திருப்பரங்குன்றம், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம்பெறும் பகுதி.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையின் ஒருபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கோவில் மற்றும் தர்கா தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறுவது இது முதல்முறை அல்ல. நூறாண்டுகளுக்கு மேலாக இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துள்ளன, தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, 1931ஆம் ஆண்டில் லண்டனின் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்புதான்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு, லண்டனின் பிரிவி கவுன்சிலில் நடைபெற்றது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது, லண்டனின் பிரிவி கவுன்சிலே இந்தியாவின் உச்சநீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதப்பட்டது.
லண்டனின் பிரிவி கவுன்சில்
இந்திய உயர்நீதிமன்றச் சட்டம் 1861-இன் மூலம் (The Indian High Courts Act) கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் ஆகிய இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இன்றைய நவீன இந்திய உயர்நீதிமன்றங்களுக்கு இவையே முன்னோடி.
இந்த மூன்று உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து, லண்டனின் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
பிறகு, 1935இல் இந்திய அரசுச் சட்டம் (The Government of India Act 1935) மூலம் இந்திய ஃபெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இது மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாண்டது, ஆனால் வழக்குகளை பிரிவி கவுன்சிலுக்கு கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் அதிகார வரம்பை ஒழிக்கும் சட்டம் (Abolition of Privy Council Jurisdiction Act 1949), இந்தியாவின் உச்சநீதிமன்றமாக பிரிவி கவுன்சிலின் பங்கை முடிவுக்குக் கொண்டு வந்தது.
கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், (தற்போதைய) இந்திய உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. இருப்பினும், பிரிவி கவுன்சில் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றும் இந்திய சட்ட வழக்குகளில் குறிப்பிடப்படுகின்றன.
அவ்வாறு குறிப்பிடப்படுவதில் முக்கியமானது, 1930இல் பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முதலிய, மதுரை தேவஸ்தானம் (மேல்முறையீட்டாளர்)- அலிகான் சாஹிப் மற்றும் பிறர் (பிரதிவாதிகள்)’ இடையிலான வழக்கு (P.C. Appeal No. 5/1930).
இது மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஒரு மேல்முறையீட்டு வழக்கு.
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?
கடந்த 1920இல் மதுரையின் விசாரணை நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்குதான் இதன் தொடக்கப்புள்ளி.
சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட சில நிலங்கள் மற்றும் தர்கா இருந்த இடம் தவிர, முழு மலையையும் கோவில் சொத்து என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிவாதிகள், தர்கா அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் பிரதான மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தமானது என வலியுறுத்தினர்.
மற்றொரு பிரதிவாதியாகக் குறிப்பிடப்படும் பிரிட்டிஷ் அரசாங்கம், மலையின் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் அரசாங்க சொத்து (அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள்) என்று கூறியது.
இந்த வழக்கில், மதுரை விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி 1923 ஆகஸ்ட் 23 அன்று தீர்ப்பளித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கைக்கு எதிராகவும், தேவஸ்தானத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
“மதுரை நீதிமன்றத் தீர்ப்பில் அரசுக்குப் பெரிய அதிருப்தி இல்லை. அதற்குக் காரணம், குன்றின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராதவையாக இருந்திருக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அரசு செயலரோ, தேவஸ்தான நிர்வாகமோ மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்து மேல்முறையீடு செய்தனர்” என பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் (12.5.1931) இந்த வழக்கு தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சார்பாக, மேல்முறையீடு வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1926ஆம் ஆண்டு தொடரப்பட்டது.
அரசின் தலையீடு இருக்க வேண்டுமென்று கருதிய மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசை குறுக்கு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தாமதமாக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதே நாளில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக பிரிவி கவுன்சிலே குறிப்பிட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகள், “மலையின் உரிமை அரசாங்கத்திற்குச் சொந்தமானது எனக் கண்டறிந்ததாக” பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “மெட்ராஸ் உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததோடு, மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது” என்றும் பிரிவி கவுன்சில் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்துதான், 1930இல் லண்டனின் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது மதுரை தேவஸ்தானம்.
அந்த வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மதுரை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
அதன் மூலம், நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்பதும், தேவஸ்தானம் உரிமை கோரியவை அனைத்தும் (தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து முழு திருப்பரங்குன்றம் மலை, கிரிவீதி, சன்னதி வீதி) கோவிலுக்கே சொந்தமானது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
லார்ட் அட்கின்சன், லார்ட் தாங்கர்டன், லார்ட் மேக்மில்லன், சர் ஜார்ஜ் லோண்டஸ், சர் தின்ஷா முல்லா ஆகியோர் அடங்கிய குழு இந்தத் தீர்ப்பை 1931 மே மாதம் 12ஆம் தேதி வழங்கியது.
அந்தத் தீர்ப்பில் திருப்பரங்குன்றம் கோவிலும், மலையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தக் கோவில்கள் பழமையானவை என்பது தெளிவாகத் தெரிகிறது. அநேகமாக அவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகவோ அல்லது அதற்கு முற்பட்டவையாகவோ இருக்கலாம்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இந்திய தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலின் அறிக்கையில், இந்த முழு மலையும் இந்து சமூகத்தினரால் ஒரு ‘லிங்கமாக’ வணங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டு வடிவத்தின் தாயகம் மதுரை என்று நம்புவதற்கு சில காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. கோவில் ஆவணங்களிலும், ஆரம்பக்கால அரசாங்க ஆவணங்கள் சிலவற்றிலும் இந்த மலை சுவாமி மலை அல்லது கடவுளின் மலை என்று குறிப்பிடப்படுகிறது” என்றும் அந்தத் தீர்ப்பு விவரிக்கிறது.
மேலும், கோவில் நிர்வாகிகள் மலையில் பல பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர், நடைபாதைகளை அகலப்படுத்தினர், மரங்களை நட்டனர் மற்றும் மத நோக்கங்களுக்காகவே நிலத்தைப் பயன்படுத்தினர் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக தரிசு அல்லது பொறம்போக்கு நிலங்கள் அரசாங்கத்திற்கே சொந்தமாக இருந்தாலும், நீண்ட காலமாக மலை மற்றும் நிலத்தின் மீது கோவில் தேவஸ்தானம் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததால், இந்த அனுமானம் பொருந்தாது என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பு கூறுகிறது.
ஹஃப்தா தேவஸ்தான நிலங்கள்
மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு (The Madura Country- A manual) எனும் நூல், லண்டனின் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் 4 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஜே.ஹச் நெல்சன் என்பவரால் எழுதப்பட்டு, 1868இல் வெளியான நூல் இது.
அதில், “மதுரைக்கு கிழக்கே 4 மைல்கள் தூரத்தில், சுமார் 500 அடி உயரம் கொண்ட புனித ஸ்கந்த மலை (கந்தர் மலை) உள்ளது. இந்த மலை அதன் புனித நீருக்காகவும், மலையில் உள்ள ஒரு முஸ்லிம் துறவியின் சமாதிக்காகவும் அறியப்படுகிறது.
அதைச் சுற்றி ஒரு சிறிய நினைவு ஆலயம் கட்டப்பட்டுள்ளது (தர்கா). ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அங்கு செல்கிறார்கள்” என்று எழுதியுள்ளார் ஜே.ஹச் நெல்சன்.
இங்கு ஸ்கந்த மலை அல்லது கந்தர் மலை என திருப்பரங்குன்றம் மலையைக் குறிப்பிடும் அவர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஏழு பகுதிகளை ஹஃப்தா (Hafta) தேவஸ்தான நிலங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இந்த ஏழு பகுதிகள் தேவஸ்தானங்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான காரணம், அங்கு நடைபெறும் மத வழிபாடுகள், சடங்குகள் அப்படியே சிறப்பான முறையில் தொடர வேண்டும் என்பதே என்று ஜே.ஹச் நெல்சன் தனது நூலில் கூறுகிறார்.
- மீனாக்ஷி (மதுரை)
- கள்ளழகர்
- கூடல் அழகர்
- திருப்பரங்குன்றம்
- தென்கரை
- திருவேடகம்
- குருவித்துறை
இவையே அந்த ஏழு ஹஃப்தா தேவஸ்தான நிலங்கள் என மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“திருப்பரங்குன்றம் மலை, கோவில்கள் மற்றும் சிக்கந்தர் தர்கா குறித்து சில வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை நமக்குக் கூறுவது ஒன்றுதான், எந்தச் சடங்குகளும் அங்கு புதிதாக மேற்கொள்ளப்படவில்லை. அவை காலம் காலமாக நடப்பவையே” என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்.
பிரான்மலை, கீழவளவு, விளாப்பாக்கம் போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள மலைகளில் கோவிலும், தர்காக்களும் இணைந்தே இருப்பதைக் குறிப்பிடும் காளிங்கன், “தமிழ்நாட்டின் சடங்குகளைத் தன்னுள் அரவணைத்தே இங்கிருக்கும் பல தர்காக்கள் செயல்படுகின்றன” என்று கூறுகிறார்.
“நேர்த்திக் கடனுக்காக ஆடு, கோழிகளைப் பலியிடுவது, மொட்டை அடிப்பது, சமபந்தி விருந்து நடத்துவது, உரூஸ் எனும் கந்தூரி அல்லது சந்தனக்கூடு திருவிழா, பால்குடங்கள் எடுப்பது எனப் பல உதாரணங்களை இதற்குக் கூறலாம்” என்கிறார் அவர்.
“திருப்பரங்குன்றம் மலையில், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இரு சமூகங்களின் சடங்குகளும் அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளன. அவற்றின் நோக்கம் பிற மதங்களின் புனிதத்தைக் களங்கப்படுத்துவது அல்ல. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் அதைத் தெளிவுபடுத்தியுள்ளன” என்று விவரித்தார் பண்பாட்டு ஆய்வாளர் காளிங்கன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு