படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர்கட்டுரை தகவல்
திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இரண்டு காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுள்ளனர்
இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் சதிஷ் குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்துக்கொண்ட தகவல் இங்கே.
”ஆந்திர மாநிலத்திலிருந்து வாழை தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று செப்டெம்பர் 29 திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. வாகனத்தின் ஓட்டுனர் தனது அக்கா மற்றும் அக்காவின் மகளான 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்வதற்காக உடன் அழைத்து வந்துள்ளார்.
திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்” என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்கிறார் சதிஷ் குமார்.
அப்போது, ஓட்டுனர் வாழை தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் உறவினர்கள் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார் என்கிறார் சதிஷ் குமார்.
ஆனால், போலீஸார் அவரை மிரட்டி 19 வயது பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் அழைத்து சென்றதாகவும், காட்டுப் பகுதியின் அருகே 19 வயது பெண்ணை இரண்டு போலீஸாரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் சதிஷ் குமார்.
”அதன் பிறகு போலீஸார் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அப்பகுதி மக்கள் இரண்டு பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.” என்கிறார் சதிஷ் குமார்
இது குறித்த தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் நேரில் விசாரணை
படக்குறிப்பு, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி
தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி திருவண்ணாமலைக்கு வந்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை காவலர்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. காவலர்கள் இரண்டு பேருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 நாட்களுக்குள் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்படும் என்று கூறிய ஏ.எஸ்.குமாரி, “காவலர்களுக்கு மாதம் ஒருமுறை விழிப்புணர்வு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.” என்றார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY
படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி ( கோப்புப் படம்)
திருவண்ணாமலையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“திருவண்ணாமலையில் காவலர்களாலேயே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் உச்சம்” என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, “திருவண்ணாமலை அருகே பெண்ணொருவர், காவலர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலை சம்பவத்திற்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தி.மு.க ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம். குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே குற்றவாளிகளாக உருமாறி வருவது நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா” என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.