
-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கக் கூடும்.
திருப்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான நிலப் பிரச்னையில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துத் துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டதும் தப்பியோடியதில் கல்லுாரி மாணவர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
பட்டியல் பிரிவு இளைஞர் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் நமசிவாயம் மறுத்துள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரச்னைக்குக் காரணமான அந்த நிலம் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலமில்லை என்றும், யாருடைய நிலம் என்பது குறித்து வழக்கு நடந்து வருவதால் நீதிமன்றமே அதை முடிவு செய்யும் என்றும் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் கூறினார்.
காவல்துறை, வருவாய்த் துறை கூறுவது என்ன?
கொமரலிங்கம் காவல்துறையினர் மற்றும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, “திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ருத்ராபாளையம் கிராமத்தில் 13 ஏக்கர் 67 சென்ட் இடத்தை குத்தகைக்கு வாங்கியுள்ள ஜல்லிப்பட்டி முருகன், கோபிநாத் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பாக, இவர்களுக்கு குத்தகைக்குக் கொடுத்த சிலருக்கும், அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி வைத்துள்ள அஸ்வின் என்பவருக்கும் இடையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.”
“வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், குத்தகைக்கு எடுத்தவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. அங்கு விவசாயம் செய்து வந்த அவர்கள், ஒரு வீட்டையும் கட்டியுள்ளனர். அதைப் பராமரிக்கும் பொறுப்பில் சிலரைத் தங்க வைத்துள்ளனர்.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி நள்ளிரவில் 1:30 மணியளவில் அங்கு சென்ற ஒரு கும்பல், பொக்லைன் மற்றும் லாரிகள் உதவியுடன் அந்த வீட்டை இடித்து முற்றிலும் தரைமட்டமாக்கியுள்ளது. அங்கு தங்கியிருந்த 2 இளைஞர்களைத் தாக்கியுள்ளது.”

“தாக்கப்பட்ட இளைஞர்கள் ஜனவரி 27ஆம் தேதி காலையில் அங்கிருந்து தப்பி, ருத்ராபாளையம் ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் லாரியில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த லாரியை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.
பிரச்னைக்குரிய நிலத்தில் காலை வரை இருந்த பலரும் தப்பியோடியுள்ளனர். சிலர் அமராவதி ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களில் உடுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான மணிகண்டன் என்பவரைக் காணவில்லை.”
லாரி மீது ஊர் மக்கள் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதேபோல், பிரச்னைக்குரிய நிலத்தில் இருந்த வீட்டை இடிப்பதற்காக பொக்லைன், லாரி போன்றவை நள்ளிரவில் செல்வதாகக் கூறப்படும் காணொளியும் அந்த வீட்டுக்கு அதிகாலை 1:30 மணியளவில் ஏராளமானவர்கள் செல்வது போன்ற காணொளியும் பின்னர் வெளியாயின. இந்தக் காணொளிகளின் உண்மைத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை.

பட்டியல் பிரிவு இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு
லாரி மீதான தாக்குதல் தொடர்பாக ருத்ராபாளையத்தைச் சேர்ந்த சிலரை கொமரலிங்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து, ஜனவரி 31ஆம் தேதி ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பொது மக்கள், கொமரலிங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வீட்டை இடித்தவர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் திரும்பிச் சென்று கொண்டிருந்த லாரியை சேதப்படுத்தியதாக ஊர் மக்கள் 5 பேரை கைது செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களிடம் பேசிய சுகன்யா என்பவர், ”ஜனவரி 27ஆம் தேதி இரவில் ருத்ராபாளையத்தில் உள்ள குத்தகை விவசாய நிலத்திற்குள் 120க்கும் மேற்பட்டோர் புகுந்துள்ளனர். அங்கிருந்த வீட்டை பொக்லைன் வைத்து இடித்து, அங்கு பணிபுரிந்து வந்த இரு இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, விடிய விடிய அடித்துள்ளனர். தாகத்திற்குத் தண்ணீர் கேட்ட பட்டியல் பிரிவு இளைஞரை சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

பட்டியல் பிரிவு இளைஞரின் சகோதரி கூறியது என்ன?
பட்டியல் பிரிவு இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்ததாகக் கூறப்படுவது பற்றி அவரது சகோதரி பிரியாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
”எனக்கு 2 தம்பிகள். அவன்தான் கடைசி. ஜனவரி 27ஆம் தேதி காலையில், அவன் அங்கேயிருந்து தப்பி ஓடிவந்து அவனுடைய நண்பரின் பைக்கில் என் வீட்டுக்கு வந்தான். அவன்தான் அன்று எங்களை எழுப்பி, எனது கணவரிடம் நடந்ததைச் சொன்னான். இரவில் அவனை நிர்வாணமாக்கி அடித்திருக்கிறார்கள். காலையில் ஒரு வேட்டி மட்டும் கொடுத்துள்ளனர். சோளக்காட்டு பொம்மையின் உடையை எடுத்துப் போட்டுக்கொண்டு முதலில் நண்பரின் வீட்டிற்குப் போயிருக்கிறான்.”
”இரும்புக் குழாயை வைத்து முதுகில் அடித்திருந்ததைக் காட்டினான். முதுகெல்லாம் அதன் தடம் பதிந்திருந்தது. அப்போதுதான் தன்னை நிர்வாணமாக்கி அடித்ததையும், தாகத்திற்குத் தண்ணீர் கேட்டதற்கு சிறுநீரைக் குடிக்க வைத்ததாகவும் கூறினான். அதைக் கேட்டு நாங்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து அங்கே போகும்போதுதான், எதிரில் அந்த அடியாட்கள் வந்த லாரி வந்தது. அதைத்தான் மக்கள் தாக்கினார்கள். அதற்குத்தான் இப்போது வழக்குப் போட்டு ஊர்க்காரர்கள் பலரையும் கைது செய்துள்ளனர்” என்றார் பிரியா.
ஊர் மக்கள் கூறியது என்ன?
ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பொது மக்களில் சிலர் பெயர் கூற விரும்பாமல் சில விஷயங்களைப் பகிர்ந்தனர். லாரியை ஊர் மக்கள் அடித்து நொறுக்கியது தொடர்பான காணொளியை வைத்து, பலரையும் கைது செய்துள்ள காவல் துறையினர், பட்டியல் பிரிவு இளைஞரை நிர்வாணப்படுத்தி, சிறுநீரைக் குடிக்க வைத்ததாகக் கூறுவதற்கு காணொளி ஆதாரம் கேட்பதாகக் குற்றம் சாட்டினர்.
”இரவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த கும்பல், இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்களின் மொபைல் போன்களை அடித்து நொறுக்கியுள்ளது. அப்போது அவர்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை என்ற நிலையில், பட்டியல் பிரிவு இளைஞரை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் குடிக்க வைத்ததை யார் வீடியோ எடுத்திருக்க முடியும்.” என்றனர்.
பட்டியல் பிரிவு இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்ததாகப் பரவிய குற்றச்சாட்டு, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இந்நிலையில், ஜனவரி 27 காலையில் ருத்ராபாளையம் ஊர் மக்கள் வந்ததும், தப்பியோடி ஆற்றில் குதித்ததாகக் கூறப்படும் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரின் சடலம் ஆற்றிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி மீட்கப்பட்டது.

காவல்துறை கூறியது என்ன?
வீட்டைச் சேதப்படுத்தியது தொடர்பாகவும், லாரியையும் அதில் வந்தவர்களையும் தாக்கியது தொடர்பாகவும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கொமரலிங்கம் காவல்துறையினர் தெரிவித்தனர். இருதரப்பிலும் மொத்தம் 15 பேரை கைது செய்திருப்பதாக, பிபிசி தமிழிடம் தெரிவித்தார் உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம்.
”இரு தரப்பு புகார்களையும் பதிவு செய்துள்ளோம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு தரப்பில் 9 பேரையும், மற்றொரு தரப்பில் 6 பேரையும் கைது செய்திருக்கிறோம். மேலும் சிலரைத் தேடி வருகிறோம். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டியல் பிரிவு இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அதை அவர்களே தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்” என்றார் நமச்சிவாயம்.
நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர் கூறுவது என்ன?
நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த இருவரில் ஒருவரான கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான ஜல்லிபட்டி முருகன் தற்போது உடுமலை தொகுதிக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜல்லிபட்டி முருகன், ”நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட அந்த நிலத்தில் 13 பேருக்கு பட்டா தரப்பட்டிருந்தது. மொத்தம் 13 பேருக்குத் தரப்பட்ட 13.5 ஏக்கர் நிலத்தை நானும் கோபிநாத்தும் சேர்ந்து 10 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வீடும் கட்டியிருக்கிறேன்.
அங்குதான் இரு இளைஞர்களும் தங்கியிருந்தனர். அஸ்வின் என்பவர், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன் இருந்த நில உரிமையாளரிடம் வாங்கியதாக ஆவணம் காண்பித்து பட்டா வாங்கியுள்ளனர். அவரது ஆட்கள்தான் எங்கள் இடத்தில் புகுந்து வீட்டை இடித்துள்ளனர்” என்றார்.
”வீட்டை பொக்லைன் வைத்து இடித்துவிட்டு, அங்கிருந்த அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த இரு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். நள்ளிரவு ஒன்றரை மணியில் இருந்து ஆறரை மணி வரை இதைச் செய்துவிட்டுப் பலர் இடத்தை விட்டுப் போய்விட்டனர்” என்றார்.
பட்டியல் பிரிவு இளைஞர் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி அவரிடம் கேட்டபோது, ”அப்படி எதுவும் எங்களிடம் அவர் கூறவில்லை” என்றார்.

நிலம் யாருக்குச் சொந்தமானது?
பிரச்னைக்குரிய நிலத்துக்கு பட்டா வாங்கி வைத்துள்ள அஸ்வின் தலைமையில் வந்தவர்கள்தான், வீட்டை இடித்து, இருவரையும் தாக்கியதாக முருகன் தரப்பில் கூறுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் தரப்பட்டுள்ளது. அஸ்வின் தற்போது தலைமறைவாக இருப்பதாக கொமரலிங்கம் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அஸ்வின் தரப்பில் பேசுவதற்கு முயன்றும் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
பிரச்னைக்குரிய அந்த நிலம், பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரித்துத் தரப்பட்ட நிலம் என்ற தகவலும் பரவிய நிலையில், அதுபற்றிய விவரங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமாரிடம் பிபிசி தமிழ் கோரியது.
அதற்குப் பதிலளித்த அவர், ”அந்த நிலம் நிலச் சீர்திருத்த சட்டத்தின்படி, அரசால் கையகப்படுத்தப்பட்ட இடம்தான். முதலில் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அந்த இடத்தில் பட்டா கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பயன்படுத்தாததால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ”அதன் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தில் பட்டா தரப்பட்டுள்ளது. அதை வாங்கியவர்கள், 20 ஆண்டுகள் கழித்து அதைப் பிறருக்கு விற்றுள்ளனர். அந்த இடத்தை வாங்கியதாக அஸ்வின் உரிமை கோருகிறார். கோபிநாத் தரப்பு, குத்தகைக்கு எடுத்துப் பல ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்துள்ளதாகக் கூறுகிறது. அது பட்டா நிலம் என்பதால் நாங்கள் தலையிட முடியாது. அந்த நிலம் தொடர்பாக வழக்கு நடப்பதால் ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும்” என்றார்.
இந்த விவகாரத்தில் சாதிய மோதல்கள் எதுவுமில்லை என்று கூறிய வருவாய் கோட்டாட்சியர், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்று ஆவணம் வைத்திருப்பவர்கள், குத்தகைக்கு எடுத்து அனுபவத்தில் வைத்திருக்கும் ஒருவர் இவர்கள் யாருமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களில்லை என்றார். குத்தகைக்கு விவசாயம் செய்து வருபவர்களிடம் பணியாற்றி தாக்கப்பட்ட இளைஞர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அஸ்வின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கினார் வருவாய் கோட்டாட்சியர் குமார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு