
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது” என்று கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது.
திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழில் சாதி அடையாளத்துடன் உபயதாரர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், “இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் திருவிழாவில் சாதியைப் பெருமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என, நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் மிகப் பழமையான கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிதம்பர சுவாமிகள் என்பவரால் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக, இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் கூறுகிறது.
கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறையால் 13 நாட்கள் நடத்தப்படும் இந்த விழா, பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இதற்கான விழா அழைப்பிதழில், விழாவை முன்னின்று நடத்தும் உபயதாரர்களின் விவரங்களை ‘நிகழ்ச்சி நிரல்’ என்ற தலைப்பில் கோவில் நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.
‘நிகழ்ச்சி நிரலில் சாதிப் பெயர்கள்’
“அழைப்பிதழில் உபயதாரர்கள் பட்டியலில் சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு அச்சடித்துள்ளனர்” எனக் கூறுகிறார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமரன் நாகன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இவர், “கோவில் அழைப்பிதழ்களில் சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது என ஒரு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.
“அந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ‘சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது’ என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது” என அவர் குற்றம்சாட்டினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இதை சமரன் நாகன் குறிப்பிட்டுள்ளார்.
“பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் சாமிக்கு மூன்று கால பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு நாள் இரவும் சாமியை அலங்கரித்து வீதி உலாவுக்கு அனுப்புவது வழக்கம்,” என்கிறார் சமரன் நாகன்.
குதிரை வாகனம், வெள்ளி வாகனம், மயில் வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சாமி வலம் வருவதாகக் கூறிய சமரன், “பரிவேட்டை என்ற பெயரில் அனைத்து வீதிகள் வழியாகவும் சாமி வலம் வரும். ஆனால், பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு வராமல் இருந்தது” என்றார்.
பட மூலாதாரம், HRCE
‘மனுவை ஏற்காத அதிகாரிகள்’
“நாங்களும், ‘எங்கள் பகுதிக்குள் வர வேண்டாம். ஓர் இடத்தில் நிறுத்தினால் சாமி கும்பிட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறினோம். அதையும் கேட்கவில்லை. இதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றோம்” என அவர் கூறினார்.
‘கடந்த சில ஆண்டுகளாக பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு சாமி உலா வருவதால் இதை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும்’ என கோவில் அதிகாரிகளிடம் சமரன் நாகன் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உபயதாரர்கள் பட்டியலில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குமாறு வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
“அதற்கு ‘இவை உடனே மாறாது’ என்று அவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் மனு கொடுத்தோம்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், HRCE
ஸ்ரீபாதம் தாங்கிகளால் என்ன சிக்கல்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கோவில் தொடர்பாக வேறொரு பிரச்னையையும் சமரன் நாகன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது மனுவில், “சாமி சிலைகளைத் தூக்கும் நபர்கள், ‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’ என்ற பெயரில் சாதி அடையாளங்களுடன் வலம் வருகின்றனர். அவர்களுக்குப் பதிலாக தன்னார்வலர்கள் மூலம் சாமியைத் தூக்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறினோம். சாமி சிலைகளைத் தூக்குவதற்கு உள்ளூர் பட்டியல் சாதி இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.” என்று அவர் தெரிவித்தார்.
இந்த மனுவில், “கோவில் செயல் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே ஸ்ரீபாதம் தாங்கிகளாகப் பங்கேற்பதை அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” சமரன் நாகன் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
தஞ்சாவூர் வழக்கை மேற்கோள் காட்டி நீதிபதி தீர்ப்பு
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, பிப்ரவரி 17ஆம் தேதி தீர்ப்பளித்தார். கோவில் அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு 2025ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் விழா அழைப்பிதழ் குறித்த அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், “கோவில் திருவிழா என்பது இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டாடப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தனர். இவற்றில் பட்டியல் சாதியினரும் அடங்குவதாகக் கூறிய நீதிபதிகள், “அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதிப் பெயர்களை பட்டியலிடும் நடைமுறை தேவையற்றது” எனத் தீர்ப்பளித்தனர். “அரசு நடத்தும் கோவில் திருவிழாக்களில் தனிப்பட்ட எந்த சாதியின் பெயரும் இடம்பெறக் கூடாது என்று அவர்கள் தீர்ப்பளித்திருந்தனர்.
திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கின் தீர்ப்பில் இதைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி பரத சக்கரவர்த்தி, “உத்தரவைப் படித்துப் பார்க்கும் போது சாதிப் பாகுபாட்டைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்பதை அறியலாம்.” எனக் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
“இந்த ஆண்டு அழைப்பிதழ் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டுவிட்டதால் 20-ஆம் தேதி தொடங்கும் விழாவுக்கு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது” எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, “அடுத்த திருவிழாவில் சாதிப் பெயரின்றி அழைப்பிதழ் அச்சிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
“சாதியை ஒழிப்பது மட்டுமே நாட்டிலுள்ள அரசு அமைப்புகளின் முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்துவதாக இருக்கக் கூடாது,” என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழாவைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, “அறநிலையத்துறை நடத்தும் ஒரு திருவிழா, சாதியைப் பரப்பவும் சாதியை விளம்பரப்படுத்தவும் பெருமைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு துண்டுப் பிரசுரம் அச்சிடப்பட்டாலும் சாதிப் பெயரைக் குறிப்பிடாமல் உபயதாரரின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட வேண்டும்” என தீர்ப்பு கூறியுள்ளது.
‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’ தொடர்பான பிரச்னைக்கும் நீதிமன்றம் தீர்வு அளித்துள்ளது. “கோவிலில் உற்சவர் புறப்பாடு நடக்கும்போது அங்கு தன்னார்வலர்கள் இருப்பார்கள். ஒரு பெட்டியில் பெயர்களைப் போட்டு அதன்மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தப் பணியை திருவிழாவை நிர்வகிக்கும் நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
“‘ஸ்ரீபாதம் தாங்கிகள்’ குறித்த பொறுப்பை கோவில் நிர்வாகம் கையில் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம்” என்றார் வழக்கு தொடர்ந்த சமரன் நாகன்.
இதுதொடர்பாக, திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் குமாரவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. “நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிப்பதற்கு விரும்பவில்லை” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
‘பெயரை மட்டும் குறிப்பிடுவதில் சிக்கல்’ – அறநிலையத்துறை அதிகாரி
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில் சில விவரங்களைத் தெரிவித்தார்.
“இவையெல்லாம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. விழா அழைப்பிதழில், சாதிப் பெயருடன் ‘வகையறா உபயம்’ என குறிப்பிடப்படுகிறது. பலரையும் ஒருசேர குறிக்கக் கூடியது என்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இதனால் ஒரு தனிநபரின் பெயரை மட்டும் குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளது,” என்கிறார் அவர்.

“கந்தசாமி கோவில் திருவிழா தொடங்கிவிட்டதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. திருவிழா முடிந்த பிறகு குறிப்பிட்ட பிரிவினருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது பதில் பெற்று, இனி யாருடைய பெயரைப் போட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீபாதம் தாங்கிகள் குறித்துக் கேட்டபோது, “சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்படியோர் அடையாளத்துடன் வந்திருக்கலாம். ஆனால் கோவில் நிகழ்ச்சிகளில் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்றார்.
“கோவிலில் அவர்களுக்கு பச்சை வேட்டியைக் கொடுக்கிறோம். அவர்களும் துண்டு அல்லது டீ-ஷர்ட் போட்டுக் கொள்கின்றனர். சாதி அடையாளத்தைக் காட்டுவதில்லை. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின்படி வரும் காலங்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள் நியமிக்கப்படுவார்கள்,” என அவர் விளக்கம் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு