படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
துபையில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பட்டியல்கரில் காலை முதலே மக்கள் திரண்டிருந்தனர்.
நமான்ஷ் ஸ்யாலின் மனைவியும் விங் கமாண்டருமான அஃப்ஷான் ஸ்யால், விமானப்படை சீருடையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவர் ராணுவ மரியாதையுடன் தனது கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன், விங் கமாண்டர் நமான்ஷின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் காங்க்ரா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
தந்தை கூறியது என்ன?
”நாடு ஒரு சிறந்த விமானியை இழந்துள்ளது, நான் என் இளம் மகனை இழந்துள்ளேன். அவர் வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்பு என்பதே இருந்ததில்லை; பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்திய அரசு தனது தரப்பில் விசாரணை நடத்துகிறது, அதே நேரத்தில் துபை அரசும் விசாரணை செய்து வருகிறது.” என்று நமான்ஷின் தந்தை ஜகன் நாத் ஸ்யால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
” எங்கள் விமானி நமான்ஷின் இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள வந்துள்ளேன். அவர் 12ஆம் வகுப்புக்குப் பிறகு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்ந்தார்,” என உள்ளூர்காரரான ராஜீவ் ஜம்வால் கூறுகிறார்.
“என்டிஏவில் அவர் சிறப்பாக செயல்பட்டார், மேலும் விமானப்படையிலும் அவர் சிறந்த விமானிகளில் ஒருவராக இருந்தார். அவருக்கு மரியாதை செலுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்,” என்று கூறினார்.
“எங்கள் கிராமத்தில் துக்க சூழல் நிலவுகிறது… மிகவும் மோசமாக உணர்கிறேன். வார்த்தைகள் இல்லை… இப்படி நடந்திருக்கக் கூடாது,” என நமான்ஷ் ஸ்யாலின் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, கணவர் நமான்ஷ் ஸ்யாலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மனைவி
விபத்து நடந்தது எப்படி?
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவின் போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.
துபையில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காணொளியில், விமானம் புறப்பட்ட உடனேயே தரையில் விழுந்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது தெரிகிறது.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவில் விமான சாகசத்தின்போது இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி தனது உயிரை இழந்தார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டில் தயாரித்த ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானம்தான் தேஜஸ்.
இந்த விமானம் வெகு தொலைவில் இருந்தே எதிரி விமானங்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடியது மற்றும் எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விமானத்தால், தன்னைவிட அதிக எடை கொண்ட சுகோய் விமானம் தாங்கக்கூடிய அதே அளவு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிப் பறக்க முடியும்.
2004 ஆம் ஆண்டிலிருந்து தேஜஸில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஞ்சின் F404-GE-IN20 பயன்படுத்தப்படுகிறது. தேஜஸ் மார்க் 1 வகை தற்போது F404 IN20 எஞ்சினைப் பயன்படுத்துகிறது.
தேஜஸ் போர் விமானங்கள் சுகோய் போர் விமானங்களை விட இலகுவானவை மற்றும் எட்டு முதல் ஒன்பது டன் வரை எடையைத் தாங்கக்கூடியவை.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உடன் 97 தேஜஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. அவற்றின் விநியோகம் 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், 2021 இல் இந்திய அரசு ஹெச்ஏஎல் உடன் 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விநியோகம் 2024 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஞ்சின்கள் பற்றாக்குறை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது.