• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

தீதும் நன்றும் | ரசனைக் குறிப்பு  | ரஞ்சனி சுப்ரமணியம்

Byadmin

Dec 28, 2025


வாழ்க்கையைப் படித்தலும் , அதன் உணர்வுகள் கொண்டு இலக்கிய வடிவங்களைப் படைத்தலும் , ஒரு எழுத்தாளரின் உள்ளார்ந்த மனவிருப்பு . அத்துடன் பாரிய பிரச்சனைகள் எதுவுமற்ற ஒரு மனிதசமுதாயத்தில் வாழ்வதை விட , பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு சமுதாயத்தில் வாழ்தல் என்பது உணர்வுள்ள ஒரு படைப்பாளியின் எழுதுகோலுக்கு அதிக உந்துதல் கனதி என்பவற்றைத் தருகிறது.
அந்த விதத்தில் எழுத்தாளர் விமல் பரம் அவர்களின் , ‘தீதும் நன்றும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு போருக்குப் பின்னான இடர் சூழ்ந்த வாழ்வியல் பற்றிய , பல முக்கிய பிரச்சனைகளை வெளிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வய சிந்தனையை மாற்றி மன நம்பிக்கை அளிப்பதுடன் , துன்பத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கினை , இக்கதைகள் வாசகருக்கு ஏற்படுத்துகின்றன என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய குணாம்சம்.
போர் சூழ்ந்த பூமியொன்றில் வாழ்தல் , அதனால் உருவான வாழ்வியல் பிரச்சனைகளை எழுதுதல் , அவற்றை எதிர்கால சந்ததியின் வாசிப்பிற்காக ஆவணப்படுத்தல் என்பன எமது தாயகத்தில் மிக முக்கியமான கடமைகளுள் ஒன்று.
யுத்தபூமியொன்றில் வாழும் கொடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் அனைவரும் அதை எழுதும் திறன் படைத்தவர்களும் அல்ல. பலர் எழுத விரும்புவதும் இல்லை. அந்த விதத்தில் போருக்குள் வாழ்ந்த, நேரடியான அனுபவம் கொண்ட ஒரு படைப்பாளரின் சிறுகதைத் தொகுப்பு இது என்பதுடன் , இன்றைய காலகட்டத்தின் வாழ்வை , எதிர்காலத்திற்கு கடத்தும் ஒரு எழுத்து என்பதில் சந்தேகமில்லை.
 இதில் தமது தமக்கையார் பிரபல எழுத்தாளர் தாமரைச்செல்வியின் வழித்தடத்தினை , தங்கை விமல் பரமும் பின்பற்றுகிறார். உதவுவதில் இன்பம் கண்ட குடும்பம் ஒன்றில் வழிவந்தவர்கள் என்பதை தன் கதைகளாலும் படைப்பாளர் நிறுவுகிறார். இந்த மனம் அனைவருக்கும் அமைவதில்லை .
தீதும் நன்றும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடு. 166 பக்கங்களுடன் கூடிய இத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியத்தினை வடிவமைத்தவர் , படைப்பாளரின் சகோதரி இந்து பரா . அட்டை வடிவமைப்பு சகோதரர் சுப்ரம் சுரேஷ்.
இந்நூலினை வடிவமைத்தவர் பரணீதரன் கலாமணி.
ஜீவநதி மாதாந்த சஞ்சிகை , ஆளுமைச் சிறப்பிதழ்கள் மற்றும் இலக்கிய வெளியீடுகள் மூலம் பெரும் சேவை செய்து வருபவர். அவரது முயற்சிகள் மென்மேலும் வெற்றிகளைக் காண வாழ்த்துவதும் எம் அனைவரினதும் இலக்கியக் கடமை.
நூலுக்கு சிறப்பான பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது . இவரது கதைகளில் மனம் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் எதிர்வய அம்சங்கள் கூறப்பட்டு , பின் அதனை எதிர் கொண்டு வெல்லும் துணிவுடன் நேர்வய அம்சங்களும் சரிசமனாக வெளிக் கொண்டு வரப்படுகின்றன. மற்றும் எமது வாழ்க்கையின் நல்லவையும் தீயவையும் , எம்மாலேயே இயற்றப்படுகின்றன என்பதை உணர்த்தும் விதமாகவும் இத்தலைப்பு அமைந்துள்ளது.
போருக்குப் பின்னான சமுதாயமொன்றில் முக்கியமானது உறவுகளின் இழப்பு தரும் வலி, சொத்துகள் இழப்பால் வரும் பொருளாதார நலிவு , இருப்பிட வசதிகள் இன்மை , வேலை வாய்ப்பின்மை கல்வி கற்றலுக்கான இடர்கள் , ஒழுக்க சீர்கேடுகள், உடல் உள தாக்கங்கள் மனவடு என்பவை மிக முக்கியமான பிரச்சனைகளாக அமைகின்றன.
 போரில் தமது குடும்பத்து ஆண்களை இழந்த பல குடும்பங்கள், பெண் தலைமைத்துவத்துடன் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன. அத்துடன் , தமது உயிர் காக்கவும் பொருளாதார நலன் வேண்டியும் புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினரால் பல முதியோர்கள் அன்பான வீட்டுச் சூழலை இழந்தோராகவும் ஆதரவற்றோராகவும் வாழும் நிலை தோன்றியுள்ளது.
இவையனைத்தும் கதைகளின் முக்கிய பேசுபொருளாக வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறுகதைத் தொகுப்பு பற்றி முன்னுரையினை எழுதிய பிரபல எழுத்தாளர் தாட்சாயினி , இவ்வாறு கூறுகிறார்.
//துன்பியல் கதைகளைத் தந்து வாசகனைப் பதற வைக்கும் கதைகளே கவனம் பெறும் சூழலில் , பாத்திரங்களின் பிரச்சினையைக் கருணையோடு அணுகி அவர்களது துன்பங்களின் முடிச்சை அவிழ்த்து , ஒருசில தீர்வுத் துளிகளைத் தேனாக அருந்த வைத்து , வாசகனிடம் ஒரு இனிய நிம்மதி படருவதை உறுதி செய்கிறார் விமல் பரம். அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுதியைப் படிப்பவர்கள் மனதில் பாத்திர குணாதிசயங்களுக்கு ஏற்ப ஏற்படும் பதற்றமும் கொந்தளிப்பும் முடிவில் நிறைவாக உருமாறுகின்றன.//
என்பது நிதர்சனமான உண்மை.
இனி தீதும் நன்றும் பற்றிய சில கருத்துகளைக் கூறமுதல்,
2013 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கனேடிய சிறுகதை எழுத்தாளர் Alice Mundro அலைஸ் முன்றோவின் கூற்று ஒன்று இச்சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானது.
//கதை என்பது நாம் தொடரும் பயணப்பாதை போன்றதன்று , மாறாக ஓர் இல்லத்திற்கு ஒப்பானது. நாம் உள்ளே சென்று சுற்றித் திரிந்து பின் பிடித்தமான ஓர் இடத்தில் நிலைப்படுவது போன்றது //.
இதற்கமைய ,
இப்படைப்பில், மனது நிலைப்பட்ட பிடித்தமான பண்புகள் பலவற்றையும் ஒரு சில மாற்றுச் சிந்தனைகளையும் குறிப்பிடலாம்.
1
முதலாவதாக எழுத்து முறைமை.
இவரது எழுத்து மிக இயல்பானது. . யாரும் வாசித்து மனங் கொள்ளக்கூடிய எளிமை நிறைந்தது. தெளிந்த நீரோட்டம் போன்ற நடை . நிலத்தினைப் பிரதிபலிக்கும் எளிய கதைமாந்தர் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள்.
பொதுவாக உரையாடல்கள் மூலமே நகர்த்தப்படும் கதைகளில் கதைக்களமும் பாத்திர வார்ப்பும் அவர்களின் உணர்வுகளும் யதார்த்தமான எழுத்து நடையினால் , வாசகர் மனதில் மனக்காட்சியாக நிலைபெறுகின்றன. அதனால் வாசகரால் அந்த சூழலில் வாழ முடிகிறது. உணர்வுகளை அனுபவிக்க முடிகிறது. துன்பம் வரும் போது சோகமாகி
இறுதியில் நிம்மதியை அனுபவிக்க  முடிகிறது.
விளிம்புநிலை மனிதர்களின் , நாளாந்த வாழ்வியல் , உரையாடல்கள் , உரசல்கள் என்பவற்றை காட்சியாக விரிக்கத்தக்க கதைகள் இவருடையவை . நகரவாழ்வினை நுகர்வோருக்கு இவை புதியதோர்
அனுபவத்தினையும் தரக்கூடியவை.
2
இரண்டாவதாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு சாமானியர்கள் முகம் கொடுக்கும் விதமும் அதனூடான நேர்வய சிந்தனைகளும்.
 யுத்தத்தின் பின்விளைவு காரணமாகவோ , பொருளாதார நெருக்கடியினாலோ மிகக் கடுமையான , மனநலிவடைந்த நிலையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு கதை முடிவில் , வலிந்து திணிக்காத நேர்வயமான தீர்வொன்றை மிக இலகுவாகத் தந்து செல்லும் விதம் மிகவும் பாராட்டத் தக்கது. வீழ்தல் என்பது மீழ் எழுகைக்கான சந்தர்ப்பம் என்பதை கதைகளின் போக்கில் உணர வைக்கிறார்.
3
மூன்றாவதாக இத்தொகுப்பில் மிகச் சிறப்பான கூறக்கூடிய மற்றோர் அம்சம் பெண்களின் ஆளுமை மிக்க குணாதிசய வடிவமைப்பு .
உறுதியும் மனத்திடமும் மிக்க பெண்கள் இவரது பாத்திரப் படைப்புகளில் முக்கியமானவர்கள். யுத்தத்தின் விளைவாக குடும்பத் தலைவனை இழந்து , இடம்பெயர்வு , வருமானமின்மை, தொழில் முயற்சிகள் இன்மை, விவசாயம் பாழடைதல், கல்வி மற்றும் ஒழுக்கச் சிதைவு முதலான பல இடர்களுக்கு இவர்கள் முகம் கொடுக்கின்றனர்.
பெண் தலைமைத்துவத்தின் சமயோசிதம் மிக்க , தீர்க்கமான , உறுதியான முடிவு ,
அனேகமாக எல்லாக் கதைகளிலும் மனதில் நிலைபெறுகிறது. சில சமயங்களில் படிப்பறிவில்லாத பாமரப் பெண்கள் கூட , தமது அனுபவ முதிர்ச்சியின் காரணமாக எடுக்கும் தீர்மானங்கள் பிரமிப்பைத் தருகின்றன.
தாம் பெற்ற குழந்தைகளின் நிம்மதியான வாழ்விற்காக , இவர்களது பெருமுயற்சியும் வழிகாட்டுதலும் ஏனையோருக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. உதாரணமாக ,
1) காலமும் கனியும்,
2) விதியோடும் மதியோடும்
3) தூறல்கள் மழையாகலாம்
4) அனலிடைப் பூக்கள்
5) எதிர்காலக்கனவுகள்
6) விடியும் போது
ஆகிய கதைகள் அமைகின்றன. அத்துடன் வேறு பல நல்ல விடயங்களையும் , இக்கதைகள் உள்ளடக்கி உள்ளன .
குறிப்பாக சிலவற்றைச் சொல்லலாம்.
தூறல்கள் மழையாகலாம் கதையில்….
இளவயதில் விதவையான தனது மகனின் மனைவிக்கு, மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க நினைக்கிறார் மாமியார். அதற்காகவே இயலாத வயதிலும் தன்னுடன் துணையாக இருந்த மருமகளைப் பிரிந்து வயோதிபர் மடம் செல்கிறார் . இவரது அன்பிற்கு சரிசமனான அன்பைக் காட்டும் மருமகள். மிக உருக்கமான கதாபாத்திரங்கள். விதவா விவாகம் இங்கு வலியுறுத்தப்படும் படுவதுடன் தன்னலம் கருதாது, ஏனையோருக்கான முன்மாதிரிப் பெண்ணாகவும் இந்த மாமியார் இருக்கிறார்.
விதியோடும் மதியோடும் (4 )
கதை ஒரு பொறுப்பற்ற அன்பில்லாத மகன் பற்றியது. படிப்பின் பெறுமதியை அவன் உணரவில்லை. தாயின் சிரமங்களை உணரவில்லை. பெரும் செலவில் புலம்பெயர்ந்து, மணம்முடித்து அங்கேயே வாழ்கிறான்.
அந்த இரக்கமற்ற சுயநலம் மிக்க மகன் பல வருடங்களின் பின் தாயைக் காண வருகிறான். மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்ற பரிதவிப்பில் இருக்கும் அந்த அன்னை மனம் மகிழ்கிறாள்.
அன்னையின் ஒரேஒரு சொத்தாக இருக்கும் வீட்டையும் பறித்து விற்று, வெளிநாட்டில் வீடு வாங்கத்தான் அவன் தாயிடம் வருகிறான் . தாய் ஒப்புக் கொள்ளவில்லை. மகன் கோபத்துடன் வெளியேறுகிறான்.
இக்கதையில் தாயிடம் என்னைக் கவர்ந்த அம்சம் கதையின் இறுதி வரிகளில் உள்ளது.
மகன் சென்ற பின்பு தன்னுடன் அதே வீட்டில் இருக்கும் உறவுப் பெண்களைத் தாய் இவ்வாறு அழைக்கிறார்.
“பசிக்குது அண்ணி , ஆச்சி சாப்பிட வாங்கோ ” – என்று
இவ்வசனங்களால் அந்தத் தாயின் மனத் தெளிவும் , திட சிந்தையும் , சூழ்நிலையினை உணர்ந்த மனமாற்றமும் புலனாகின்றன.
அநாதரவான நிலையில் உள்ளவர்களுக்கு , ஆதரவு தருவோர் ஒரு பக்கம் இருக்க , பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக , ஈவிரக்கமற்ற மனதோடு நடக்கும் மற்றுமொரு சாராரும் உள்ளனர். சொந்தப் பிள்ளைகளும் , நெருங்கிய உறவுகளும் , நெடுங்காலம் பழகியவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், இக்கதைகளிலும் ஆண்துணையற்ற பெண் கதாபாத்திரங்கள் , மிக வலிமையுடன் சூழ்நிலையை சமயோசிதமாக எதிர் கொள்கின்றனர்.
‘காலமும் கனியும்’ கதை
நெருங்கிப் பழகிய ஒருவரின் சுயநலத்தினையும் கூறுகிறது.
அவரது காணி பராமரிக்கப்பட்டு விளைச்சல் வந்ததும் , பராமரிக்கப்பட்ட காணியை மீளக் கேட்கிறார். அந்த வருமானத்தையே நம்பியிருக்கும் ஒரு குடும்பம் பரிதவிக்கிறது .
நம்பிக்கையே மனிதவாழ்வு என நிரூபிக்கும் வகையில்
இங்கும் தாயின் திடமான முடிவு மகனின் தொழில் முயற்சிக்காக எட்டப்படுகிறது.
4
நான்காவதாக,
ஏழ்மையிலும் செம்மை காட்டும் கதாபாத்திரங்கள், வாழ்வின் அறம் மறந்த செல்வந்தர்கள் , தர்மசிந்தனையுடைய செல்வந்தர்கள் எனப்  பல எதிரும் புதிருமாக குணாதிசயங்கள் இங்கு இனங்காட்டப் படுகின்றனர்.
ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும் மனச்சாட்சியுள்ள தொழிலாளி செல்வம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி , அதிக விலையில் விற்க நினைக்கும் தனது முதலாளியைத் தட்டிக் கேட்கிறான் . தனது வேலை போனாலும் பரவாயில்லை என அவரை எதிர்த்து நிற்கிறான். இறுதியில் முதலாளியின் நியாயமான மனமாற்றத்திற்கும் அவனே காரணமாகிறான்.
ஆனால் அனைத்து முதலாளிகளும் அவ்வாறு அல்ல என்றோர் கோணத்தை ‘முள்பாதை’ கதை சொல்கிறது.
இரக்க சிந்தையுடைய முதலாளி ஒருவர், தனது தோட்டத்தின் ஒரு பகுதி நிலத்தை அதனை வளமாக்கித் தந்த ஏழை இளைஞனுக்காக எழுதிக் கொடுக்கிறார். அதுவும், காணியை முழுதாக விற்பதற்கு நினைக்கும் , தன் மகனுக்குத் தெரியாமல். இவ்வாறான மனிதர்களால் உலகம் இன்றும் வாழ்கிறது.
 5 ஐந்தாவதாக…
யுத்தத்தின் விளைவாக அங்கவீனர்களாக ஆகியோருக்கான சில தீர்வுகளை விளக்கும் கதைகள்.
யுத்தம் நல்லநிலையில் இருந்த பலரை அங்கவீனர்கள் ஆக்கியுள்ளது. இதில் போராளிகளும் பொதுமக்களும் அடக்கம். இவர்கள் மற்றவர்களில் தங்கியிருப்பதால் நெருங்கிய உறவுகளிடம் கூட ஏச்சு வாங்கும் நிலை. வாழ்த்தலுக்கான அவர்களது போராட்டம் மிகக் கொடியதாகிறது.
இந்நிலையில்
அங்கவீனர்கள் மற்றும் விசேட திறன் படைத்தவர்கள் சேர்ந்து ஒன்றாக இயங்குவதும் , ஒருவருக்கொருவர் உதவி செய்து ஆதரவாக இருப்பதையும், மனத்திடத்துடன் வாழ்வினை எதிர் கொள்ள நினைப்பதையும் கருவாகக் கொண்ட கதை இறுகப்பற்று.
எறிகணை வீச்சினால் கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழிக்கும் நிலையில் ஒரு இளைஞன். காதலி மனம் மாறி விட்டாள். தாயும் இறந்தபின் உடல்சோர்ந்த நேரத்தில் தேநீர் கேட்கக் கூட ஆளில்லாத நிலை. பழைய வாழ்வினை நினைத்து அவரது உருக்கமான நினைவுகளும் உரையாடல்களும் மனம் நெகிழ வைக்கின்றன. வைத்தியசாலையில் காத்திருக்கும் நேரத்தில் அவரது சக்கரநாற்காலியில் ஒருவர் இடறி விழப் போகிறார்.
பார்த்து வரக்கூடாதா தம்பி என இவர் கேட்க ,
பார்வை இருந்தால் பார்த்து வந்திருப்பேன். என்றவர் தொடர்ந்த உரையாடலில் கூறுகிறார்.
” கண்ணில்லாத நாங்களே தைரியமாய் இருக்கிறம். ஏன் நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யக் கூடாது. இழப்பு எங்களை ஒன்று சேர்க்கும். எங்களுடன் வந்து பழகிப் பாருங்கோ .வாழ்வில் பிடிப்பு வரும்”.
மிக அருமையான நம்பிக்கை உணர்வைத் தரும் கதை.
6 ஆறாவதாக…..
முதுமையும் அதன் இயலாமையும்
 முதுமை தரும் இயலாமை மனதை விரக்தி அடையச் செய்வது.
முதுமை என்பது பாரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் காலம் இது.
முதற்காரணங்களாக யுத்தமும் புலம் பெயர்வும், முதியோருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய குடும்ப உறவுகளை இழக்கச் செய்தோ , புலம்பெயர்ந்து செல்லும் நிலையையோ தந்திருக்கின்றன.
இன்றைய பொருளாதார நிலை, விலைவாசி உயர்வு மற்றும் அவசர உலகும் இதற்குக் காரணம். இப்படைப்பில் உள்ளவாறு முதியவர்களின் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டால் அருமையாக இருக்கும்.
முதியோர் எதிர்கொள்ளும் சிரமங்களும் இயலாமைகளும் ஏக்கங்களும் என பல கதைகளில் மனித உணர்வுகளை மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
முதியவர்கள் பிள்ளைகளின் வீட்டில் வாழ்தல், முதியோர் இல்லங்களில் அவர்கள் வயது உடையவர்களுடன் சேர்ந்து வாழ்தல் , என்ற இருகோணங்களிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதங்கள் உரையாடல் வடிவில் அலசப்பட்டுள்ளன.
‘இதுவும் நடக்கலாம்’ என்னும் கதையில்
தந்தை வழிப் பேரனை வெளியேற்ற நினைக்கும் தாய் தந்தையைப் பார்த்து, பேரன் கீரீச்சிட்டுக் கத்துகிறான். தாத்தாவை வீட்டை விட்டு துரத்திற மாதிரி உங்கள் இரண்டு பேரையும் வீட்டை விட்டுத் துரத்துவன் என.
‘தூரமும் அருகே’ கதையில் அநாதையான தன்னை எடுத்து வளர்த்த தந்தை என அறியாத மகன் அவரைக் காப்பகத்தில் விட எண்ணுகிறான். பின் மற்றுமொருவர் மூலம் அறிந்தபின் தன் செயலுக்காக வருந்துகிறான்.
கதையின் இறுதி வசனம். அத் தந்தை கூறுகிறார்.
//என்னை விட்டுட்டு நீ இருக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும் ராசா//
மிக உருக்கமாக மனதில் நிற்கும் வசனம் .
இக்கதையில் முதுமையில் வரும் மறதிநிலை கதையின் ஆரம்பத்தில் மனம் நெகிழும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.
7 ஏழாவதாக ….
புலம்பெயர்ந்தவர்களால் அளிக்கப்படும் உதவிகளும், இருபக்க மனநிலைகளும் விலாவாரியாக அலசப்பட்டுள்ளன.
 ஆதரவற்றோருக்காக, புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்படும் உதவிகள் பல உண்டு. அவை முன்னேற்றத்திற்கும் , சில சமயங்களில் பொறுப்பற்ற சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் துணை போகின்றன.
அனலிடைப் பூக்கள் –
தந்தையை இழந்த குடும்பத்திற்கு உதவி செய்த ஒரு பெண்மணி வெளிநாட்டில் இருந்து தாயகம் வருகிறார். தனது உதவிகள் ஒரு குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு வழிவகுத்ததைப் பார்த்து மனம் மகிழ்கிறார். அதே சமயம் அவரும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார்.
இதுவரை தாயைப் பராமரித்து வந்த தம்பியாரும் புலம் பெயர நினைக்கிறார். இவர் மிகுந்த தவிப்புடன் இருக்கிறார். தாயைப் பராமரிக்க தற்போதைக்கு இங்கு வந்து தங்க முடியாத குடும்பப் பொறுப்பு. என்ன நடக்கும் முடிவு என்ன என்ற ஆவல் வாசகருக்கு உருவாகும் .
மிக இலகுவான உருக்கமான முடிவொன்றை உதவி பெற்றவரின் மகள் சாந்தி கூறுவது , உண்மையில் மனம் நெகிழ்வானது.
“அம்மம்மாவை இங்கை கொண்டு வந்து விடுங்கோ அன்ரி. நாங்கள்
கவனமாய் பாக்கிறம்”
தருமம் தலைகாக்கும் என்பதை நிருபித்தபடி சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அமிர்தமாக அல்லவா இருந்திருக்கும்.
