1
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்தில் எந்தவித சதியும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் தெளிவுபடுத்தியுள்ளார். அஜித் பவார், பூனே நகரில் நடைபெறவிருந்த பிரசார நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து தனியார் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், விமானி அவசரமாக தரையிறக்க முயன்ற சமயத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்ட ஷரத் பவார், இந்த விமான விபத்து தொடர்பில் சதி என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லை என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்தி – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு
இதனிடையே, விமான விபத்து குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோஹன் நாயுடு அறிவித்துள்ளார். மேலும், அஜித் பவார் மரணம் தொடர்பான விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.