2
உண்மை சம்பவங்களை தழுவி அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் உருவாகும் திரைப்படங்களுக்கான ஆதரவு என்பது தமிழ் ரசிகர்களிடத்தில் என்றும் பாரிய அளவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘சிறை’ திரைப்படம் தயாராகி இருப்பதாக திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு – எல். கே .அக்ஷய் குமார் இணைந்து நடித்திருக்கும் ‘சிறை’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணூ, சத்ய ஜோதி தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, அருண் விஷ்வா, டி. சிவா, இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், ஆர். கே. செல்வமணி, பா. ரஞ்சித், வெற்றிமாறன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் என ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசுகையில், ” உண்மை சம்பவத்தை தழுவி இயக்குநரும் , நடிகருமான தமிழ் எழுதிய கதையை அதன் வீரியம் குறையாமல் பட மாளிகை அனுபவத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதையாக விவரித்து இருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் வாழும் இஸ்லாமியர்களின் யதார்த்தமான வாழ்வியலையும், மத நல்லிணக்கம் தொடர்பான சமூகத்திற்கு தேவையான விடயங்களை நேர்த்தியாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
செவன் ஸ்கிரீன் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் நத்தார் பண்டிகை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகமெங்கும் படமாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே ‘சிறை’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெறுவதற்கு முன்பே அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் எஸ் லலித் குமார் – அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.