• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

திருவள்ளூரில் தொடர் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழை நீர் வரத்து | 4,278 cubic feet per second of rain water inflow into Puzhal Lake

Byadmin

Oct 15, 2024


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இம்மழை, லேசான, மிதமான, கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு புழல் ஏரிக்கு 4,278 கன அடி, சோழவரம் ஏரிக்கு 1,553 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,165 கன அடி, பூண்டி ஏரிக்கு 270 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 60 கன அடி என, மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,194 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 130 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,249 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. அதே போல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 341 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகையின் நீர் இருப்பு 302 மில்லியன் கன அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



By admin