பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் சில இடங்களில் தங்கமும் லித்தியமும் இருப்பதாக இந்திய நிலவியல் துறை தெரிவித்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன?
உண்மையில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன?
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால், அது இரு தனித்தனி பகுதிகள் இல்லையென்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதி என்று புவிவியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தங்கம் விலை தினமும் புதிய உயரங்களைத் தொட்டு வரும் நிலையில், இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழா சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய அந்நிறுவன இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார் “திருவண்ணாமலை ராஜபாளையம் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதேபோல, மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன,” என்று அவர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் தங்கமும் லித்தியமும் உள்ள இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான தென் மண்டல இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார், தான் சொன்ன தகவல்கள் அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“அந்த விழாவில் பேசும்போது, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் 175 ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பேசினேன். இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்தான் இந்தியாவில் பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களைத் தனது ஆய்வுகளின் மூலம் அறிந்து சொல்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டேன். அப்படிச் சொல்லும்போது தமிழ்நாட்டில் தங்கம் சில இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தேன். அது மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திருவண்ணாமலையிலும் ராஜபாளையத்திலும் தங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது எப்படி?
இந்தச் செய்தியைப் படித்த பலரும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) பகுதியிலும் தங்கம் கிடைப்பதாகப் புரிந்துகொண்டனர். ஆனால், இங்கு குறிப்பிடப்படும் ராஜபாளையம் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டமடுவு ஊராட்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம்.
கடந்த 2022-23இல் திருவண்ணாமலை மாவட்டம் ராஜபாளையத்தில் இரும்புடன் சேர்த்து தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை நிலவியலாளர்களான ஆர். ராம்பிரசாத், சுபா ராய் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் 2024 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில்தான், அந்தப் பகுதிகளில் தங்கம் இருப்பது தெரிய வந்தது.
ஆய்வறிக்கை கூறும் தகவல்கள் என்ன?
பட மூலாதாரம், Geological Survey of India/Facebook
- திருவண்ணாமலையில் உள்ள ராஜபாளையத்தில் எளிதாகப் பிரித்து எடுக்கக்கூடிய வகையிலான தங்கமாக, பிற உலோகங்களுடன் கலந்து என இரு வகைகளில் தங்கம் கிடைக்கிறது.
- இந்த தங்கத் தாதுக்கள் பெரும்பாலும் இரும்புக் கல் எனப்படும் Banded Magnetite Quartzite (BMQ) பாறைகளிலேயே கிடைக்கின்றன. சில இடங்களில் வேறு உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கின்றன.
- பொதுவாக தங்கச் சுரங்கங்கள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், தோண்டி எடுக்கப்படும் தாதுக்களில் 500ppb (parts per billion) அளவுக்கு தங்கம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்கத் தாதுக்கள், அதாவது 554ppb – 24,293ppb தரமுள்ள தங்கத் தாதுக்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
- இங்கு ஒட்டுமொத்தமாக 3.2 டன் அளவுக்குத் தங்கம் கிடைக்கலாம். ஆனால், இதை உறுதி செய்ய மேலும் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.
‘ஆறுகளிலேயே கிடைக்கும் தங்கம்’
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டின் சில இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை எடுப்பது பொருளாதார ரீதியில் பலனளிக்குமா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார் விஜயகுமார்.
பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அம்மாதிரி இடங்களில் யாரும் தங்கத்தை எடுக்க மாட்டார்கள் என்கிறார் அவர்.
“கோலார் தங்க வயல் பகுதியில் இன்னும் தங்கம் கிடைக்கும். ஆனால், வெளியில் ஒரு கிராம் தங்கத்தை வாங்க செலவு செய்யும் தொகையைவிட அங்கு தங்கம் எடுக்க அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் அங்கிருக்கும் தங்க வயல் கைவிடப்பட்டது.
ஆகவே ஓரிடத்தில் தங்கம் கிடைக்கிறதா என்பது முக்கியமல்ல. மாறாக, அதை எடுப்பது லாபகரமாக இருக்குமா என்பதுதான் மிகவும் முக்கியம். அதற்குச் சில இடங்களில் வாய்ப்புள்ளது. அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று விஜயகுமார் விளக்கினார்.
“நான் இயக்குநர் ஜெனரலாக இருக்கும்போது இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளேன். அப்போது அங்குள்ள ஆறுகளிலேயே சிலர் சலித்து தங்கத் தாதுக்களை பிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே, தங்கம் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிதான் அது. கூடுதல் ஆய்வுகளில் இதை உறுதி செய்ய வேண்டும்” என்றார் இந்திய நிலவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரலான எஸ். ராஜு.
தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, “லித்தியம் தற்போது மிக முக்கியமான உலோகம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் லித்தியம் கிடைக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
எஸ். ராஜுவும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். “பல இடங்களில் உப்பு வயல்களில் லித்தியம் படிவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அயர்லாந்து, பின்லாந்தில் உப்பு வயல்களில் லித்தியம் எடுக்கிறார்கள்.
நான் இயக்குநர் ஜெனரலாக இருந்தபோது தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பு வயல்களில் லித்தியம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பார்த்தேன். வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. வேதாரண்யம் உள்ளிட்ட பிற உப்பு வயல் அமைந்துள்ள பகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்து பார்க்கலாம்,” என்றார் அவர்.
கடந்த 2023 பிப்ரவரியில் இந்திய அரசு தனது பத்திரிகைத் தகவல் அலுவலகம் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது, ஜம்மு – காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் சலால் – ஹைமனா பகுதியில் பெரிய அளவில் லித்தியம் இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. அதுபோக, உலகளவில் தற்போது ஆஸ்திரேலியாவில்தான் மிகப்பெரிய அளவில் லித்தியம் கிடைத்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு