பட மூலாதாரம், X/Udhaystalin
தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாகக் கூறி 22 விவசாயிகளை டிசம்பர் 14ஆம் தேதியன்று போளூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், “அதே நாளில் தி.மு.க மண்டல மாநாடு நடந்தது. அதற்காக ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதற்காக எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்” என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் அருள் ஆறுமுகம்.
இதன் பின்னணியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். “ஆனால், எனக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என பிபிசி தமிழிடம் எ.வே.கம்பன் தெரிவித்தார்.
மாநாட்டுக்கு ஏரி மண் எடுக்கப்பட்டதா?
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்டு மலப்பாம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் டிசம்பர் 14ஆம் தேதி தி.மு.க இளைஞரணியின் வடக்கு மண்டல மாநாடு நடந்தது.
அந்த மாநாட்டில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பட மூலாதாரம், Farmers
இந்நிலையில், மலப்பாம்பாடி ஏரியில் இருந்து சற்று தொலைவில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாகக் கூறிய உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் அருள் ஆறுமுகம், “இதற்காக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏரியில் இருந்து மண் அள்ளத் தொடங்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தொடக்கத்தில் அரசு அனுமதியுடன் மண் எடுப்பதாக அப்பகுதி விவசாயிகள் நினைத்தனர். ஆனால், ஒரே வாரத்தில் சுமார் 20 அடி ஆழம் வரை மண்ணை எடுத்துள்ளனர்.”
“ஏரியின் மேல்பாகத்தில் வண்டல் மண், களிமண் ஆகியவை இருக்கும். சுமார் 2 அடிக்குப் பிறகு சரளை மண் வெளிவரும். இவர்கள் களிமண்ணை ஏரிக்கு வெளியில் கொட்டிவிட்டு சரளை மண்ணை எடுத்துள்ளனர்” என்கிறார் அவர்.
இதுதொடர்பாக, திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமனிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
அதுகுறித்துப் பேசிய உழவர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த விவசாயி விநாயகம், “சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்ப்பதாக அவர் கூறினார். மேலும், கனிமவளத் துறையின் உதவி இயக்குநருக்கும் புகார் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்கிறார்.
பட மூலாதாரம், Farmers
‘புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை’
அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் இராம பிரதீபனை விவசாயிகள் சந்தித்துப் பேசினர்.
“அவரிடம், அனுமதியின்றி மண் எடுப்பதால் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார், அருள் ஆறுமுகம்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநாட்டுக்காக மண்ணை எடுத்து சாலை அமைத்துள்ளனர். நீர்நிலைகள் மீது சாலைகளோ, கட்டுமானங்களோ அமைக்கக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஆனால், அதையும் மீறி சாலை அமைத்தனர்” என்று குற்றம் சாட்டினார்.
மலப்பாம்பாடி, சாணார்பாளையம், பள்ளியம்பத்து ஆகிய மூன்று கிராமங்களுக்கு முக்கிய நீராதாரமாக இந்த ஏரி உள்ளது. இப்பகுதியில் கரும்பு, நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கும் இந்த ஏரியை முக்கியமானதாக விவசாயிகள் பார்க்கின்றனர்.
“அதிகளவில் ஏரி மண்ணை எடுத்துவிட்டால் ஊர் அழிந்துவிடும் என்பதால் பெண்களை அழைத்துச் சென்று ஏரியில் நின்று போராட்டம் நடத்தினோம்” என்கிறார், சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி மீரா பாய்.
தி.மு.கவினரின் வசதிக்கு ஏற்றார்போல மண்ணை எடுத்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த மீரா பாய், “இரண்டு பேருந்துகள் செல்வது போல சாலை அமைத்தனர். இதை எதிர்த்ததால் எங்களை காவல்துறை கைது செய்தது” என்றார்.
பட மூலாதாரம், Farmers
நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு
விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக டிசம்பர் 12 அன்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
“ஏரியில் நடந்த மண் திருட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீர்நிலைகளின் மீது சாலை போடுவதைத் தடுக்க வேண்டும் எனவும் கூறினோம். அதை ஏற்காத அதிகாரிகள், ‘முதலமைச்சர் வரும்போது ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது’ என்றனர். நாங்கள் அதை ஏற்கவில்லை” என்று குறிப்பிட்டார், அருள் ஆறுமுகம்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, உழவர் உரிமை இயக்கத்தினர் அறிவித்தனர்.
“அன்றைய தினம் (டிசம்பர் 14) மாநாடு நடந்தது. ஆனால், அதிகாலையிலேயே எங்களைக் கைது செய்யும் பணியில் காவல்துறை இறங்கிவிட்டது” எனக் கூறும் அருள் ஆறுமுகம், “போளூர், ஆரணி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டனர்” என்கிறார்.
மேலும், “இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் ஊரில் ஒருவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்திருந்தனர். அவர்கள் பச்சைத் துண்டு அணிந்திருந்த காரணத்தால் கைது செய்துவிட்டனர்” என்றார்.
அதே நாள் மாலையில் கைதான விவசாயிகளை போளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது நான்கு பிரிவுகளில் போளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Farmers
‘அரசுக்கு எதிராக முழக்கம்’
டிசம்பர் 13 அன்று போளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகம் அளித்துள்ள புகார் மனுவில், “போளூர் டு செங்கம் சாலையில் வசூர் சாய்பாபா கோவில் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அருள் உள்பட பெயர் முகவரி தெரியாத 22 பேர் சட்டத்திற்கு எதிராகக் கூடி தமிழ்நாடு அரசை அவதூறான வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தனர்” எனக் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலையைத் தடுத்து நிறுத்தும் செய்திகளை எழுதிக் கொண்டு, கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ததாக” புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, “பொது மக்களை தமிழ்நாடு அரசுக்கு எதிராகத் திசை திருப்பி போராட்டம் செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முற்பட்டபோது தப்பியோடிவிட்டதாகவும்” புகார் மனுவில் உதவி ஆய்வாளர் விநாயகம் கூறியுள்ளார்.
ஆனால், “போளூர் – செங்கம் சாலையில் நின்று நாங்கள் முழக்கமிட்டதாகக் கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அந்த நேரத்தில் நாங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்கிறார் அருள் ஆறுமுகம்.
தங்களைக் கைது செய்ததன் பின்னணியில் எ.வ.வேலுவின் மகன் எ.வே.கம்பன் இருப்பதாகக் கூறிய அருள் ஆறுமுகம், “மாநாடு நடந்த இடத்தின் அருகிலுள்ள சில இடங்கள் அவர்களுக்குச் சொந்தமானது. அருகிலுள்ள ஆலை ஒன்றின் வளாகத்தில்தான் மாநாட்டுக்கான மண்ணைக் கொட்டி வைத்திருந்தனர்” என்றார்.
ஏரியில் இருந்து சுமார் 20 அடி ஆழம் வரை மண்ணை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், “இதற்கு அரசு அனுமதி கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே கொடுத்திருந்தால் அதற்கான கடிதத்தைக் காண்பித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அதிகாரிகள் செய்யவில்லை” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Farmers
‘ஆபத்தான சூழலை உருவாக்கிவிட்டனர்’
ஏரியில் மண் அள்ளப்பட்டது தொடர்பான புகைப்படங்களை பிபிசி தமிழிடம் விவசாயிகள் பகிர்ந்தனர். அதில் மண் அள்ளப்பட்டு லாரிகளில் ஏற்றிச் செல்வது தொடர்பான படங்களும் மண் எடுக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ஏரியின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி மீரா பாய், “மழைக் காலத்தில் ஏரிக்குள் யாராவது சென்றால் அப்படியே உள்ளே சென்றுவிடும் அளவுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிட்டனர்” என்கிறார்.
“சுமார் ஆயிரம் லாரிகளுக்கு மேல் சரளை மண்ணை அள்ளியுள்ளனர். தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான லாரிகளை இதற்குப் பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்தார் விவசாயி விநாயகம்.
மேலும் பேசிய விநாயகம், “மாநகராட்சி எல்லைக்குள் மலப்பாம்பாடி ஏரி வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளருக்கும் புகார் கடிதத்தை அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.

அதிகாரிகள் கூறும் விளக்கம் என்ன?
“ஆனால், இதுதொடர்பாக எந்த புகார் மனுவும் வரவில்லை” எனக் கூறுகிறார், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மாநகராட்சி எல்லைக்குள் ஏரி வந்தாலும் மண் எடுப்பது தொடர்பாக வருவாய்த் துறையும் கனிமவளத் துறையும்தான் அனுமதி அளிக்க வேண்டும்.
நீர்பிடிப்புப் பகுதிகள் எதுவும் எங்கள் கட்டுப்பாட்டில் வருவதில்லை. அதுதொடர்பாகத் தடையில்லா சான்றையும் நாங்கள் வழங்குவது இல்லை” என்று தெரிவித்தார்.
அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சுமத்துவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் பிபிசி தமிழ் பேச முயன்றது.
அதற்கான முயற்சிகள் பலன் அளிக்காததால் திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனசுந்தரத்திடம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது அவர், “ஏரியில் மண் அள்ளப்பட்டதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரிய வரும்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், facebook
‘எந்த சம்பந்தமும் இல்லை’ – எ.வே.கம்பன்
கைது தொடர்பாக விவசாயிகள் சுமத்தும் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க மருத்துவ அணியின் மாநில துணைத் தலைவர் எ.வே.கம்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது அதுகுறித்து எந்த விவரங்களும் தனக்குத் தெரியவில்லை என்று கூறிய அவர், “அந்த இடத்திற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்கள் கூறும் விவகாரத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு