பட மூலாதாரம், Getty Images
1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல.
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர்.
இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார்.
ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் “தி திங்” (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது. இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது.
சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் ‘ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு’ பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது.
‘தி திங்’ எவ்வாறு செயல்பட்டது?
பட மூலாதாரம், John Little
ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார்.
அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது.
அவர் ‘தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் – இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், “டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது. இதில் “மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது” என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது.
இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது – “ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது”. அந்தக் காலத்தில் ‘தி திங்’ “ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது” என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார்.
அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் ‘தி திங்’ செயல்படுத்தப்பட்டது. இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது.
1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், ‘தி திங்’ பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
உளவாக பயன்பட்ட கலை
‘தி திங்கின் வெற்றியைப் பற்றி சிந்திக்கையில், அதை இயக்கிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான வடிம் கோன்சரோவ், “நீண்ட காலமாக, எங்கள் நாடு குறிப்பிட்ட மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களைப் பெற முடிந்தது, இது பனிப் போரின் போது எங்களுக்கு சில நன்மைகளை அளித்தது” என்று கூறினார்.
அந்தக் காலத்தில் மேற்கு நாடுகளை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் எத்தனை ‘திங்க்ஸ்’ பயன்படுத்தியிருக்கலாம் என்பது சோவியத் உளவுத்துறைக்கு வெளியே யாருக்கும் இன்றுவரை தெரியாது.
ஆனால் இந்த ஒட்டுக் கேட்கும் கருவியின் வெற்றி தொழில்நுட்ப புதுமையால் மட்டும் கிடைத்தது அல்ல. இது அழகிய பொருட்கள் குறித்த மக்களின் கலாசார மனப்பான்மைகளைப் பயன்படுத்தியதால் வெற்றியடைந்தது. கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாம் பொதுவாக அந்தஸ்து, ரசனை அல்லது கலாசார ஆர்வத்தின் செயலற்ற அடையாளங்கள் என நம்புகிறோம்.
செதுக்கப்பட்ட மேப்பிள் மரத்தால் ஆன மர சிற்பத்தை பயன்படுத்தி ரஷ்ய உளவுத்துறை இந்த அனுமானத்தை ஆயுதமாக்கியது.
வரலாற்றில் உளவு, மறைத்தல் மற்றும் ராணுவ உத்திக்காக கலை பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒன்று மட்டும் உதாரணம் அல்ல. மோனாலிசாவை வரைந்த லியோனார்டோ டா வின்சி, டாங்கிகள் மற்றும் முற்றுகை ஆயுதங்களையும் வடிவமைத்தார், பீட்டர் பால் ரூபென்ஸ் முப்பது ஆண்டு போரின்போது உளவாளியாக செயல்பட்டார்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மறைமுக மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை வடிவமைத்தனர். பிரிட்டிஷ் கலை வரலாற்றாசிரியரான (மற்றும் ராஜ கலை சேகரிப்பின் சர்வேயரான) அந்தோனி பிளண்ட், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் ஆரம்பத்தில் சோவியத் உளவாளியாக இருந்தார்.
‘தி திங்கின் விசித்திரமான வழக்கில், இசை வரலாறும் முக்கியமானது. இதன் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாளரான லெவ் செர்ஜியேவிச் டெர்மென், பொதுவாக லியோன் தெரமின் என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யாவில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் திறமையான இசைக்கலைஞருமாவார். அவர் உலகின் முதல் மின்னணு இசைக் கருவியை உருவாக்கினார் – இது அவரது பெயரால் தெரமின் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கருவியை எதையும் தொடாமல் வாசிக்கலாம் – அதன் ஆன்டெனாக்களைச் சுற்றி கைகளின் அசைவுகள் காற்றில் நகர்ந்து நோட்களைக் கட்டுப்படுத்துகின்றன. தெரமின்-இன் தனித்துவமான ஒலி, 1950களில் அமெரிக்க அறிவியல் கதைகளை கொண்ட திரைப்பட இசைகளின் அடையாளமாக மாறியது – குறிப்பாக 1951 ஆம் ஆண்டு வெளியான தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்( The Day the Earth Stood Still) திரைப்படம், பனிப்போர் பய உணர்வைப் பற்றிய ஒரு உவமையாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.
பல ஆண்டுகள் காக்கப்பட்ட ரகசியம்
பட மூலாதாரம், Getty Images
‘தி திங்’ கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது அமெரிக்க உளவுத்துறையால் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டு மே மாதம், அணு ஆயுத சேகரிப்பின் உச்சத்தில், ஒரு அமெரிக்க யு-2 உளவு விமானம் ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பான தூதரக நடவடிக்கைகளில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், பனிப்போர் உளவு ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நிரூபிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மர சிற்பத்தின் மூலம் சோவியத் தங்களை உளவு பார்த்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
ஒரு தூதரக இல்லத்தில் நடந்த ஊடுருவல் எவ்வளவு சங்கடமான பாதுகாப்பு மீறலாக இருந்ததென்றால் தி திங்கை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியிருந்தது என ஜான் லிட்டில் நம்புகிறார்.
ஆனால் ‘தி திங்கின்’ உண்மையான தொழில்நுட்ப சிறப்பு பொதுமக்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை.
மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் இந்தக் கருவி பிரிட்டிஷ் எதிர்-உளவுத்துறையால் SATYR என்ற குறியீட்டு பெயரில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ரைட் 1987 இல் தனது நினைவுக் குறிப்பான ஸ்பைகேட்சரில் (Spycatcher) அனைத்தையும் வெளிப்படுத்தும் வரை, இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வ அரசு ரகசியமாக இருந்தன.
அந்தக் காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருந்தது மற்றும் பனிப்போர் உளவு விளையாட்டை வடிவமைத்த விதம் ஆகியவற்றால் ‘தி திங்’ வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது.
ஆனால் இது ஓபரா அரங்குகள் மற்றும் கலைக்கூடங்களின் பாதுகாக்கப்பட்ட பிரம்மாண்டத்திற்கு வெளியே நிகழும் உயர் கலாசாரத்தின் விசித்திரமான மற்றும் இருண்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. அதில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒட்டுகேட்கும் கருவிகள் மற்றும் ராணுவ உளவுத்தகவல் சேகரிக்கும் கருவிகளாக உள்ள கையால் செதுக்கப்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர்.
தி திங், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையர் பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு