படக்குறிப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்
இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய பள்ளிக் கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) நிதியான 2,152 கோடி ரூபாயை சில காரணங்களைக் கூறி நிறுத்திவைத்திருக்கிறது. அதனைக் கண்டித்தும், அந்த நிதியை விடுவிக்கக்கோரியும் திருவள்ளூர் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசிகாந்த் செந்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார்.
பட மூலாதாரம், @s_kanth
படக்குறிப்பு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகாந்த் செந்தில்.
உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளான நிலையில் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையன்று அவரது ரத்த அழுத்தம் கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது. இதையடுத்து, திருவள்ளூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இங்கிருந்தும் உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்த அவர், “சித்தாந்த வேறுபாடுகளை வைத்து அரசியல் செய்யாமல் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோதியிடமும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் தமிழக மக்கள் கோர வேண்டும்” என்றார்.
“உண்ணாவிரதப் போராட்டம் காங்கிரசின் பழைய வழிமுறைதான்”
பட மூலாதாரம், @s_kanth
படக்குறிப்பு, மருத்துவமனையில் இருந்தவாறே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் சசிகாந்த் செந்திலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசுகிறார்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு நடுவில் பிபிசியிடம் பேசிய சசிகாந்த் செந்தில், நிதியைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் நடக்காத நிலையில்தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியதாகத் தெரிவித்தார்.
“இந்தக் கல்வி நிதியைப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல முறை கேட்டுவிட்டது. பல முயற்சிகளை மேற்கொண்டுவிட்டார்கள். வழக்குகூட தொடர்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வந்தபோது, அதில் ஏதாவது செய்யலாம் என நினைத்தோம். தனியார் தீர்மானம் கொண்டுவர நினைத்தேன். எதுவும் நடக்கவில்லை. வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு இடங்களில் முயற்சி செய்தும் நடக்கவில்லை.
குழந்தைகளின் கல்வி என்பது மிகவும் அடிப்படையான விஷயம். அதற்கான ஒரு நிதியை நிறுத்துவது, அது எந்தக் காரணத்திற்காக என்றாலும், அதனை ஏற்க முடியாது. இதனால் கல்வி அமைப்பில் பல பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, இந்த விவகாரத்தை பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடுதான் இந்த உண்ணாவிரதத்தை துவங்கினேன். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரசின் பழைய வழிமுறைதான். இந்த உண்ணாவிரதத்தால்தான் பலரும் இந்தப் பிரச்சனையைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார் சசிகாந்த் செந்தில்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் முழுமையான தனது போராட்டத்தை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். “காங்கிரஸ் கட்சி என்னை முழுமையாக ஆதரிக்கிறது. நான் உண்ணாவிரதத்தைத் துவங்கியவுடன் பல இடங்களிலும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்” என்கிறார் சசிகாந்த்.
பட மூலாதாரம், @s_kanth
படக்குறிப்பு, சசிகாந்த் செந்திலை மருத்துவமனையில் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி
இதற்கிடையில் காங்கிரசின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி போன் செய்து நலம் விசாரித்திருக்கிறார். “இது முக்கியமான பிரச்சனை என்றாலும் உங்கள் உடல்நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்” என்கிறார்.
சசிகாந்த் நான்காவது நாளாக இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உண்ணாவிரதத்தைத் தொடரப் போகிறீர்கள் எனக் கேட்டபோது, “எவ்வளவு நாளைக்கு உண்ணாவிரதத்தைத் தொடர முடியுமோ, அவ்வளவு தொடரலாம் எனப் பார்க்கிறேன். எவ்வளவு தூரம் தாங்க முடியுமோ, அவ்வளவு தூரம் தாங்குவேன். எனக்கு ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சனைகள் உண்டு. அவற்றைக் குறிப்பிட்டு மருத்துவர்கள் எச்சரித்துவருகிறார்கள். எவ்வளவு தூரம் போகுமென்று பார்க்கலாம்.” என்று மட்டும் தெரிவித்தார் சசிகாந்த்.
2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) ப்ரீ.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி (60%) ஆகும், இது நான்கு தவணைகளில் விடுவிக்கப்படும், அதே நேரத்தில் மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி (40%) ஆகும்.
நிதி இல்லாததால், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உருவானது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததாலேயே இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு வழங்க வேண்டிய பங்களிப்பை மாநில அரசே செலவழித்ததாகக் குறிப்பிட்டார்.