- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில், 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய 9 படைகள் பணியாற்றி வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அலகுமலை –சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவருடைய மனைவி அலமேலு (வயது 75) ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் தோட்டத்தில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் இருந்தனர். ஐடி ஊழியரான செந்தில்குமார், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார். மகள் பத்மாவதி, சென்னிமலையில் தனது கணவர் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று, காலை 6 மணியளவில் இவர்களின் தோட்டத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த வலுவூரான் என்கிற என்ற நபர், தெய்வசிகாமணிக்கு முடித்திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் ஏராளமான ரத்தக் காயங்களுடன் தெய்வசிகாமணி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் அலமேலுவும், செந்தில்குமாரும் படுகாயங்களுடன் இறந்து கிடந்தனர்.