திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் போராட்டக்காரர்கள், தடுப்புகளைத் தாண்டி மலைக்கு ஏற முயன்றனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
படக்குறிப்பு, வழக்கம் போல ஏற்றப்பட்ட தீபம்
அதன்படி, புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் செவ்வாய்க்கிழமை அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே, போராட்டக்காரர்கள் திருப்பரங்குன்றம் கோவில் 16 கால் மண்டபம் அருகே காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கோவிலை நோக்கி முன்னேறினர்.
நீதிமன்றம் கூறியது என்ன?
உயர் நீதிமன்றம் அனுமதியளித்த இடத்தில் இரவு 8 மணிவரை தீபம் ஏற்றப்படவில்லை.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி மனுதாரர்களில் ஒருவரான ராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகம் பகுதியிலிருந்து ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உடன் சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்ற ராம ரவிக்குமார் உள்ளிட்டோர், தமிழக காவல்துறையிடம் நீதிமன்ற நகலை காட்டினர். ஆனால், அவர்களை காவல்துறை அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பான வழக்கு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வருவதால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதையடுத்து மனுதாரர் உள்ளிட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் பிறப்பித்தார்.
மேலும், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இன்று என்ன நிலவரம்?
திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மலை மீது உள்ள தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் சுப்ரமணிய சுவாமி கோவில் வழக்கம்போல் காலை முதலே நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்கள் உடனடியாக செல்லுமாறும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டமாக சேர வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் கோயிலுக்குள் அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.