சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தவிர. வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும், நாளையும் (ஆக.12, 13) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 17-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், இப்பகுதிகளோடு சேர்த்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 11 செ.மீ. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.