பட மூலாதாரம், Getty Images
இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர்.
“அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்,” என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
“இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை.”
“அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை ‘டாக்டர் பூப்’ (Dr. Poop) என அழைத்தனர்,” என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார்.
பட மூலாதாரம், Dr. Juliana Suárez
அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo_) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார்.
“தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்” (“The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது.”
தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார்.
1. அதிக உணவுகளை சேருங்கள்
பட மூலாதாரம், Dr. Juliana Suárez
தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல “அதிசய டயட்கள்” குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன.
ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: “உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்.”
நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும்.
சமூக ஊடகங்களில் “நேர்த்தியான உணவுமுறையை” கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார்.
“பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…”
பட மூலாதாரம், Getty Images
“நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்.”
அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: “பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்.”
2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம்
பட மூலாதாரம், Getty Images
உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ்.
“வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல,” எனக் கூறுகிறார் அவர்.
மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன.
“பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.”
எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார்.
“இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்.”
தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், “அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்.” என்கிறார்.
“உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது.”
அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள்.
3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள்
பட மூலாதாரம், Getty Images
“இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன,” என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.
“குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல.”
மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும்.
“உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.”
புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார்.
“எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்.”
அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம்.
“சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது.”
4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்
பட மூலாதாரம், Getty Images
ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.
“சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது.”
“அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்.”
உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும்.
“ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், “யாராவது முகம் சுளிப்பார்கள்” என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்.”
“செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு