• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

தீபச்செல்வன் கவிதைகள்

Byadmin

Nov 13, 2025


யாரோ ஒருத்தி
நீ தெருவில் தலையசைத்துச் செல்லும்
யாரோ ஒருத்தி அல்ல
எல்லோருக்குமான புன்னகையை
எனக்கும் காண்பித்து விலகுபவளுமல்ல
அன்பே, உன் வெறுப்பையும்
ஒரு அழகிய மலராகவே நுகர்வேன்
உன் விழிகளில் பெருகும் காதலைப்போல
உன் புன்னகையின் தீஞ் சுவையைப்போல
உன் விழிகளில் நான் மட்டுமே வாசிக்கக் கண்டேன்
பல்லாயிரம் கவிதைகளை
உன் முகக் கோடுகளில் நான் மட்டுமே வாசித்தேன்
வாசலற்ற கோணல் வீட்டின்
மூலையில் நூர்கிறது நீல விளக்கு.
உன் உதடுகளில்
எழுதப்பட்டிருக்கும் கதை என்னுடையது
ஆனாலும் வாசிக்கப்பட்டதே இல்லை
இறந்துபோன தேநீர் கோப்பையை
உறிஞ்சுகிறது நிலவு.
தன்னை ஒரு நாள்
பருகக் கொடுத்தவள்
யரோ ஒருத்தியென விலகிச் செல்கிறாள்.
உடைந்த நுரைகள்
 
ஒரு பெரும் தேசத்தின் பெருங்கனவில்
உழல்பவனை நீ மறந்து போகலாம்
நம் நிலத்தின் குழந்தைகளுக்காக
மலர்களை சேகரிப்பவனை
நீ எப்படி மறந்து போனாய்?
ஒரு பார்வை மற்றும் ஒரு முத்தத்துடன்
எல்லாவற்றையும் வழி மாற்றினாய்
உன் உடல் எனும் மாயக் குழியில்
எனை நிரப்பினேன்
போராளியாக இருக்கப் போகிறாயா?
காதலனாக இருக்கப் போகிறாயா?
வனமொன்றில் துரத்தித் திரிந்தாய்
ஒரு போராளியின் காதலியாக
நீ இருக்க வேண்டுமெனப் பிரியப்பட்டேன்
நான் நெடிது விரும்பும் நிலத்தில்
நான் நீள நேசிக்கும் வானத்தில்
உன் பெயர் எழுதி
அலைகளில் கனவுகளை விதைத்தேன்.
காதலை துடைத்தெறிவது
அவ்வளவு இலகுவானதா?
மணலில் உடைந்த நுரைகளை அள்ளித் தோற்று
கரைகிறேன் தொலை தூரக்கடலில்.
தீபச்செல்வன்
நன்றி – மகாகவி இதழ்

The post தீபச்செல்வன் கவிதைகள் appeared first on Vanakkam London.

By admin