பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images
படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும்கட்டுரை தகவல்
பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது.
120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் – பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது.
பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் கொந்தளிப்பு, கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது.
இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.
மர்மங்களுக்குப் பெயர் போன இடம்
இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் “உலகிற்கான பரிசு” எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி.
இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதையும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.
“பண்டைய எகிப்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது” என்று கூறும் சலீமா, “கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்” என்றார்.
நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது.
வீடு திரும்பும் துட்டன்காமன்
பட மூலாதாரம், Grand Egyptian Museum
படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம்
1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
“துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது” என்கிறார் சலீமா.
“எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.” என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.
“முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக் கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கின்றன. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படுத்தியது,” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany
படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரம்மாண்டமான சிலை
கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது.
கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
உலகின் பழமையான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும் 4,600 ஆண்டுகள் பழமையான இறுதிச் சடங்கு கப்பலான கிங் கூஃபுவின் சூரிய ஒளிப் கப்பலுக்காக பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ், கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார்
“எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்”
இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ்.
மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
“நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது” என்று கூறும் அவர், “அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை” என்றார்.
துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் செலவு அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் 4 அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (25 அமெரிக்க டாலர்கள்) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும்.
“இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். “இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகமாகவே இருக்கும்.”
பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images
படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தொல்பொருளியலின் புதிய சகாப்தம்
ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.
நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும்.
“இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் – இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது,” என்கிறார் ஹவாஸ்.
அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன – எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.