• Wed. Feb 5th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலையை காக்க போராட்டம்: நீதிமன்றம் திடீர் அனுமதி; ஒரு மணி நேரத்தில் குவிந்த மக்கள் கூட்டம் | Thiruparankundram row: BJP and Hindu front members arrested in Delta districts

Byadmin

Feb 5, 2025


மதுரை: ​திருப்​பரங்​குன்றம் கோயிலுக்​குள் தடையை மீறிப் போராட்​டத்​தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். இதற்​கிடை​யில், ஆர்ப்​பாட்டம் நடத்த நீதி​மன்றம் அனுமதி அளித்​த​தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையைப் பாது​காக்க வலியுறுத்தி கோஷமெழுப்​பினர். போராட்​டத்​தையொட்டி மாவட்டம் முழு​வதும் 4 ஆயிரம் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீதுகாசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளைப் பலியிட முயன்றனர். இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி உள்ளிட்டோர் தர்காவுக்குச் சென்றனர். அப்போது நவாஸ்கனியுடன் வந்தவர்கள் மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், திருப்​பரங்​குன்றம் மலையைப் பாது​காக்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம் நடத்​தப்​படும் என்று இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்​திருந்தன. தமிழகம் முழு​வது​மிருந்து இந்து முன்னணி, பாஜக​வினர் திரள திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், இதற்கு போலீஸ் அனுமதி மறுத்து​விட்​டது. மேலும், மதுரை மாவட்ட நிர்​வாகம் பிப். 3, 4 ஆகிய 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்​பித்தது. வெளியூர்க்​காரர்கள் திரள்வதை தடுக்​கும் வகையில் மாவட்டம் முழு​வதும் சோதனைச்​சாவடிகள் அமைக்​கப்​பட்டன. மேலும், 4 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்புப் பணியில் ஈடுபட்​டனர்.

திருப்​பரங்​குன்றம் பிரதான நுழைவுப்​பகுதி, சந்நிதி தெரு, மலையைச் சுற்றி​லும் பலத்த பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டிருந்​தது. கோயிலுக்கு பக்தர்கள் மட்டும் நடந்​துசெல்ல அனும​திக்​கப்​பட்​டனர். மலைக்​குச் செல்​லும் வழிகளும் முற்றி​லும் மூடப்​பட்டன. அங்குள்ள கடைகள், ஹோட்​டல்கள் அடைக்​கப்​பட்​டிருந்தன. பள்ளிகள் செயல்​பட​வில்லை. இதனால், கோயிலைச் சுற்றி​யுள்ள பகுதிகள் வெறிச்​சோடிக் காணப்​பட்டன.

மாநிலம் முழு​வதும்… போராட்​டத்​தைக் கட்டுப்​படுத்த தென் மாவட்​டங்​களில் 1,633 பேர் கைது செய்​யப்​பட்​டனர். மேலும், தமிழகம் முழு​வ​தி​லும் முன்னெச்​சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி, பாஜக​வினர் ஆயிரக்​கணக்​கானோர் கைது செய்​யப்​பட்டு, வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டனர். திருப்​பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்​பிரமணி​யம், அவரது அலுவல​கத்​தில் இருந்து தொண்​டர்​களுடன் கையில் வேலுடன் புறப்​பட்​ட​போது கைது செய்​யப்​பட்​டார். அவர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “இரவோடு இரவாக பலர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், போராட்டம் வெற்றி பெற்றுள்​ளது. 2026 தேர்​தலில் திமுக​வுக்கு தோல்வியே கிடைக்​கும். இதுவே இந்து சமூகத்​தினர் திமுக​வுக்கு தரும் பரிசு” என்றார்.

மேலும், ரயில், பேருந்து மார்க்​கமாக ஆர்ப்​பாட்​டக்​காரர்கள் வருவதை தடுக்​கும் வகையில் மதுரை, திருப்​பரங்​குன்றம் ரயில் நிலை​யங்​களில் போலீ​ஸார் தீவிர கண்காணிப்​பில் ஈடுபட்​டனர். கோயிலுக்​குள் பக்தர்கள் தீவிர சோதனைக்​குப் பின்னரே அனும​திக்​கப்​பட்​டனர். இந்நிலை​யில், போலீ​ஸாரின் பாது​காப்பு வளையத்​தை​யும் மீறி, பக்தர்கள் போர்​வை​யில் கோயிலுக்​குள் சென்ற இந்து முன்னணி, பாஜக​வினர், சஷ்டி மண்டபத்தை ஒட்டி​யுள்ள அன்ன​தான கூடம் பகுதி​யில் திரண்​டனர்.

போலீ​ஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, இங்கு ஏன் கூட்​டமாக இருக்​கிறீர்கள் என்று கேட்​டனர். அதற்கு, அன்ன​தானம் சாப்​பிடு​வதற்​காகக் காத்​திருப்​பதாக அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி ‘திருப்​பரங்​குன்றம் மலை கந்தர் மலை, கந்தனுக்கு அரோகரா, முரு​க​னுக்கு அரோகரா’ என முழக்​கமிட்​டனர். இதனால், போலீ​ஸாருக்​கும், போராட்​டக்​காரர்​களுக்​கும் இடையே கடும் வாக்கு​வாதம் ஏற்பட்​டது. அவர்களை அங்கிருந்து அப்பு​றப்​படுத்த போலீ​ஸார் முயன்​றனர். அவர்கள் வெளியேற மறுத்​த​தால், குண்​டுக்​கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். கோயில் நடை ஒரு மணியள​வில் சாத்​தப்​பட்டு, கோயில் முன்புற கேட் பூட்​டப்​பட்​டது. அப்போது கோயில் முன் திரண்​டிருந்த இந்து முன்னணி அமைப்​பினர் மீண்​டும் முழக்​கங்களை எழுப்​பினர்.

மாவட்டம் முழு​வதும் பதற்றம்: அவ்வப்​போது 100 பேர், 200 பேர் கூடியபடி கோயிலைப் பாது​காக்க வேண்டுமென முழக்​கங்கள் எழுப்பு​வதும், அவர்களை போலீ​ஸார் கைது செய்​வதும் தொடர்ந்​தது. இந்தப் போராட்​டத்​தால் மதுரை மாவட்டம் முழு​வதும் பதற்றம் நிலவியது. எந்தப் பகுதியி​லிருந்து, யார் வருகிறார்கள் என்ப​தைக் கண்காணிக்க முடி​யாமல் போலீ​ஸார் திணறும் அளவுக்கு பக்தர்கள் போராட்​டத்​தில் உணர்ச்சி பெருக்​குடன் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை வெளிப்​படுத்​தினர்.

உயர்​ நீ​தி​மன்றம் அதிரடி: திருப்​பரங்​குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்​பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்கல் செய்​தனர். அதேபோல, அனுமதி வழங்க ஆட்சேபம் தெரி​வித்​தும் மனு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுக்களை விசா​ரித்த நீதிபதி ஜெயச்​சந்​திரன், பூர்​ணிமா அமர்வு, பழங்​காநத்​தத்​தில் ஒரு மணி நேரம் ஆர்ப்​பாட்டம் நடத்த அனுமதி வழங்​கப்​படு​கிறது” என்று உத்தர​விட்​டனர்.

இதையடுத்து, கோயில் முன் திரண்​டிருந்த ஏராளமான இந்து அமைப்​பினர் மற்றும் பாஜக​வினர் உயர் நீதி​மன்​றத்​தின் அனும​தியை வரவேற்று முழக்​கங்களை எழுப்பி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். தொடர்ந்து, அவர்களை பழங்​காநத்தம் செல்​லு​மாறு போலீ​ஸார் அறிவுறுத்​தினர். மாலை​யில் அங்கு நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கானோர் ​திரண்டு, ​திருப்​பரங்​குன்​றம் மலை​யைப் பாது​காக்​கக் கோரி கோஷமெழுப்​பினர். இ​தில், பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.ராஜா, ஆர்​எஸ்​எஸ் தென்​பிராந்​திய தலை​வர் வன்னிராஜன், இந்து ​முன்னணி ​மாநிலச் செய​லா​ளர்​ ராஜேஷ் உள்​ளிட்​டோர்​ பேசினர்​.

ஒரு மணி நேரத்தில் குவிந்த கூட்டம்: நீதிமன்றம் அனுமதி அளித்த ஒரு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்ட திடலில் குவிந்தனர். இது போலீஸார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் உணர்ச்சிமிகுதியில் பலத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். எனினும், நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு, எவ்வித அசம்பாவிதம், விதிமீறலில் ஈடுபடாமல் கட்டுக்கோப்புடன் போராட்டத்தை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

என்.சன்னாசி/ சுப.ஜனநாயக செல்வம்



By admin