3
திரௌபதி 2 – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : நேதாஜி புரொடக்ஷன்ஸ் – ஜி எம் பிலிம் கொர்ப்பரேசன்
நடிகர்கள் : ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ரக்ஷனா இந்து சூடன், வேல. ராமமூர்த்தி சிராக் ஜானி, தினேஷ் லம்பா, பரணி மற்றும் பலர்.
இயக்கம் : மோகன் ஜி
மதிப்பீடு : 2.5 / 5
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி.. எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் ‘திரௌபதி 2’. இப்படத்தின் முதல் பாகம் வட தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரௌபதி படத்தில் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை போல் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வட தமிழகத்தை சார்ந்த கிராமப் பகுதி ஒன்றில் ஒரு விவசாயி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்வதற்காக அவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கிறார்.
இதற்காக முயற்சி செய்யும் போது இவருடைய பூர்வீக நிலம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்ற தகவல் கிடைக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்கும் மனைவியை இழந்து தன்னுடைய பெண் பிள்ளையை ஒற்றைப் பெற்றோராக வளர்த்து வரும் வாத்தியார் பிரபாகரனின் (ரிச்சர்ட் ரிஷி) யின் கவனத்திற்கு கொண்டு செல்ல… இது தொடர்பாக அவர் உள்ளூர் இஸ்லாமிய பெரியவர்களிடம் பேசும் போது, அவர்கள் இது தொடர்பாக வக்பு வாரியத்துடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காணலாம் என ஆலோசனை சொல்ல.. இதற்கு ஒப்புக் கொள்ளாத வாத்தியார் பிரபாகரன் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கிறார்.
இந்தப் போராட்டங்களின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிறது. அத்துடன் வாத்தியார் பிரபாகரன் பல நூற்றாண்டுகளாக இந்த ஊரில் உள்ள தொன்மையான சிவாலயம் சிதைந்து கிடக்கிறது என்றும் , அதனை புதுப்பிக்க வேண்டும்.
அதற்கான உதவிகளை வழங்குங்கள் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்த காணொளியை கண்ட வெளிநாட்டில் உள்ள தமிழர் ஒருவர் அந்த கோயிலை புதுப்பிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக சொல்லி, வாக்குறுதி அளிப்பதுடன் அதனை கண்காணிக்கவும் திட்டமிடவும் அவரது இரண்டு பெண் வாரிசுகளை இந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு ஆலய வளாகத்திற்குள் சென்றவுடன் அமானுஷ்யமான சக்தியால் ஆக்கிரமிக்கப்படுகிறார். அந்தத் தருணத்தில் அவருடைய நடவடிக்கையும், பேச்சும் புதிரானதாக இருக்கிறது.
அவர் என்ன பேசினார்..? அந்த ஆலயத்தில் மறைந்திருக்கும் அமானுஷ்யம் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
வரலாற்று நிகழ்வுகள் – புனைவு கதைகள் – நனவோடை உத்தி- மூலம் இப்படத்தின் திரைக்கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல போதாமைகளும்… பல இல்லாமைகளும்… பார்வையாளனின் சிற்றறிவுக்கு எட்டுவதால்.. எதிர்பார்த்த தாக்கமோ.. அதிர்வோ.. எதையும் ஏற்படுத்தாமல் இயல்பாய் கடந்து செல்கிறது.
பெரும்பாலான விடயங்களை உரையாடல் மூலமாகவே விவரித்து இருப்பது பட்ஜட் காரணம் மட்டுமல்ல பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவதற்கான சிந்தனை பற்றாக்குறை என்றும் கூறலாம்.
எண்பது பிராயத்தை கடக்கும் மன்னன் ஒருவரின் உரையாடல்… அவருடைய உடல்நிலை மற்றும் உடல் மொழிக்கு மீறிய வகையில் நிகழ்த்துவது கவனக்குறைவு தான் என சுட்டிக் காட்டலாம்.
அந்த நூற்றாண்டில் வாழ்ந்த பிரத்யேக குறியீடுகளுடன் கூடிய வைணவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய மதத்தை நெருக்கடி மற்றும் அழுத்தத்தின் காரணமாக தழுவினார்கள் என்றும்… சைவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறாமல் தீவிரமாக எதிர்த்தார்கள் என்றும் இயக்குநர் காட்சி படுத்தி இருப்பது.. உள்நோக்கம் கொண்டதா? இல்லையா? என்பதற்கு இயக்குநர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
திரௌபதியாக திரையில் தோன்றும் நடிகை ரக்ஷனா – தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அற்புதமான உடல் மொழி மற்றும் துல்லியமான பாவனைகள் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்.
வாத்தியார் பிரபாகரன்- வீரசிம்ம காடவராயர் என இரண்டு கதாபாத்திரங்களில் திரையில் தோன்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி – சண்டை காட்சிகளில் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவாவது எமோஷனல் காட்சியில் வெளிப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்து தங்களது பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரசிகர்களின் கவனத்தைக் கவர தவறும் இடங்களில் எல்லாம் கதை களத்தின் பின்புலங்களை.. திறமையான ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர் சுந்தர்.
ஒளிப்பதிவாளருக்கு பக்கபலமாகவும் ரசிகர்களுக்கு தொடர்ச்சியான காண வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிப்பது ஜிப்ரானின் பிரத்யேகமான பின்னணி இசை. இதற்காக அவருக்கு மனதார வாழ்த்து தெரிவிக்கலாம்.
சரித்திர சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நாவலை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டாலும்… இயக்குநரின் பங்களிப்பும்… பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும்… ஒரே புள்ளியில் இணையாததால்… இப்படைப்பு நிகழ்த்த வேண்டிய விளைவுகளை நிகழ்த்தாமல் கடந்து செல்கிறது.
திரௌபதி 2 – சாதாரண கல் சிலை.