• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

‘தீபாவளிக்காக அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள்’ – அமைச்சர் விளக்கம் | Private buses at government fare for Diwali Minister explained

Byadmin

Oct 22, 2024


சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம்.

வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என அந்த பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதை சிஐடியு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “மக்கள் நலன் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை. பண்டிகைக்காக மாநிலத்தின் வேறு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதால் ஒரு கி.மீ.க்கு ரூ.90 என இயக்க கட்டணம் அதிகரிக்கும். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு ரூ.51.25 மட்டுமே தரப்படும். தனியார்மயம் என்கின்றனர். அப்படியானால் 7,200 புதிய பேருந்துகள், புதிய நடத்துநர்கள், ஓட்டுநர்களை அரசு ஏன் நியமிக்க வேண்டும். அரசியலுக்காக இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர்” என்றார் அமைச்சர் சிவசங்கர்.

14,086 பேருந்துகள் இயக்கம்: “தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் 3 நாட்களுக்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக 14,086 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக, 4,900 சிறப்பு பேருந்துகள் என 11,176 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து நவ.2 முதல்4 வரை சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக 3,165 பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு 3,165 என 12,606 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரைசாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.



By admin