ஒரு சிறிய பெண்ணாயினும் அவள் மூலமான ஒரு அழகான தீர்வு கதாசிரியரின் திறமையும் ஆகும்.
அதே நேரம் புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆடம்பரங்களைக் குறைத்து தாயகத்தில் உள்ளோருக்கு உதவுகின்றனர் என்பதை உணராத, தாயகத்தில் வாழும் இளைய தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் உண்டு என்பதை , தொட்டுச் செல்லும் கதை எதிர்காலக்கனவுகள்
எனினும் இறுதியில் பிழைகள் உணரப்படுவதன் மூலம் நன்முடிவே எட்டப்படுகிறது.
8 எட்டாவதாக……
குடும்பம் என்ற அமைப்பு பற்றியும் , குழந்தை வளர்ப்பின் மனநிலைகள் பற்றியும் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் சில கதைகள் பேசுகின்றன.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பெற்றோரின் வளர்ப்பு முறையும் , வார்த்தைகளும் சிறுவரின் மனதில் காட்சிப் படமாக நிலை கொள்ளும். குழந்தைகளை தமது உடைமையாக நினைத்து , அவர்கள் வளர்ந்த பின்னும் , தமது உரிமையினை நிலைநாட்ட எண்ணுதல் எதிர்வயமான விளைவுகளையே தரும்
தீதும் நன்றும் கதையில்,
புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்கள் சிலவற்றில் அளவுக்கதிகமான கண்டிப்பு , பாதுகாப்பு, நாகரீகம் என்ற பெயரில் , குழந்தைகள் தமது பெற்றோரின் தாயகத்திற்கு செல்லாமல் , கணவனின் பெற்றோர்களை அண்ட விடாமல், தமிழ்மொழி அறியாமல் வளர்த்து விடுகிறார்கள்.
இவ்வாறான ஒரு தாய் , தான் தேர்ந்தெடுத்த பெண்ணையே மகனுக்கு மணம் முடித்தும் வைக்கிறார் . மணமான பின்னும் தன்வீட்டில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் . ஆனால் மகனோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதாக , மனைவியின் சொல் கேட்டு அமெரிக்காவிற்கு செல்கிறான். இப்போது இந்தத் தாய் மகனுக்காக மனவருத்தத்துடன் காத்திருக்கறாள். இந்நிலையை இன்று பல பெற்றோர் எதிர்கொள்கின்றனர்.
இதற்கு எதிர்மாறாக ஒரு தந்தையின் கதை
‘விடியும் போது’
இது வித்தியாசமான கதை.
தனது விருப்பினை மட்டுமே முதன்மைப்படுத்தும் ஆணாதிக்கமும் பிடிவாத குணமும் மிக்க கணவனால் மன இறுக்கத்தில் மனைவியும் குழந்தைகளும் வாழ்கிறார்கள்.
கதையின் இடையில் மனைவியின் கூற்றாக ஒரு வசனம்.
‘அவரின் குணத்திற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டேன். வீடு அமைதியானது.’
இது இன்றும் பல பெண்களின் நிலை.
மகன் விரும்பிய படிப்பை படிக்கவோ, பெண்ணை திருமணம் செய்யவோ தந்தை விடவில்லை அதனால் மகளும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மனவேதனையுடன் கணவர் திடீரென மரணமடைகிறார் . அதன்பின் தாயின் உதவியுடன் பிள்ளைகள் தாம் விரும்பிய திருமண வாழ்வினுள் செல்கிறார்கள். தாயுடன் இருக்க முடியாத சூழ்நிலை. திருமண வாழ்விலும்  மன இறுக்கத்துடன் வாழ்ந்த  தாய் இன்று  தனிமையில் வாடுகிறார் .
‘மனம் விட்டுச் சிரிக்க வாய் விட்டுக் கதைக்க எனக்கொரு இடம் வேண்டும்’ என ஏங்கி முதியோர் இல்லம் செல்ல நினைக்கிறார் . தாய்க்கு பிள்ளைகள் சொல்லும் வார்த்தைகள் இங்கு முக்கியமானவை .
மகள் கூறுகிறாள்
‘சனங்கள் அறிஞ்சால் என்ன சொல்லும்’.
மகன் கூறுகிறார்
‘எங்களுக்கு மரியாதையில்லை’.
இன்றைய தலைமுறையினர் இதற்காகத் தான் பயப்படுகிறார்களா? முதியவர்களின் எதிர்காலம் இதுவாகத்தான்இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
 ஆதிரா மதுராவின் என இரு மகள்களின் கதைதான் ‘சுமையும் சுகமும்’
இவர்களின் குணாதிசயங்கள் கதையின் தன்மைக்கேற்ப சீராக எழுதப்பட்டுள்ளது. ஒரு மகள் குடும்பநலன் சார்ந்து இயங்குவாள். மற்றவள் சுயநலமானவள்.
பாரபட்சமான வளர்ப்பு முறையே இதற்குக் காரணம். இரு மகள்களின் எதிரும் புதிருமான மன ஓட்டம் ,அதனால் வரும் எதிர்காலச் சிக்கல்களைக் கூறுகிறது கதை.
வித்தியாசமான கதை.
இனி….. சில மாறுபட்ட கண்ணோட்டங்கள்.
தன்மைப் பரவலிலேயே அனேகமாக கதைகள் அமைந்திருக்காமல் ,
படர்க்கைப் பரவலிலும் எழுதப்படுவது சிறப்பான வாசிப்பு அனுபவங்களைத் தரும்.
போரினால் வாழ்வியலில் ஏற்படும் சிரமங்களை கதைக்கருவாக்குவதுடன், வாழ்க்கையின் ஏனைய பரிமாணங்களையும் எதிர்காலங்களில் அதிகளவு உள்ளடக்கலாம்.
இன்று புலம்பெயர்ந்து வாழும் களங்களில் முற்றிலும் மாறான கலாசார முகங்கொடுப்புகள் உள்ளன. எழுத்தாளர் இரு நிலங்களிலும் வாழ்பவர்.
இவற்றில் கவனம் செலுத்தலாம்.
நேர்வயமான முடிவுகள் மனதிற்கு நிறைவைத் தந்தாலும், வாழ்க்கை நேர்வயமான நிகழ்வுகளை மட்டுமே கொண்டதல்ல. தீதும் நன்றும் நிறைந்தது தான். நேர்வய முடிவுகள் மனதிற்கு இனியவை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதுவே முடிவாக அமைய வேண்டுமென்பது நியதியுமல்ல.
எழுதப்பட்ட உரையாடல் வரிகளுக்கு இடையில், எழுதப்படாத உணர்வுகளை இனங்காணக் கூடிய விதமாக இவரது பல கதைகள் அமைந்திருக்கின்றன என்பது உண்மை. அதேசமயம் நீண்ட உரையாடல்களாகவும் ஒரே சாயலிலும் இருப்பின் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
நிறைவாக,
சிறுகதையைப் பற்றி பலபேர் பலவிதமாகச் சொல்லி இருக்கின்றார்கள். ஒரு சிறுகதையில் இருந்து, சிறுகதையைக் கழித்தபின் எது மிஞ்சுகிறதோ அதைத்தான் நாம் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம் என்ற கூற்றும் அதிலொன்று.
இத்தொகுப்பில் இருந்து மனிதநேயம் , எதிர்காலத்திற்காக நேர்வயமான நம்பிக்கை எனும் பெறுமதியான செல்வங்களை யாவரும் எடுத்துச் செல்லலாம் என்பது உண்மை.
படைப்பாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
சிறுகதை: பைரவி கதை சொன்னாள் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

The post தீதும் நன்றும் | ரசனைக் குறிப்பு  | ரஞ்சனி சுப்ரமணியம் appeared first on Vanakkam London.

By admin