திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயிலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தரிசனம் செய்த பின்னர் தியானம் செய்தார். திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இரவு திருச்சியில் தங்கிய அவர், நேற்று காலை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, கோயிலில் அம்மன் சந்நிதி அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். கோயிலுக்கு வெளியே இருந்த பசுவுக்கு கீரை வழங்கினார். பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் ‘‘அகிலத்தைப் பாதுகாக்க ஈசனிடம் தவமிருந்து, வரம் பெற்று நம் உலகைப் பாதுகாத்து நிற்கும் அகிலாண்டேஸ் வரி, கல்வி வழங்கும் கடவுளாககாட்சி தருகிறார்.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ அம்பாளும், ஈசனும் துணை நிற்க வேண்டும். மேலும், 108 திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 7 லோகங்களையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் ரங்கநாதர் துணை நிற்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.