எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன
துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக்கு பெண்களை 1,000 டாலர்கள் ஆரம்ப விலையில் வழங்க முடியும் என்று கூறினார். பல பெண்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் “எல்லாவற்றையும் செய்வார்கள்” என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த மோசமான பாலியல் விருந்துகள் பற்றிய வதந்திகள் பல ஆண்டுகளாக பரவி வருகின்றன.
டிக் டாக்கில் 450 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட #Dubaiportapotty என்ற ஹேஷ்டேக், மிக மோசமான பாலியல் கோரிக்கைகளையும் ரகசியமாக நிறைவேற்றுவதன் மூலம் ஆடம்பரமான வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சேகரிக்கும் பணத்தாசை பிடித்த பெண்கள் என குற்றம்சாட்டப்படும் பெண்களை பற்றிய கிண்டல்கள் மற்றும் ஊகப்பூர்வமான தகவல்களை காட்டுகிறது.
ஆனால், பிபிசி உலக சேவையின் புலனாய்வில் உண்மை அதைவிட இருண்டது என்று தெரியவந்தது.
இளம் உகாண்டா பெண்கள், மெவேசிகாவிற்காகப் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று எங்களிடம் தெரிவித்தனர். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சூப்பர் மார்க்கெட் அல்லது ஹோட்டல்கள் போன்ற இடங்களில் வேலைக்குச் செல்வதாக நம்பியிருந்தனர்.
பாதுகாப்பு கருதி “மியா” என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு பெண், மெவேசிகாவின் வலையில் தான் சிக்கியதாகக் கூறினார். அவரின் கூற்றுப்படி, மெவேசிகாவின் வாடிக்கையாளர்களில் ஒருவர், பெண்களின் மீது மலம் கழிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மெவேசிகா மறுக்கிறார். நில உரிமையாளர்கள் மூலம் பெண்கள் தங்குவதற்கு உதவுவதாகவும், துபையில் தனக்கு உள்ள வசதி படைத்தவர்களின் தொடர்புகளால் பெண்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும் அவர் கூறுகிறார்.
மெவேசிகாவுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உயரமான குடியிருப்புகளில் இருந்து விழுந்து இறந்ததையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர்களின் இறப்புகள் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் காவல்துறை மேலும் விசாரித்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து துபை காவல்துறை விசாரித்ததாகவும், மேலும் தகவல்களுக்கு அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் மெவேசிகா எங்களிடம் கூறினார். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
உயிரிழந்த பெண்களில் ஒருவரான மோனிக் கருங்கி, மேற்கு உகாண்டாவிலிருந்து துபை வந்தார்.
மெவேசிகாவிற்காகப் பணிபுரியும் பல டஜன் பெண்களுடன் அவர் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்ததாக, 2022-ல் மோனிக்குடன் அங்கு வசித்ததாகக் கூறும் “கீரா” என்ற ஒரு பெண் எங்களிடம் கூறினார்.
“[அவருடைய] இடம் ஒரு சந்தை போல இருந்தது… சுமார் 50 பெண்கள் இருந்தனர். அவள் மகிழ்ச்சியாக இல்லை, ஏனென்றால் அவள் எதிர்பார்த்தது அவளுக்குக் கிடைக்கவில்லை,” என்று கீரா எங்களிடம் கூறினார்.
மோனிக் துபையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யப்போவதாக நினைத்ததாக அவரது சகோதரி ரீட்டா கூறினார்.
“நான் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்று அவரிடம் (மெவேசிகாவிடம்) கூறியபோது, அவர் வன்முறையாக நடந்துகொண்டார்,” என்று துபையில் மோனிக்கை அறிந்திருந்த மியா கூறுகிறார். அவர் முதலில் வந்தபோது, தனக்கு 2,711 டாலர்கள் கடன்பட்டிருப்பதாக மெவேசிகா கூறியதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அந்தக் கடன் இருமடங்காக மாறியதாகவும் மியா கூறுகிறார்.
“விமான டிக்கெட்டுகளுக்கான பணம், விசா, நீங்கள் தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான பணம்” என்று மியா கூறுகிறார்.
“அதன் பொருள், நீங்கள் கடினமாக, மிகக் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் உங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு ஆண்களை கெஞ்ச வேண்டும்.”
சில வாரங்களுக்குப் பிறகு, மெவேசிகாவிற்கு மோனிக் 27,000 டாலருக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்ததாக, அவரது உறவினர் மைக்கேல் கூறினார். மோனிக்கிடமிருந்து கண்ணீர் மல்கும் குரல் பதிவுகளை பெற்றதாகவும் மைக்கேல் கூறினார்.
பட மூலாதாரம், Family handout
‘மலத்தை சாப்பிட சொன்ன வாடிக்கையாளர்’
வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள், ஐரோப்பியர்கள் என்றும், அவர்களில் தீவிர காமக் கிளர்ச்சி கொண்டவர்களும் அடங்குவார்கள் என்றும் மியா எங்களிடம் கூறினார்.
“ஒரு வாடிக்கையாளர் இருந்தார், அவர் பெண்கள் மீது மலம் கழிப்பார். அவர் மலம் கழித்து அதைச் சாப்பிடச் சொல்வார்,” என்று அவர் மெதுவாக விளக்கினார்.
வேறு ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் “லெக்சி” என்ற மற்றொரு பெண், மியாவின் கதையை எதிரொலித்தார். “போர்ட்டா பாட்டி” கோரிக்கைகள் அடிக்கடி வருவதாகக் கூறினார்.
“ஒரு வாடிக்கையாளர், ‘உங்களை வன்மையாகக் குழு பாலியல் வன்புணர்வு செய்ய, உங்கள் முகத்தில் சிறுநீர் கழிக்க, உங்களை அடிக்க, நாங்கள் 15,000 அரபு எமிரேட்ஸ் திர்ஹம் (4,084 டாலர்கள்) செலுத்துகிறோம்’ என்று கூறினார். அதோடு, மலத்தைச் சாப்பிடுவதை வீடியோ எடுப்பதற்கு மேலும் 5,000 (1,361 டாலர்கள்) தருவதாகவும் கூறினார்.
இந்த தீவிர காமக் கிளர்ச்சிக்குப் பின்னால் ஒரு இனவெறி அம்சம் உள்ளது என்று அவரது அனுபவங்கள் அவரை நம்பவைத்துள்ளன.
“நான் அதைச் செய்ய விரும்பவில்லை என்று ஒவ்வொரு முறையும் சொன்னபோது, அது அவர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. அவர்கள் அழுகிற, கத்துகிற, ஓடுகிற ஒருவரை விரும்புகிறார்கள். மேலும், அந்த நபர் ஒரு கறுப்பினத்தவராக இருக்க வேண்டும் [அவர்களின் பார்வையில்].”
லெக்சி, தனக்கு உதவக்கூடியவர்கள் காவல்துறையினர் மட்டும்தான் என்று நினைத்து அவர்களிடம் உதவி பெற முயன்றதாகக் கூறுகிறார்.
ஆனால், அவர்கள் அவரிடம், ” ஆப்பிரிக்கர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் சிக்கல்களை உருவாக்குகிறீர்கள். நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை,” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டிப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் துபை காவல்துறையிடம் வைத்தபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை.
கடைசியில் லெக்சி தப்பித்து உகாண்டாவுக்குத் திரும்பிச் சென்றார். இப்போது இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு உதவவும், அவர்களை மீட்கவும் உதவி செய்து வருகிறார்.
மெவேசிகாவை கண்டுபிடித்தது எப்படி?
சார்லஸ் மெவேசிகாவை கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. ஆன்லைனில் நாங்கள் ஒரு புகைப்படத்தை மட்டுமே காண முடிந்தது – அதுவும் அவர் பின்புறத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர் சமூக வலைத்தளங்களில் பல பெயர்களைப் பயன்படுத்துகிறார்.
ஆனால், ஓபன் சோர்ஸ் புலனாய்வு, ரகசிய ஆய்வு, மற்றும் அவரது கும்பலின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் மூலம், துபையில் நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு பகுதியான ஜுமேரா வில்லேஜ் சர்க்கிளில் அவரைக் கண்டறிந்தோம்.
இழிவான பாலியல் செயல்களுக்குப் பெண்களை வழங்குவதுதான் அவரது தொழில் என எங்களிடம் கூறப்பட்டதை உறுதிப்படுத்த, நாங்கள் ஒரு செய்தியாளரை மாறுவேடத்தில் உயர்தர விருந்துகளுக்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு அமைப்பாளர் போல அனுப்பினோம்.
மெவேசிகா தனது வியாபாரம் பற்றிப் பேசும்போது அமைதியாகவும், நம்பிக்கையுடனும் காணப்பட்டார்.
“எங்களிடம் சுமார் 25 பெண்கள் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார். “அவர்களில் பலர் திறந்த மனம் கொண்டவர்கள்… அவர்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.”
ஒரு பெண்ணுக்கு ஒரு இரவுக்கு 1,000 டாலர் செலவாகும் என்று அவர் விளக்கினார். மேலும், “பைத்தியக்காரத்தனமான செயல்களுக்கு” கூடுதலாக செலவாகும் என்றும் கூறினார். எங்கள் செய்தியாளரை ஒரு “சேம்பிள் இரவு”க்கு அவர் அழைத்தார்.
“துபை போர்ட்டா பாட்டி” பற்றி அவரிடம் கேட்டபோது, “அவர்கள் திறந்த மனம் படைத்தவர்கள் என நான் உங்களிடம் சொன்னேன், திறந்த மனம் படைத்தவர்கள் என நான் சொன்னால் என்னிடம் உள்ள மிகவும் பைத்தியக்காரத்தனமானவர்களை நான் உங்களுக்கு அனுப்புவேன்,” என அவர் பதிலளித்தார்:
பேச்சின்போது, மெவேசிகா முன்பு லண்டன் பேருந்து ஓட்டுநராக இருந்ததாகக் கூறினார். 2006-ல் கிழக்கு லண்டனில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் அந்தத் தொழிலைக் குறிப்பிட்டதற்கான ஆதாரத்தை நாங்கள் பார்த்துள்ளோம்.
பின்னர் அவர் எங்கள் செய்தியாளரிடம், தனக்கு இந்தத் தொழில் பிடிக்கும் என்று கூறினார்.
“நான் லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றாலும், நான் அதைத்தான் செய்வேன்… அது என் ஒரு அங்கமாக மாறிவிட்டது.”
வேசிகாவின் கும்பலின் செயல்பாட்டு மேலாளராகத் தான் பணிபுரிந்ததாகக் கூறும் “டிராய்” என்ற ஒரு நபர், அது எப்படி நடத்தப்படுகிறது என்பது குறித்து எங்களுக்கு மேலும் தகவல் அளித்தார்.
மெவேசிகா பல இரவு விடுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பணம் செலுத்துவார், அதனால் அவர்கள் அவரது பெண்களை உள்ளே சென்று வாடிக்கையாளர்களைப் பிடிக்க அனுமதிப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
“நான் என் வாழ்க்கையில் பார்த்திராத வகையான பாலியல் உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை நீங்கள் எதை அனுபவிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல… [பெண்களுக்கு] தப்பிக்க வழி இல்லை… அவர்கள் இசைக்கலைஞர்களைப் பார்க்கிறார்கள், கால்பந்து வீரர்களைப் பார்க்கிறார்கள், ஜனாதிபதிகளைப் பார்க்கிறார்கள்.”
மெவேசிகா இந்தச் செயலைச் செய்துவிட்டு தப்பவும் முடிகிறது என்று டிராய் கூறுகிறார்.
தனது சொந்தப் பெயர் ஆவணங்களில் வராமல் இருக்க, கார் மற்றும் குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்க டிராய் என்ற பெயரையும் மற்ற பிறரின் பெயர்களையும் மெவேசிகா பயன்படுத்துகிறார் என்று அவர் கூறுகிறார்.
27 ஏப்ரல் 2022 அன்று, மோனிக் துபையில் உள்ள அல் பர்ஷா என்ற வெளிநாட்டினருக்கான பிரபலமான ஒரு குடியிருப்பு பகுதியிலிருந்து ஒரு செல்ஃபியைப் பதிவிட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்துவிட்டார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே இருந்தார்.
மியா கூற்றுப்படி, மோனிக் வெளியேறுவதற்கு முன்பு மோனிக்கிற்கும் மெவேசிகாவிற்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்தன. மோனிக் மெவேசிகாவின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்து, அவரது கும்பலிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடித்திருந்ததாக மியா கூறுகிறார்.
“அவளுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தது. அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவளுக்கு இப்போது ஒரு உண்மையான வேலை கிடைத்திருப்பதால் இனி ஆண்களுடன் பாலியல் உறவில் வேண்டியதில்லை என்றும் விடுதலையாகி தனது வாழ்க்கையைத் திரும்பப் பெறப் போவதாகவும் நினைத்தாள்,” என்று மியா கூறுகிறார்.
மோனிக் சுமார் 10 நிமிட நடை தூரத்தில் உள்ள வேறு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறிச் சென்றார். மே 1, 2022 அன்று இந்தக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து தான் அவர் விழுந்து இறந்தார்.
பட மூலாதாரம், Instagram
மோனிக் இறந்தபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்த அவரது உறவினர் மைக்கேல் பதில்களைப் பெற முயற்சித்தார்.
மோனிக் விழுந்த குடியிருப்பில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் இருந்ததாலும், பால்கனியில் அவரது கைரேகைகள் மட்டுமே இருந்ததாலும் தங்கள் விசாரணையை நிறுத்திவிட்டதாக காவல்துறை அவரிடம் கூறியதாக அவர் கூறுகிறார்.
மோனிக்கிற்கான இறப்புச் சான்றிதழை ஒரு மருத்துவமனையிலிருந்து அவர் பெற்றார், ஆனால் அந்த சான்றிதழ் அவர் எப்படி இறந்தார் என்பதை கூறவில்லை. அவரது குடும்பத்தினரால் அவரது நச்சுயியல் அறிக்கையைப் (உடலில் போதை மருந்து, மது, விஷம் இருந்ததா என கண்டறியும் அறிக்கை) பெற முடியவில்லை.
ஆனால், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கானாவைச் சேர்ந்த நபர் உதவியாக இருந்ததாகவும் மோனிக்கின் முதலாளி என்று கூறியவரைச் சந்திக்க வேறு ஒரு கட்டடத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாகவும் மைக்கேல் கூறுகிறார்.
அங்கு அவர் சென்று பெண்களைத் தங்க வைத்திருந்த இடத்தைப் பார்த்தபோது நடந்த காட்சியை மைக்கேல் விவரிக்கிறார்.
ஷிஷா புகையின் நடுவில், மேஜையில் கோகெய்ன் போன்ற ஒன்றை பார்த்ததாகவும், நாற்காலிகளில் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு கொள்வதையும் பார்த்ததாக அவர் கூறுகிறார்.
நாங்கள் முன்பு சார்லஸ் மெவேசிகா என்று அடையாளம் கண்ட நபரை இரண்டு பெண்களுடன் படுக்கையில் கண்டதாகவும், அவரை காவல்துறைக்கு இழுத்துச் செல்ல முயன்றபோது, மெவேசிகா, “நான் துபையில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். துபை என்னுடையது… நீங்கள் என்னைப் பற்றி புகார் செய்ய முடியாது… தூதரகம் நான் தான், நான் தான் தூதரகம்” என்று கூறியதாகவும் அவர் கூறுகிறார்.
“(மோனிக்) முதலில் இறந்தவள் அல்ல. மேலும், அவள் கடைசிப் பெண்ணாகவும் இருக்க மாட்டாள்,” என்று அவர் மேலும் கூறினார் என்று மைக்கேல் கூறுகிறார்.
மியா மற்றும் கீரா இருவரும் இந்த உரையாடலை கண்டதாக தனித்தனியாக தெரிவித்ததுடன், இருவரும் அந்த உரையாடலின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினர். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என மெவேசிகாவிடம் கேட்டபோது, அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார்.
மோனிக்கின் மரணம், அவர் வசித்த அதே பகுதியில் வசித்த மற்றொரு உகாண்டா பெண்ணான கெய்லா பிரங்கியின் மரணத்துடன் சில மர்மமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. கெய்லா 2021-ல் துபையில் ஒரு உயரமான குடியிருப்பிலிருந்து விழுந்து இறந்தார். அந்த குடியிருப்பு சார்லஸ் மெவேசிகாவால் நிர்வகிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.
கெய்லாவின் குடும்பத்தினர் எங்களிடம் பகிர்ந்த அவரது நில உரிமையாளரின் தொலைபேசி எண், மெவேசிகாவின் எண்களில் ஒன்றாக இருந்தது. இந்த ஆய்வின் போது நாங்கள் பேசிய வேறு நான்கு பெண்களும், மெவேசிகா அந்த குடியிருப்பைப் நிர்வகித்ததாக உறுதிப்படுத்தினர்.
பட மூலாதாரம், Instagram
மோனிக்கின் குடும்பத்தைப் போலவே, கெய்லாவின் குடும்பத்தினரும் கெய்லாவின் மரணம் மது மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடையது என்று கேள்விப்பட்டதாகக் கூறினர். ஆனால் பிபிசி பார்த்த ஒரு நச்சுயியல் அறிக்கை, அவர் இறந்த நேரத்தில் அவரது உடலில் இவை எதுவும் இல்லை என்று காட்டுகிறது.
கெய்லாவின் குடும்பத்தினரால் அவரது உடலைத் தாயகம் கொண்டுவந்து அடக்கம் செய்ய முடிந்தாலும், மோனிக்கின் உடல் ஒருபோதும் திருப்பி அனுப்பப்படவில்லை.
மோனிக், துபையில் உள்ள அல் குசைஸ் கல்லறையில் “அடையாளம் தெரியாதவர்கள்” என்று அறியப்படும் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று எங்கள் விசாரணை கண்டறிந்துள்ளது.
இங்கு அடையாளமற்ற கல்லறைகள் வரிசையாக உள்ளன. இவை பொதுவாக, குடும்பத்தினரால் உடலைத் தாயகம் கொண்டு செல்ல முடியாத புலம்பெயர்ந்தோருடையவையாக கருதப்படுகிறது.
மோனிக் மற்றும் கெய்லா, உகாண்டாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பெண்களைக் கொண்டு செல்லும் ஒரு பரந்த அதிகாரபூர்வமற்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இருந்தனர்.
உகாண்டாவில் இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகரித்து வருவதற்கு மத்தியில், வெளிநாடுகளில் – குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்வது ஒரு பெரிய தொழிலாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கு 1.2 பில்லியன் டாலர்கள் (885 மில்லியன் பவுண்டுகள்) வரி வருவாயை ஈட்டித் தருகிறது.
ஆனால், இந்த வாய்ப்புகள் அபாயங்களைக் கொண்டவையாக இருக்கலாம்.
சுரண்டலுக்கு எதிரான உகாண்டா ஆர்வலரான மரியம் முவிசா, வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மக்களை மீட்க உதவியுள்ளதாகக் கூறுகிறார்.
“சூப்பர் மார்க்கெட்டில் வேலை என வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் பாலியல் தொழிலாளியாக விற்கப்பட்டவர்களின் வழக்குகள் எங்களிடம் வருகின்றன,” என்று அவர் எங்களிடம் கூறினார்.
மோனிக்கின் குடும்பத்தினருக்கு, துயரத்துடன் இப்போது பயமும் சேர்ந்துள்ளது. எதுவும் செய்யப்படாவிட்டால், மற்ற குடும்பங்களும் இதேபோன்ற இழப்பைச் சந்திக்கக்கூடும் என்ற பயம்.
“நாம் அனைவரும் மோனிக்காவின் மரணத்தைப் பார்க்கிறோம்,” என்று அவரது உறவினர் மைக்கேல் எங்களிடம் கூறினார். “ஆனால், இன்னும் உயிருடன் இருக்கும் பெண்களுக்காக யார் இருக்கிறார்கள்? அவர்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். இன்னும் அவதிப்படுகிறார்கள்.”
இந்த ஆய்வில் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்குமாறு சார்லஸ் “அபே” மெவேசிகாவை பிபிசி கேட்டது. அவர் ஒரு சட்டவிரோத பாலியல் தொழில் கும்பலை நடத்துவதை மறுத்தார்.
“இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். நான் ஒரு விருந்து பிரியன், நிறைய பணம் செலவு செய்யும் நபர்களை எனது மேஜைகளுக்கு அழைக்கிறேன். அதனால் பல பெண்கள் எனது மேஜையில் குவிகிறார்கள். இது எனக்கு பல பெண்களை அறியச் செய்கிறது. அவ்வளவுதான்” என்று அவர் கூறினார்.
“[மோனிக்] தனது பாஸ்போர்ட்டுடன் இறந்தார். அதாவது, அவளை அழைத்துச் சென்றதற்காக யாரும் பணம் கோரவில்லை. அவள் இறப்பதற்கு நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு முன்பிருந்து அவளை நான் பார்க்கவில்லை,” என அவர் மேலும் கூறினார்.
“எனக்கு [மோனிக் மற்றும் கெய்லா] தெரியும். அவர்கள் வெவ்வேறு நில உரிமையாளர்களிடம் வாடகைக்கு இருந்தார்கள். இரண்டு குடியிருப்புகளில் இருந்தவர்களில் யாரும் அல்லது நில உரிமையாளர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் இருந்தது. இரண்டு சம்பவங்களும் துபை காவல்துறையால் விசாரிக்கப்பட்டன. ஒருவேளை அவர்கள் உங்களுக்கு உதவலாம்” என்றார்.
மோனிக் கருங்கி மற்றும் கெய்லா பிரங்கியின் வழக்கு கோப்புகளைக் கோரி, பிபிசி அல் பர்ஷா காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டது.
ஆனால், அந்த கோரிக்கைக்கோ, மோனிக் மற்றும் கெய்லாவின் மரணங்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கோ அவர்கள் பதிலளிக்கவில்லை.
மோனிக் கருங்கியின் நச்சுயியல் அறிக்கைகளை பிபிசி-யால் பார்க்க முடியவில்லை. மேலும், அவர் இறந்தபோது வசித்த குடியிருப்பின் நில உரிமையாளருடன் பேசவும் முடியவில்லை.
- இந்த விசாரணையில் சேர்க்க நீங்கள் ஏதாவது தகவல் வைத்திருந்தால், தயவுசெய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
- பாலியல் வன்புணர்வு அல்லது மனச்சோர்வு குறித்த தகவல் அல்லது ஆதரவு வழங்கும் நிறுவனங்களின் விவரங்கள் bbc.co.uk/actionline இல் உள்ளன.
தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள…
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு