தீபாவளி என்றாலே ஸ்வீட்ஸ் என்று எல்லோருடைய நினைவுக்கு வந்தாலும், அதிரசம் போன்ற இனிப்புகளுடன், முறுக்கு, சீடை போன்ற பாரம்பரியமான பலகாரங்களையும் செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. சமீப காலமாக, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலுமே இனிப்பு, காரம் அனைத்தையும் கடைகளில் வாங்குவது அதிகமாகிவிட்டது.
வர்த்தகப் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஸ்வீட்ஸ் வாங்கினால் காரம் இலவசம் என்று கடைகளில் ‘காம்போ ஆபர்’ என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்தப் போட்டியில் விலையை குறைப்பதற்காக, அந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது தரத்தில் சமரசம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஸ்வீட்டை விட காரத்தில்தான் ஆபத்து அதிகம்!
இவற்றை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையினர், தமிழகம் முழுவதும் தீபாவளியை ஒட்டி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், கோவை நகரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் ஓட்டல்கள், ஸ்வீட்ஸ் கடைகள் மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்புக் கூடங்களில் பரவலாக ஆய்வுகளை நடத்தினர்.
‘‘மொத்தம் 436 கடைகள் மற்றும் உணவு தயாரிப்புக் கூடங்களில் சோதனை நடத்தியதில், அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட 306 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்து அழித்து விட்டோம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தியதைக் கண்டறிந்து, 1,780 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்திருக்கிறோம். 57 மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.’’ என்று பிபிசி தமிழிடம் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார் .
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை ஸ்வீட் செய்வதற்குப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்த தமிழ்செல்வன், ‘‘அவ்வாறு பயன்படுத்தினால் ஸ்வீட்டின் தரமும், தன்மையும் மாறிவிடும். ஆனால் கார வகைகளில் மீண்டும் பயன்படுத்தினால் நிறமும் தன்மையும் பெரிதாக மாறாது; இதனால், முறுக்கு, சீடை, மிக்சர் போன்ற கார வகைகளுக்குதான், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.’’ என்று கூறினார்.
“உயிரி எரிபொருள் உற்பத்திக்கு உகந்தது”
ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை, உயிரி எரிபொருள் (BIO FUEL) உற்பத்திக்குக் கொடுக்க வேண்டுமென்று, மத்திய உணவு பாதுகாப்புத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘‘அதற்காக இவற்றை விலை கொடுத்து வாங்கும் பணியை, தன்னார்வ நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதுபற்றி அவ்வப்போது நாங்களும் அறிவுறுத்தி வரும் நிலையில், சிலர் மட்டும் இப்படி வெளியில் விற்பனை செய்கின்றனர். முன்பு சோப் ஆயில் போன்றவை தயாரிக்க இவற்றைக் கொடுத்து வந்தனர். இப்போது சிலர் வெளியில் விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.’’ என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை, மொத்தமாக வாங்குபவர்களுக்கு லிட்டர் 55 ரூபாய்க்கும், கொஞ்சமாக வாங்குபவர்களுக்கு 60 லிருந்து 65 ரூபாய் வரைக்கும் விற்பதாகத் தெரிகிறது. பண்டிகைக் காலங்களில் மட்டும் ஸ்வீட்ஸ், காரம் செய்யும் பணியை மேற்கொள்ளும் சிலர்தான், இந்த எண்ணெய்களை அதிகமாக வாங்குகின்றனர்.’’ என்று பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தார்.
எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரே முறைதான் பயன்படுத்த வேண்டுமென்று கூறும் குழந்தைகள் மருத்துவ நிபுணர் துரைக்கண்ணன், ‘‘ஒரு முறை கொதிக்கும் எண்ணெயை பாதியில் எடுத்து, வேறு ஒரு உணவைத் தயாரிக்கப்பயன்படுத்தலாம். இறக்கி கீழே வைத்து விட்டு, அது ஆறிய பின், மறுபடியும் அல்லது மறுநாள் மீண்டும் சுட வைக்கும்போது அதன் ரசாயனத்தன்மையே மாறிவிடும்.’’ என்கிறார்.
இப்படி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தும் போது, அது விஷத்தன்மையாக மாறவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் இருதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரான செளந்தரவேல்.
‘‘ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தும்போது, முதலில் அந்த உணவுப் பொருளின் சுவை மாறிவிடும்; சத்துகள் குறைந்துவிடும்; தன்மை மாறிவிடும். இதில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை உருவாகும். தொடர்ச்சியாக இத்தகைய உணவுப் பொருளைச் சாப்பிடும்போது, நுரையீல் பாதித்து, மூச்சுத்திணறல் ஏற்படலாம். குடலும் பாதிக்கப்படலாம். சிலருக்கு தொடர் இருமல் ஏற்படும்.’’ என்று அவர் தெரிவித்தார்.
கர்ப்பிணிகளுக்கு வரும் பாதிப்பு என்ன?
‘‘இத்தகைய எண்ணெய்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உணவை தொடர்ச்சியாக உண்ணும் குழந்தைகளுக்கு, உடல் பருமன் (Obesity) ஏற்படுவதுடன் உளவியல் ரீதியாக ஒரு விதமான மந்த நிலை (Mental Dullness) ஏற்படும். பெரியவர்கள் இதைச் சாப்பிட்டாலும் துாங்குவதற்கே தோன்றும்.’’ என்று கூறும் டாக்டர் துரைக்கண்ணன், ‘‘பொதுவாக நம் சமையல் முறையில், 100 டிகிரி அளவுக்கு எண்ணெய் கொதிக்க வைக்கப்பட்டு, சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் அதே கொதிநிலையில் கொதிக்க வைத்து, அதில் பல விதமான உணவுப் பொருட்களைச் சேர்க்கும் போது, அந்த உணவில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகிவிடும். கொழுப்பும் உடலில் சேர்ந்து விடும். அதனால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் சாத்தியமும் இருக்கிறது’’ என்றும் எச்சரிக்கிறார்.
சூரியகாந்தி எண்ணெய், தாவர எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது, அவற்றின் வேதியியல் அமைப்பு உடைந்து விடுவதாக பிபிசி தமிழிடம் ஆராய்ச்சி மாணவரும், கோவை தனியார் கல்லுாரியின் உணவு தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியருமான சந்தியா கூறினார்.
ஒரே எண்ணெய் தொடர்ந்து பலமுறை பயன்படுத்தப்படும் பட்சத்தில், உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, இருதய நோய்க்கு வழிவகுத்துவிடக் கூடும் என்று கூறும் சந்தியா, ‘‘மீண்டும்மீண்டும் சூடுபடுத்தப்படும் எண்ணெய், தீமை தரும் நச்சுக்களை எளிதில் உருவாக்கும். இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தும். எடை அதிகரிக்கும். குறிப்பாக வயிற்றுக்கொழுப்பு அதிகமாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு உயர் இரத்த அழுத்தத்தை (preeclampsia) துாண்டும்.’’ என்றும் தெரிவித்தார்.
‘‘இத்தகைய உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பது எளிதுதான். சாப்பிடும் போது, நாள்பட்ட எண்ணெயின் வாடை வரும். உணவின் நிறம் மாறியிருக்கும். ’’ என்கிறார் டாக்டர் செளந்திரவேல்.