9
தீயவர் குலை நடுங்க
தயாரிப்பு : ஜி எஸ் ஆர்ட்ஸ்
நடிகர்கள் : அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீண் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஜி கே ரெட்டி, பி .எல். தேனப்பன், வேல.ராமமூர்த்தி, ஓ. ஏ .கே. சுந்தர் மற்றும் பலர்
இயக்கம் : தினேஷ் லட்சுமணன்
மதிப்பீடு : 2/5
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற இரண்டு நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும்.. க்ரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படம் என்பதாலும்… சற்று காலதாமதம் வெளியாகி இருந்தாலும், இந்த திரைப்படத்தை பார்க்க பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
எழுத்தாளர் ஜெபநேசன் ( லோகு) மன அழுத்தம் காரணமாக உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வடிகால் தேடுவதற்காக நெடுந்தொலைவு நெடுஞ்சாலை பயணத்தை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைகிறார். இது தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்து காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது. காவல்துறை அதிகாரியான மகுடபதி( அர்ஜுன் ) – எழுத்தாளர் ஜெபநேசனின் மரணம் குறித்த விசாரணையை தொடங்குகிறார்.
மனநலம் குறித்த சவால் கொண்ட இளம் மாற்று திறனாளிகளுக்கு பேச்சுப் பயிற்சி- நடத்தை பயிற்சி -உள்ளிட்ட பல பயிற்சிகளை ஒருங்கிணைந்து வழங்கி அவர்களுக்கான பராமரிப்பு சேவையை மீரா ( ஐஸ்வர்யா ராஜேஷ்) செய்து வருகிறார். இவரிடம் கீதா ( அபிராமி வெங்கடாசலம்) எனும் பெண்மணியின் மாற்றுத்திறனாளி பிள்ளையும் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் மீரா- ஆதி( பிரவீண் ராஜா) எனும் சுகாதாரத் துறையில் ஊழியராக பணியாற்றுபவரை சந்தித்து காதலிக்க தொடங்குகிறார். ஆதியை சந்திப்பதற்காக மீரா, ஆதியின் இல்லத்திற்கு வரும்போது அங்கு அவரது தாய்- ஆதியை பற்றிய ஒரு உண்மையை மீராவிடம் சொல்கிறார்.
அதன் பிறகு மீராவின் நடவடிக்கை என்ன? என்பதையும், எழுத்தாளர் ஜெப நேசன் கொலைக்கான பின்னணி என்ன? கொலையாளி யார்? என்பதை காவல்துறை அதிகாரியான மகுடபதி கண்டறிந்தாரா? இல்லையா? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிஜ சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் பார்வையாளர்கள் யூகிக்கும் வகையிலான வழக்கமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை கவர தவறுகிறது.
இப்படத்தின் முதல் காட்சியிலேயே முகமூடி அணிந்திருப்பது ஒரு பெண் என தெரிவது திரைக்கதையின் பெரும் பலவீனம். பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தை உச்சகட்ட காட்சியில் குற்றவாளியாக்கி இருப்பது சற்று ஆறுதல்.
மகுடபதி எனும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வழக்கம் போல் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
மீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம் போல் சிறப்பாக நடித்திருந்தாலும், எக்சன் காட்சிகளில் கடினமாக உழைத்து கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்.
கீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாசலம் மாற்று திறனாளி பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயின் தவிப்பை அற்புதமாக திரையில் காண்பித்து, அதனை நுட்பமாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.
கொலையை கண்டுபிடிப்பதற்கான தடயங்கள்- காட்சி மொழியாகவும், கலை இயக்கத்துடனும் தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது. ஆனால் அதனை பலவீனமான திரைக்கதை மூலம் மடைமாற்றுகிறார் இயக்குநர்.
‘சட்டத்தையும் பாதுகாக்க முடியும். சட்டத்திலிருந்தும் பாதுகாக்க முடியும் ‘ என காவல் அதிகாரி மகுடபதி பேசும் உரையாடல் பளீச்..!!
பாலியல் குற்றம் தொடர்பான வழக்கமான படைப்பாக- பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாத படைப்பாக- ‘தீயவர் குலை நடுங்க’ இருக்கிறது என்பதுதான் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.
தீயவர் குலை நடுங்க – துரித தீர்ப்பு