காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி இருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினர். அந்த வகையில் தமிழகத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 2 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியை குடியுரிமை அதிகாரிகள் உளவுப்பிரிவு போலீஸார் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.