மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் முஸ்லிம்கள் ஆடு, கோழிகள் பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும், பலியிடுவதற்காக யாரும் மலைமீது செல்லாதவாறு, அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி இரவு சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றது. அதையொட்டி, நேற்று காலை ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மலை மீதுள்ள தர்காவுக்கு கந்தூரி கொடுக்க ஆடு ஒன்றை தூக்கிக்கொண்டு, ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர முஸ்லிம் அமைப்பினர் நேற்று மலை மீது செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மலை மேல் உயிர்ப்பலி கொடுக்க தடை இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முஸ்லிம்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, மலை மேல் செல்பவர்களைக் கண்காணிக்க மாநகர காவல் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், அனிதா, திருமலைகுமார் ஆகியோர் தலைமையில், உதவி ஆணையர்கள் குருசாமி, சூரக்குமார் மற்றும் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் மலைக்குச் செல்லும் பாதை, பெரிய ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்காவுக்குச் செல்லும் பக்தர்கள் மட்டுமே, சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், திருமங்கலம் கோட்டாச்சியர் ராஜகுரு, மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி உள்ளிட்டோரும் திருப்பரங்குன்றம் மலையில் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவரும், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான எம்.சோலைகண்ணன் கூறும்போது, “அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றத்தை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், திருப்பரங்குன்றம் மலை மீது தடையை மீறி ஆடு பலியிட முயற்சிப்பதை தடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றும் சதித் திட்டத்துடனும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும்” என்றார்.