
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 15 வயது சிறுவனான ஆரிஷ் அமர்ந்திருக்கிறார். அவரது இடது கண்ணில் ஏற்பட்ட கடுமையான காயத்தை ஒரு கருப்பு கண்ணாடி மறைத்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு தீபாவளி கொண்டாடுவதற்காக வாங்கிய ஒரு வெடிக்கும் சாதனம் அவரது முகத்தின் அருகே வெடித்தது. அதனால் அவரது கார்னியா சேதமடைந்து, ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். அதன் பிறகு, அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பார்வை திரும்புமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர்.
பள்ளிக்குச் செல்லாத ஆரிஷ், இப்போது வேலைக்கு போக முடியாததுதான் எனக்கு பெரிய கவலை என்று கூறுகிறார். அவரது தந்தை ஒரு தோட்டக்காரர். குடும்ப வருமானத்துக்கு உதவ ஆரிஷ் தொலைக்காட்சிகளைப் பழுது பார்க்கிறார்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறை சட்டவிரோதமானது. ஆனால் இன்றும் கோடிக்கணக்கான குழந்தைகள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தில்லாத சில தொழில்களில் வேலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது.
ஆரிஷை போலவே, வட இந்தியாவின் குறைந்தது ஐந்து மாநிலங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் இளைஞர்களும் “கார்பைடு துப்பாக்கி” எனப்படும் வெடிக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி கண்களில் தீவிரமான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
“கார்பைடு துப்பாக்கி” என்பது பிளாஸ்டிக் குழாயில் கால்சியம் கார்பைடு வைத்து செய்யப்படும் எளிய கருவி. அது வெடிக்கும்போது துப்பாக்கிச் சத்தம் போல பெரிய சத்தமும், தீப்பொறிகளும் வரும்.
ஆனால் அது எப்போது வெடிக்கும் என்று கணிக்க முடியாது. சில நேரங்களில் அது தாமதமாக வெடிக்கலாம். வெடிக்கவில்லை என நினைக்கும் பல குழந்தைகள் குழாயின் உள்ளே பார்த்த நேரத்தில்தான் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்தியாவில் கால்சியம் கார்பைடு விற்பனை மற்றும் கொள்முதல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் விவசாயிகளும் கடைக்காரர்களும் இதை பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் வயல்களில் விலங்குகளை விரட்டவும் இந்தத் துப்பாக்கிகள் பயன்படுகின்றன என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் கடந்த வாரம் வரை இந்தியாவில் பலருக்கும் இந்த கார்பைடு துப்பாக்கி பற்றி தெரியாது. தீபாவளிக்குப் பிறகு பலர் காயமடைந்ததாக செய்திகள் வந்ததும், இதன் பக்கம் கவனம் திரும்பியது.
சமூக ஊடகங்களில் இவற்றை பட்டாசாக பயன்படுத்தும் வீடியோக்கள் வைரலான பிறகு, இவை வட இந்தியாவின் உள்ளூர் சந்தைகளில் பெருமளவில் விற்பனைக்கு வந்துவிட்டன என அதிகாரிகள் கூறுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பாதிப்புகள்
மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் மட்டும் கார்பைடு துப்பாக்கியினால் 100-க்கும் மேற்பட்டோருக்கு கண்ணில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
இதில் குறைந்தது 15 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. மற்ற மூன்று மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக 100 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பிகார் மாநிலத்தில் மட்டும் 170 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 40 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று பாட்னா நகரிலுள்ள பிராந்திய கண் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் பிபூதி பிரசன் சின்ஹா கூறினார். உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லி ஆகிய இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கார்பைடு துப்பாக்கிகளை பட்டாசுகளாகப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன. பல விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேசான, மிதமான மற்றும் கடுமையான கண் காயங்களுடன் நோயாளிகள் வருகிறார்கள் என்றார் போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனையின் கண் மருத்துவத் தலைவர் கவிதா குமார்.
“லேசான நிலைகளில், கண்ணையும் அதனைச் சுற்றியுள்ள தோலிலும் ரசாயன காயங்கள் அல்லது வெப்ப தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மிதமான நிலையில், ரசாயனத் துகள்கள் கார்னியாவை சிறிது சேதப்படுத்தியுள்ளன. கடுமையான நிலையில், கார்னியாவில் பெரிய சேதம் ஏற்பட்டதால் தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால், காலப்போக்கில் பார்வை மீண்டும் திரும்பும் வாய்ப்பு உள்ளது”என்று அவர் கூறுகிறார்.
இந்த காயங்களின் தீவிரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக சில மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தீபாவளி பட்டாசுகளால் ரசாயன காயங்கள் ஏற்படும் நிலையை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் இந்த ”கார்பைடு துப்பாக்கி” என்றால் என்னவென்று புரிந்து கொள்ள தனியாக ஆராய வேண்டியிருந்தது என்றும் ஹமீடியா மருத்துவமனையின் மருத்துவர் அதிதி துபே கூறினார்.
பாதிக்கப்பட்ட பலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்களில் இந்த துப்பாக்கிகளைப் பார்த்த பிறகு வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான முக்கியக் காரணமாக விலை உள்ளது. ஒரு துப்பாக்கி வெறும் 150 முதல் 200 ரூபாய் மட்டுமே, அதேசமயம் பெரிய சத்தத்துடன் பட்டாசு போன்ற அனுபவத்தை தருவதாக கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் “கார்பைடு துப்பாக்கி” என்று தேடினால், இளைஞர்கள் இதை உருவாக்கி பயன்படுத்தும் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.

‘வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி’
சில சமூக ஊடகக் கணக்குகள் இந்த வீடியோக்களை “அறிவியல் பரிசோதனை” என குறிப்பிடுகின்றன. மேலும் “பயனுள்ள திட்டம்” (useful project), “பரிசோதனை வீடியோ” (experiment video) போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பகிரப்படுகின்றன.
பாதிக்கப்பட்டு தன்னிடம் சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் பொறியியல் மாணவர் என்றும் சமூக ஊடக வீடியோக்களைப் பார்த்து, வீட்டிலேயே இப்படியான துப்பாக்கியை தயாரித்தார் என்றும் ஆனால் அது வெடித்ததால் ஒரு கண்ணில் பார்வை இழந்த அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மருத்துவர் சின்ஹா கூறுகிறார்.
இந்தியாவில் கால்சியம் கார்பைடு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ரசாயனப் பொருளாகும்.
இது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையும், தவறாகப் பயன்படுத்தப்படக் கூடிய ஆபத்தும் கொண்டுள்ளதால், அதனை வைத்திருப்பது, பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது ஆகியவை சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
இந்தப் பொருள் தண்ணீருடன் சேரும் போது அசிட்டிலீன் (Acetylene) எனப்படும் வாயுவை உருவாக்குகிறது. இது எரியக்கூடிய தன்மை கொண்டது, மேலும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும்.
கால்சியம் கார்பைடு விதிகள், 1987-ன்படி, இதன் விற்பனை, கொள்முதல் மற்றும் சேமிப்புக்கு உரிமம் அவசியம். ஆனால் 200 கிலோ கிராமுக்கு மேல் உள்ள அளவுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
போபாலில் உள்ள ஒரு அரசு அதிகாரி (பெயர் வெளியிட விரும்பவில்லை) பிபிசியிடம் பேசினார்.
மத்திய அரசின் தடை இருந்தபோதிலும், பலர் இன்னும் கால்சியம் கார்பைடை, பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கப் பயன்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டார்.

‘குறைத்து மதிப்பிடக்கூடாது’
வட இந்தியாவில் திருமண விழாக்களின் போதும், விவசாயிகள் குரங்குகளை விரட்டுவதற்கும் கார்பைடு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று போபால் காவல் ஆணையர் ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் பார்த்தா பிஸ்வாஸ், இந்த கார்பைடு துப்பாக்கிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
“இது தேசிய அளவிலான பிரச்னை. தீபாவளியின்போது நடந்த ‘விபத்துகள்’ என்று மட்டும் இவற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று அவர் கூறினார்.
இந்தியா கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும்போதோ, புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ அல்லது பிற நிகழ்வுகளிலோ இவை பட்டாசுகளாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த ‘கார்பைடு குண்டுகள்’ அல்லது ‘கார்பைடு துப்பாக்கிகள்’ நிரந்தர பார்வை இழப்பு, முகச் சிதைவு, மற்றும் உடல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியவை,” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், இந்த துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கால்சியம் கார்பைடு விநியோகச் சங்கிலியில் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போபாலின் ஹமீடியா மருத்துவமனையில், இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் அல்சைன், தன் தாயின் இறுக்கமான அணைப்பில் அமர்ந்திருக்கிறார். யூடியூப் வீடியோக்களில் துப்பாக்கியைப் பார்த்த பிறகு, அதை வாங்கி தருமாறு தனது மாமாவை வற்புறுத்தியதுதான் இப்போது அச்சிறுவனின் பார்வை இழப்புக்கு வழிவகுத்திருக்கிறது.
ஏழு வயது அல்சைனின் தாய் அஃப்ரீன், அச்சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் படுக்கையை விட்டு ஒரு நொடியும் விலகவில்லை.
“அவனுடைய எதிர்காலம் குறித்து பயமாக உள்ளது. அவனுக்கு மீண்டும் பார்வை திரும்பும் என நான் நம்புகிறேன்”என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு