்டுதலின் நோக்கம் பாதுகாப்பை உறுதி செய்வது தான்” எனக் கூறியுள்ள நீதிபதிகள், “நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தூரக் கட்டுப்பாடு என்பது கட்டாய நிபந்தனை அல்ல. விளக்கு ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தைத் தீர்மானிக்கும்போது தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தர்கா அமைந்துள்ள இடத்தின் கீழே உள்ள மற்றொரு பாறையின் உச்சியில் இருக்கும் தீபத்தூண் எனப்படும் கல் தூண் தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாக உள்ளதாக, தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “கார்த்திகை தீபம் மற்றும் பிற பண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலையடிவாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவதற்காக ஏற்றப்படுகின்றன” எனவும் கூறியுள்ளனர்.
உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும்போது தேவஸ்தான சொத்து எல்லைக்குள் ஓர் இடம் இருக்கும்போது அது பொதுவான கொள்கைக்கு முரணாக இல்லாதபோது பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு கோவில் நிர்வாகம் மறுப்பதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம் என்ன?
திருப்பரங்குன்றம் மலை 1958 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின்கீழ் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958) பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அனைவரும் அந்தச் சட்டத்துக்கும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்’ எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அந்தவகையில், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ள அச்சம் என்பது அவர்களின் வசதிக்காக அவர்களே உருவாக்கிய கற்பனையான பேய் (imaginary ghost) என நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
‘ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக தொடர்ச்சியான அவநம்பிக்கையின்கீழ் நிறுத்துவதற்காக இது செய்யப்படுகிறது. விளக்கேற்றுவதற்காக தேவஸ்தானத்தை சேர்ந்த சிலரை மட்டும் விளக்கேற்ற அனுமதித்து பக்தர்களை மலையடிவாரத்தில் நிறுத்தி வழிபடச் செய்வது சமாளிக்க முடியாத விஷயம் அல்ல’ எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
‘இத்தகைய கூட்டம் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பதுபோல சித்தரிப்பது அரசின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாகவும் உள்ளது’ எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசு இந்தச் சம்பவத்தை வைத்து இரு சமூகங்களுக்கு இடையே வேறுபாடுகளைக் களைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ள நீதிபதிகள், ‘அமைதியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த இடைவெளியைக் குறைத்திருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
‘துரதிஷ்டவசமாக உறுதியான மனஉறுதி இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன’ எனவும் கூறியுள்ளனர்.
அந்தந்த சமூகங்களின் விழாக்கள் வரும்போது தகுந்தவாறு மாற்றியமைக்கப்படக் கூடிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதன் மூலம் சண்டையின்றி அமைதி நிலவும் என நம்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சொன்ன 5 விஷயங்கள் என்ன?
தீர்ப்பில் சில வழிகாட்டுதல்களை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதன்படி,
- தீபத்தூணில் தேவஸ்தானம் விளக்கேற்ற வேண்டும்
- கார்த்திகை தீபத் திருவிழாவின்போது தேவஸ்தானம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும்.
- தேவஸ்தானக் குழுவுடன் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட வேண்டும். இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்.
- பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், விதிகளில் உள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக மலையில் உள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதற்கு பொருத்தமான நிபந்தனைகளை தொல்லியல் துறை விதிக்க வேண்டும்.

ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்ய உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், “கல் தூண் அமைந்துள்ள இடம், எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்” என்கிறார்.
ஆனால், அதனை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கவில்லை எனக் கூறிய அல்தாஃப், “தீபம் ஏற்றுவதற்கு தர்காவுக்கு சொந்தமான பாதை வழியாகவே செல்ல முடியும். வேறு பாதைகள் எதுவும் இல்லை. தர்கா மற்றும் கொடி மரத்தைத் தாண்டிச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும்” என்கிறார்.
இதனை மறுத்துப் பேசும் இந்து அமைப்புகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார், “மலையின் அடிவாரத்தில் இருந்து நெல்லித்தோப்பு பகுதிக்கு செல்வதற்கு கோவில் படிக்கட்டு வழியாக செல்ல வேண்டும். அந்தப் படிக்கட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமானது” என்கிறார்.
“நெல்லித்தோப்பு, தர்கா ஆகியவை அவர்களுக்கு சொந்தம். தர்கா சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஒத்துழைப்பு தருகிறோம்” எனக் கூறுகிறார் அவர்.

“அதேநேரம், தர்கா அமைந்துள்ள இடத்தின் படிக்கட்டை தீபம் ஏற்றுவதற்கு செல்லும் படிக்கட்டாக பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. அதைத் தீர்ப்பில் நீதிபதிகளும் உறுதி செய்துள்ளனர்” எனவும் நிரஞ்சன் எஸ்.குமார் குறிப்பிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை அப்படியே செயல்படுத்தாமல் எதிர்காலத்தில் பிரச்னைகள் வராமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தர்கா நிர்வாகிகளுக்கு இந்த தீர்ப்பில் உடன்பாடில்லை” எனக் கூறும் அல்தாஃப், “ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்திலேயே ஏற்றுவது தான் சரியாக இருக்கும். இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம்” என்கிறார்.
மேல்முறையீட்டில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் அமைச்சர் ரகுபதியும், இந்த தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு