• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு | Diwali Festival: Special Worship in Tamil Nadu Temples

Byadmin

Oct 31, 2024


சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் இன்று (அக்.31) தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் இருந்தே, புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. பண்டிகை தினத்தையொட்டி, கோயில்களுக்குச் சென்ற பொதுமக்கள் நீண்டவரிசையில், காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில், தீபாவளி பண்டிகையையொட்டி வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் : தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று காலை முதலே, பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், வழிபாடுகளிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பண்டிகை தினத்தையொட்டி சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல், மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில்: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் மாணிக்க விநாயகர் சன்னதியில் இன்று காலை நடை திறக்கப்பட்டு, மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டையில் உள்ள உச்சப் பிள்ளையார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம், உறையூர், திருவாணைக்காவல் உள்ளிட்ட கோயில்களிலும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சை பெருவுடையார் கோயில், கோவை ஈச்சனாரி விநாயாகர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரசித்திப் பெற்ற கோயில்களிலும் தீபாவளி பண்டிகையையொட்டி, சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகளும் தீபாராதனைகளும் காட்டப்பட்டன. இந்த சிறப்பு வழிபாடுகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வழிபட்டுச் சென்றனர்.



By admin